தி.நகர் சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் சுவர் இடிந்தது

T-Nagar-Fire--Wall-of-Chennai-silks-falls

தீ விபத்து ஏற்பட்ட தி.நகர் சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் முன்பக்க பகுதியில் இருந்து சுவர் ஒன்று இடிந்து விழுந்தது. 


Advertisement

உஸ்மான் சாலையில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் காலை சுமார் 4.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. 16 மணி நேரத்துக்கும் மேலாக தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ச்சியாக தீ எரிந்து வருவதால், வெப்பம் தாங்காமால் சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் முன்பக்கத்தில் மேல்தளத்தில் இருந்த சுவர் ஒன்று இடிந்து விழுந்தது.  ஏழு மாடிகள் கொண்ட கட்டடத்தின் 2ஆவது தளத்தின் முன்பக்க சுவரே இடிந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது. சுமார் 20 அடி நீளமுள்ள அந்த சுவர் இடிந்து சாலையில் விழுந்தது. மேலும், அதிகப்படியான வெப்பத்தின் காரணமாக கட்டடத்தில் உள்ள கண்ணாடிகளும் வெடித்து சிதறின. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், ஜெனரேட்டர்கள் உதவியுடன் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு தீயணைக்கும் பணி நடந்து வருகிறது. 

கட்டடத்தின் அமைப்பு காரணமாக தீயை அணைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கட்டடத்தில் இருந்து அதிகப்படியான கரும்புகை வெளிவருவதால், தீப்பிடித்த பகுதியைக் கண்டறிவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  தீயணைக்கும் பணியில் தொய்வு ஏற்படாமல் இருக்க தீயணைப்பு வீரர்கள் ஷிப்டு முறையில் பணியாற்ற உள்ளனர். தீயணைப்பு வாகனங்கள் மட்டுமல்லாது, மாநகராட்சி லாரிகளிலும்  தீயை அணைக்க தண்ணீர் கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் உஸ்மான் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆபத்தான பகுதி என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், அந்த பகுதிக்கு பொதுமக்கள் வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement