[X] Close >

குடியுரிமை திருத்தச் சட்டம்... எழுப்பப்படும் குற்றச்சாட்டும்...சொல்லப்படும் பதில்களும்..!

CAB--Allegations-and-answers

நாடு முழுவதும் தற்போது பெரும் சர்ச்சையாக்கப்பட்டு வரும் குடியுரிமை திருத்தச் சட்டம் - 2019 எந்த ஒரு பிரிவினரையும் அடக்கும் சட்டமோ அல்லது எந்த ஒரு பிரிவினருக்கும் எதிரான பாரபட்சமான வகையில் திருத்தம் செய்யப்பட்ட சட்டமோ அல்ல. இதை பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்த்துறை அமைச்சர் அமித் ஷா மீண்டும் மீண்டும் தெளிவு படுத்தி விட்டனர்.


Advertisement

உண்மையில் இது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய 3 நாடுகளில் இருந்தும் இந்தியாவில் தஞ்சம் புகுந்த துன்புறுத்தப்பட்ட மத சிறுபான்மையினருக்கான இயற்கைமயமாக்கல்(Citizenship by Naturalization) காலத்தை 11 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக குறைப்பதை நோக்கமாகக் கொண்டதுதான். ஆனால் இந்த திருத்தச் சட்டம் மீது உண்மைக்கு மாறான பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து மக்களிடையே இது குறித்த குழப்பத்தையும், பயத்தையும் ஏற்படுத்தி வருகிறார்கள்.

இந்த நேரத்தில், குடியுரிமை திருத்தச் சட்டம்- 2019 பற்றிய உண்மைகளை எடுத்துச் சொல்வதும், இதற்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை பொய் என நிரூபிப்பதும் இந்த கால கட்டத்தில் மிகவும் அவசியமாகும்.


Advertisement

குற்றச்சாட்டு 1: குடியுரிமை திருத்தச் சட்டம்- 2019 சமத்துவத்தைப் பற்றிப் பேசும் அரசியல் சட்டப் பிரிவு 14-ஐ மீறுகிறது என மீண்டும் மீண்டும் எதிர்கட்சியினரால் சொல்லப்படுகிறது. அதற்கான பதில் என்ன?

அரசியல் சட்டப்பிரிவு பிரிவு 14 சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் மற்றும் சட்டத்தின் படி அனைவருக்கும் சம பாதுகாப்பு ஆகிய உரிமைகளை நிறுவுகிறது. இதன்படி மதத்தின் அடிப்படையில் யாரும் பாகுபாடு காட்டப்படுவதில்லை என்பதை உறுதி செய்கிறது. ஆனால் இதில் ஒரு விதிவிலக்கும் உள்ளது.  அரசியல் சட்டப் பிரிவு 14 சமத்துவத்துக்கான இலட்சியத்தை சிறிது தளர்த்துவதன் மூலம் "நியாயமான வகைப்பாட்டிற்கு"ம்(Reasonable Classification) ஏற்பாடு செய்கிறது.

எனவே, வகைப்பாட்டிற்கான அளவுகோல்கள் நியாயமானதாக இருக்கும் பட்சத்தில் நேர்மறையான நோக்கத்தில் பாரபட்சம் மேற்கொள்ளவும் இந்த சட்டப்பிரிவு வழி வகை செய்கிறது. அரசியல் சட்டப் பிரிவு 14 தளர்த்தப்படுவதன் மூலம் செய்யப்படும் இந்த நியாயமான வகைப்பாடுதான் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு, இந்தியாவில் சிறுபான்மையினருக்கான சிறப்பு உரிமைகள் உட்பட  பல இலட்சியங்களை அடைய இது வழி வகை செய்கிறது.


Advertisement

உச்ச நீதிமன்றம் கூட இந்த கருத்தை மேற்கோள் காட்டிள்ளது. வி.ராம் கிருஷ்ணா டால்மியா மற்றும் நீதிபதி எஸ். ஆர். டெண்டோல்கர் இடையிலான வழக்கில் நீதிமன்றம் கூறுகையில்  ""14 வது பிரிவு வகைப்பாட்டை தடைசெய்தாலும், சட்டத்தின் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு நியாயமான வகைப்பாட்டை தடை செய்யவில்லை என்பது இந்த வழக்கின் மூலம் நன்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது" என்று கூறினார். இது "புத்திசாலித்தனமான வேறுபாடு"(intelligible differentia) என்ற கருத்தை முன்வைக்கிறது, இது குழுவிலிருந்து வெளியேறிய மற்றவர்களிடமிருந்ததோ, குழுவாக இருக்கும் நபர்களிடமிருந்தோ இது மனிதர்களை அல்லது விஷயங்களை வேறுபடுத்துகிறது. மேலும் கேள்விக்குரிய சட்டத்தால் அடையப்பட விரும்பும் பொருளுடன் ஒரு பகுத்தறிவு உறவைக் கொண்டுள்ளது.

மேலும், பாரிஸன்ஸ் அக்ரோடெக் (பி) லிமிடெட் மற்றும் யூனியன் ஆஃப் இந்தியா இடையிலான வழக்கில், "ஒரு லட்சியத்தை அடைவதற்கான நியாயமான காரணங்கள் இருக்கும் பட்சத்தில் புவியியல் வகைப்பாட்டை சமத்துவ சட்ட விதிகள்  தடை செய்யாது" என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதே போல், மேற்கண்ட மூன்று நாடுகளாலும் துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினர் ஒரு நியாயமான வகைப்பாட்டை உருவாக்குகிறார்கள், ஏனெனில் இவர்கள் அனைவரும் இஸ்லாமிய நாடுகளில் இருப்பதால் அமைப்பு ரீதியான தாக்குதல்கள், துன்புறுத்தல்கள் மற்றும் வகுப்புவாத வன்முறைகளை எதிர்கொள்கின்றனர்.

குற்றச்சாட்டு 2:  குடியுரிமை திருத்தச் சட்டம்- 2019 முஸ்லிம் விரோதமானது மற்றும் இது முஸ்லிம்களுக்கு எதிரான பாகுபாட்டை காட்டுகிறது

இந்த திருத்தத்தால் இந்திய முஸ்லிம்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படமாட்டார்கள். அவர்கள் இந்திய குடிமக்கள் என்ற முறையில் அனைத்து நன்மைகளையும் தொடர்ந்து அனுபவிப்பார்கள். இந்த மசோதா வெளிநாட்டு குடிமக்களாக அதே சமயம் இந்தியாவில் இருக்கும் அகதிகளைப் பற்றியது. முஸ்லிம்களாக இருக்கும் அகதிகளை இந்தியா ஏற்றுக்கொள்கிறது. வெளிநாட்டினர் சட்டம், 1946 ன் படி அவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கான தகுதி நிலையை தீர்மானிக்க உரிய  அமைப்புகளுக்கு அதிகாரங்கள் அளிக்கப்பட்டு அதற்கான செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 2015-ஆம் ஆண்டுக்கு முன்பாக நுழைந்த எந்தவொரு அகதியும் அவர்களின் மதத்தைப் பொருட்படுத்தாமல் மேற்குறிப்பிட்ட சட்ட விதிகளின் கீழ் ஆராயப்படுவார்கள் என்றும் இந்தியா அறிவித்துள்ளது.

இந்த பிரச்சினையை எழுப்பும் அரசியல் கட்சிகளிடம் எழுப்பப்படும் ஒரு வெளிப்படையான கேள்வி என்னவென்றால் - நீங்கள் இந்தியாவில் சிறுபான்மையினருக்கு ஆதரவானவர்களாகவும், இந்தியாவுக்குள் சிறுபான்மையினரின் பாதுகாப்பை நம்புவதாகவும் இருந்தால், அண்டை நாடுகளிலிருந்து வந்த துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினரை ஏன் எதிர்க்கிறீர்கள்?

குற்றச்சாட்டு 3: முஸ்லிம்களும்தான் துன்புறுத்தப்படுகிறார்கள், இந்த அடிப்படையில் அகமதியாக்களையும் ஷியாக்களையும் ஏன் அனுமதிக்கக்கூடாது?

துன்புறுத்தப்பட்ட மத சிறுபான்மையினருக்கும் இன வன்முறைக்கும் இடையே அடிப்படை வேறுபாடு உள்ளது.  அகமதியாக்களும் ஷியாக்களும்  குழுவாத மற்றும் இன வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள்.  இது மத துன்புறுத்தலுடன் எந்த தொடர்பும் இல்லை. எனவே, துன்புறுத்தப்பட்ட மத சிறுபான்மையினரான இந்துக்கள், பவுத்தர்கள், சீக்கியர்கள், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுடன் அவர்களை ஒப்பிட முடியாது.

மேலும், சட்டபூர்வமான பார்வையில், மத ரீதியான துன்புறுத்தல்களுடன் இன வன்முறை வழக்குகளையும் நாம் சேர்த்துப் சேர்த்தால், அதை "நியாயமான வகைப்பாடு" என்று அழைக்க முடியாது, அது அரசியல் சட்டத்தின் 14 வது பிரிவை மீறும் செயலாகும்.

குற்றச்சாட்டு 4: சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் (யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப்) கூட இந்த மசோதா தவறானது என்று நம்புகிறது

யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப் இன் இத்தகைய கருத்துக்கள் துல்லியமானவை இல்லை, மேலும் அந்த கருத்துகள் உறுதி செய்யப்படாத ஒன்று என நமது வெளி விவகார அமைச்சகம் தெளிவாகக் கூறியுள்ளது, மேலும் அதன் கடந்தகாலப் பதிவுகளில் இந்தியாவில் நிலவும் மத சுதந்திரம் குறித்து அதிக கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன.

மேலும், அண்டை நாடுகளில் மத சிறுபான்மையினரைத் துன்புறுத்துவது என்று நாம் எடுத்துக் கொண்ட விவாதத்தின் தலைப்பின்படி பார்க்கும்போது யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப்- வெளியிட்ட இதுபோன்ற கடுமையான “கவலை” நாம் எடுத்துக் கொண்ட நிலைக்கு பொருத்தமானது இல்லை. அதே சமயம்  நாட்டின் உள்துறை அமைச்சர் மீது தடைகள் கோரும் எந்தவொரு பரபரப்பான அறிக்கைகளையும் யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப் வெளியிடவில்லை என்பதையும் நாம் பார்க்க வேண்டும். இந்தியாவும் இந்தியர்களும் இது போன்ற  அமைப்புகளின் வார்த்தையை நற்செய்தி என்றோ அல்லது உண்மை என்றோ கருதக்கூடாது.

குற்றச்சாட்டு 5: இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தால் வடகிழக்கு இந்தியா உள்ளூர் அல்லாத அகதிகளின் வருகையால்  பாதிக்கப்படும்

வடகிழக்கு மக்களின் தேவைகளை அரசாங்கம் முழுமையாக உணர்ந்துள்ளது. குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவின் ஆறாவது அட்டவணையின் படி தன்னாட்சி பெற்ற பழங்குடியினரின் பகுதிகளுக்கு இந்த மசோதா பொருந்தாது, இதற்கான  ஒரு குறிப்பிட்ட ஏற்பாட்டை இந்த மசோதா கொண்டுள்ளது. இதன் பொருள் அசாம், மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரம் ஆகிய பகுதிகள் இந்த ஏற்பாட்டின் கீழ் வராது.

மேலும், அரசு அனுமதியை தவிர்த்து வெளியாட்கள் நிரந்தரமாக உள்ளே வர அனுமதி இல்லாத பாதுகாப்பு அம்சங்கள் உள்ள மாநிலங்களான அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து மற்றும் மிசோரம் மாநிலங்களில் வன்முறையால் பாதிக்கப்பட்ட சிறுபான்மை அகதிகளை குடியமர்த்த முடியாது. 

மேலும் அரசியல் சட்டப்பிரிவு 371 வழங்கும் சிறப்பு உரிமைகள் பெற்ற வடகிழக்கு மாநிலங்களின் உரிமைகள் எதுவும்  குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவால் பாதிக்கப்படாது. குறிப்பாக  சட்டங்களின் பயன்பாடு, நில உரிமைகள், உள்ளாட்சி அமைப்புகளின் உரிமைகள், உள்ளூர் பிரதிநிதித்துவம் போன்ற சிறப்பு உரிமைகள் இதில் அடங்கும்.

குற்றச்சாட்டு 6: குடியுரிமை பிரச்சினை குறித்து முடிவு செய்ய பாராளுமன்றத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை

குடியுரிமை குறித்து அரசியலமைப்பு சட்டம்தான் தீர்மானிக்கும் என்பதும்,   பாராளுமன்றத்திற்கு இந்த விவகாரத்தில் எந்த அதிகாரமும் இல்லை என்பதும் ஒரு தவறான அனுமானமாகும். எதுவுமே யதார்த்தத்திலிருந்து வெகு தொலைவில் இருக்க முடியாது. “சட்டப்படி குடியுரிமை பெறுவதற்கான உரிமையை நாடாளுமன்றம் முறைப்படுத்துகிறது. குடியுரிமையைப் பெறுதல் மற்றும் ரத்து செய்தல்  தொடர்பான விஷயங்கள் தொடர்பாக எந்தவொரு ஏற்பாட்டையும் செய்ய இந்த பகுதியில் கூறப்பட்ட  விதிகள் எதுவும் பாராளுமன்றத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டதாகும்" என அரசியலமைப்பின் 11 வது பிரிவு திட்டவட்டமாக கூறுகிறது.

இந்திய அரசியலமைப்பின் வரைவுக் குழுவின் தலைவரான பி.ஆர்.அம்பேத்கர், அரசியலமைப்புச் சபையில் ஒரு உரையில் கூறியதாவது: “இந்த குறிப்பிட்ட சட்டம் (சட்டம்  5, தற்போதைய பிரிவு 11) குடியுரிமைக்கான நிரந்தர சட்டத்தை வகுக்க வேண்டும். இந்தப் பணி நாடாளுமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது” என்றார்.

எனவே தர்க்கரீதியாக சிந்திப்போம். குடியுரிமை என்பது ஒரு சாதாரண பிரச்சினை அல்ல. பொறுப்புடன் அணுக வேண்டிய ஒரு சக்தி வாய்ந்த ஒரு பிரச்சினை. உலகத்தின் தன்மை மாறிவரும் சூழ்நிலையில் ஒரு வலுவான குடியுரிமைக் கொள்கை தேவை. 1949-இல் வடிவமைக்கப்பட்ட ஒரு அரசியலமைப்பில், 21-ஆம் நூற்றாண்டின் சிக்கல்களைக் கையாள்வதற்கான பெரிய தொலைநோக்கு இருக்க முடியுமா? எனவே, ஒரு எளிய பெரும்பான்மை ஆதரவுடன் திருத்தங்களை அறிமுகப்படுத்துவது எளிதானது என்பதற்காகவே  சட்டத்தை திருத்தும் இந்த அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டு 7: இலங்கை தமிழர்கள் மற்றும் திபெத்தியர்கள் போன்ற பிற அகதிகளுக்கு இந்த சட்ட திருத்தத்தின் கீழ் என்ன நன்மை கிடைக்கும் ?

மற்ற அகதிகள் தற்போதுள்ள வெளிநாட்டினர் சட்டம் 1946 போன்ற சட்டங்களின் கீழ் கையாளப்படுவார்கள் , மேற்கண்ட சட்டத்தால்  நிறுவப்பட்ட செயல்முறை அவர்கள் விஷயத்தில் பின்பற்றப்படும் என்பதில் அரசாங்கம் தெளிவாக உள்ளது.  குடியுரிமை சட்டம் குறிப்பாக துன்புறுத்தப்பட்ட மத சிறுபான்மையினர் மீது கவனம் செலுத்துகிறது. இதற்காக மற்ற வகை அகதிகள் புறக்கணிக்கப்படுவார்கள் என்று அர்த்தமல்ல.

-SG சூர்யா (பாஜக செய்தித் தொடர்பாளர்)

இக்கட்டுரை SG சூர்யாவின் சொந்தக் கருத்து. புதிய தலைமுறையின் கருத்து அல்ல.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close