[X] Close >

பார்க்க முடியாத கோணம்; யோசிக்க முடியாத காட்சி - நவீன கண்களான ட்ரோன் கேமரா!

The-Awesome-Benefits-of-Drone-Technology


குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக தலைமையில் இன்று நடைபெறும் பேரணிக்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை.ஆகவே திமுக கூட்டணி கட்சிகளின் பேரணிக்கு தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், ஜனநாயக நாட்டில் உரிமைக்காக நடத்தப்படும் போராட்டம் ஆர்பாட்டத்தை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை எனவும் போலீஸ் தடையை மீறி பேரணி நடைபெற்றால் அதை வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.


Advertisement

இதனையடுத்து முக்கிய சந்திப்பு, மாடிகளில் போலீசார் 110 கேமராக்கள் மூலமாக காட்சிகளை பதிவு செய்து கண்காணித்தனர். 50-க்கும் மேற்பட்ட சிசிடிவிக்கள் மூலமாகவும் கண்காணிப்பு நடைபெற்றது. காவல்துறை கண்களுக்கு தெரியாததை கூட இன்று கேமிராவின் கண்களுக்கு அகப்பட்டுவிடுகின்றன. சினிமா காட்சிகளில் மட்டுமே பார்க்க முடிந்த ட்ரோன் கேமராக்கள் மெல்லமெல்ல நகர்ந்து கல்யாண நிகழ்ச்சிகளில் கண்களை காட்டியது. இன்று அதையும் தாண்டி போராட்டக்களத்திற்கே வந்து சேர்ந்துள்ளது. ஒரு பெரிய சைஸ் வண்டினை போல சத்தமிட்டுக்கொண்டு பறக்கும் இந்த ட்ரோன் கேமரா பல களங்களில் உதவ ஆரம்பித்திருக்கிறது.


Advertisement

முக்கியமாக பாதுகாப்பு பயன்பாட்டில் ட்ரோன் கேமராவின் பங்கு ஏராளம். உள்ளூர் போலீஸ் முதல் எல்லையில் காவல் காக்கும் இந்திய ராணுவம் வரை ட்ரோன் கேமராக்களை பயன்படுத்தி வருகின்றன. பல வகைகளில் கிடைக்கும் ட்ரோன், பறக்கும் நேரம், பறக்கும் தூரம், கேமராவின் தரம் ஆகியவற்றை பொறுத்து மாறுபடுகிறது. குறிப்பாக பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும் ட்ரோன், அதிக நேரம், நீண்ட தூரம் பறக்கக்கூடியதாக உள்ளது. ஆட்கள் நுழைய முடியாத மலைப்பகுதிகள், காட்டுப்பகுதிகள் என இக்கட்டான நிலப்பரப்பில் எல்லாம் ட்ரோன் பறந்துகொண்டு மூன்றாம் கண்ணாக இருக்கிறது. லைவ் ஆக நாம் இருக்கும் இடத்தில் இருந்தே, வானில் இருந்து பார்க்கும் வசதியை கொடுப்பதால் ட்ரோன் கேமரா என்பது மிகப்பெரிய கண்டுபிடிப்பாகவே பார்க்கப்படுகிறது.

ரூ, 10 ஆயிரம் முதல் பல லட்சம் ரூபாய் வரை சந்தைகளில் கிடைக்கும் ட்ரோன் கேமராக்களை பலரும் வாங்கிக்கொண்டு தங்களது பிடித்த ஊர்களை இதுவரை பார்த்திராத கோணத்தில் படமெடுத்து ரசிக்கின்றனர். திருமணங்கள், சுற்றுலா, திரைப்படக்காட்சிகள், திருவிழாக்கள், பேரிடர்கள், போராட்டங்கள், பாதுகாப்பு என பலவற்றுக்கும் பயன்படும் ட்ரோன் கேமரா, கழுகு பார்வையில் நம் கண்களுக்கு புதிய கோணத்தில் காட்சிகளை காட்டுகிறது.


Advertisement

ட்ரோன் கேமராவை யார் வேண்டுமானாலும் வாங்கி பயன்படுத்தலாம் என்றாலும் சில கட்டுப்பாடுகளும் உண்டு. பாதுகாப்பு காரணங்களுக்காக அரசின் முக்கிய இடங்கள், முக்கிய வழிபாட்டு தளங்கள், முக்கிய தலைவர்களின் சந்திப்பு போன்ற நேரங்களில் கேமராக்களை பறக்கவிட போலீசார் தடை விதித்துள்ளனர்.

 

பறந்துகொண்டே கேமராவை தாங்கும் ட்ரோன் கான்செப்டில் ஆம்புலன்ஸ் தயாரிப்பு, உரம் தெளித்தல் போன்ற பல கண்டுபிடிப்புகளையும் இளைஞர்கள் முயற்சி செய்து வருகின்றன. உபர் போன்ற நிறுவனங்கள் ட்ரோன் மூலம் உணவை டெலிவரி செய்யும் முயற்சியை ஏற்கெனவே தொடங்கியும் விட்டது.

வீட்டுக்குள் அமர்ந்து கொண்டே கையில் ரிமோட் உதவியுடன் இந்த உலகத்தை கண்காணிக்கும் நிலைக்கு ட்ரோன் கேமரா தொடக்கப் புள்ளியாகிவிட்டது. இது எதிர்வரும் காலங்களில் இன்னும் மேம்பட்டு ஏராளமான வசதிகளை கொண்டு வரும் என்பதிலும் சந்தேகம் இல்லை.

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close