[X] Close >

உடல்நிலையில் கவனம் தேவை எடிட்டர்களே! வேலைப் பளுவால் தொடரும் இளம்வயது உயிரிழப்புகள் 

Housefull-4-and-Race-3-sound-editor-Nimish-Pilankar-dies-at-29

பாலிவுட் திரைத்துறையைச் சேர்ந்த சவுண்ட் எடிட்டரான நிமிஷ் பிலாங்கர், தன்னுடைய 29-தாவது வயதில் மூளை ரத்தக்கசிவு காரணமாக மரணமடைந்தார். அதிக வேலைபளுவே உயிரிழப்புக்கு காரணம் என கூறப்படுகிறது.


Advertisement

சல்மான் கான் நடித்த ‘ரேஸ்3’ திரைப்படம் மூலம் பாலிவுட்டில் சவுண்ட் எடிட்டராக அறிமுகம் ஆனவர் எடிட்டர் நிமிஷ் பிலாங்கர். இவர் ‘ஹவுஸ்புல்4’, ‘பைபாஸ்ரோட்’ உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் இவர் மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக உயிரிழந்தார். அதிக வேளைப்பளுவே நிமிஷ் உயிரிழப்புக்கு காரணம் என பாலிவுட் வட்டாரங்கள் கவலை தெரிவித்துள்ளன.

இரவு பகல் பாராமல் உழைப்பது அதிக ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தி உயிரிழப்பு வரை கொண்டு செல்வதாகவும், பணி முக்கியம் என்றாலும் தொழில்நுட்ப கலைஞர்கள் உடல்நிலையில் கவனம் கொள்ள வேண்டும் என்றும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.


Advertisement

(நிமிஷ் பிலாங்கர்)

கடந்த 2015-ம் ஆண்டு தமிழ் சினிமாவின் முன்னணி எடிட்டரான கிஷோரும் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு உயிரிழந்தார். அப்போது அவருக்கு 38 வயது. தொடர்ந்து பல படங்களுக்கு தொடர்ச்சியாக ஓய்வின்றி உழைத்ததே கிஷோரை மரணம் வரை இழுத்துச்சென்றதாக பலரும் கவலை தெரிவித்தனர். ஆனால் கிஷோரின் இறப்புக்கு பின் தொழில்நுட்பக்கலைஞர்களின் உடல்நிலை எந்த அளவுக்கு கவனத்தில் கொள்ளப்பட்டது என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகவே இருக்கிறது.


Advertisement

நாம் பார்க்கும் சினிமாவில் நடிகர்கள், நடிகைகள், இயக்குநர், கேமராமேன் என்பவர்களைத் தாண்டி எத்தனையோ தொழில் நுட்பக்கலைஞர்கள் பணியாற்றுகிறார்கள். அதில் முக்கியமானவர்கள் என்றால் எடிட்டர்கள். எடுக்கப்படும் காட்சிகளை அழகாக தொகுத்து ஒவ்வொரு ஃபிரேமாக நமக்கு கோர்த்து கொடுப்பவர்கள் எடிட்டர்கள் தான்.

(கிஷோர்)

சினிமா மட்டுமின்றி, தொலைக்காட்சி தொடர்கள், பொழுதுபோக்கு வீடியோக்கள், செய்தி தொலைக்காட்சிகள் என அனைத்திலும் எடிட்டர்களின் உழைப்பு அதிகம். வீடியோக்கள் நம் கண் முன்னே காட்சிபோல வர வேண்டும் என்றால் இந்த எடிட்டர்களின் கைவண்ணம் தேவை. வீடியோ எடிட்டர், ஆடியோ எடிட்டர் என இவர்கள் வேலைக்கு ஏற்ப பெயர் கொண்டு, உழைத்துக்கொண்டு இருக்கிறார்கள். 

வீடியோவை பார்க்க வேண்டும், அதே நேரத்தில் அதற்கு சரியான ஆடியோவையும் கேட்க வேண்டும் என கண், காது, மூளை என அனைத்து உறுப்புகளும் துரிதமாக செயல்படும் வேலை என்பதால் எடிட்டர் வேலையில் பளு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

நேரம் எடுத்து அமைதியாக செய்தால் பிரச்னை இல்லை என்றும், துரிதமாக சில தேவைகள் இருக்கும் பட்சத்தில் பரபரப்பாக எடிட்டர்கள் வேலை பார்ப்பதால் அவர்களுக்கு உடல்நிலை பெரியளவில் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. எடிட்டர்களின் பரபரப்பான வேலை அவர்களுக்கு அதிக ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தி அதனால் மூளையில் ரத்தக்கசிவு என்ற உச்சபட்ச நிலை வரை கொண்டு சென்று விடுவதாக மருத்துவர்கள் விளக்கம் அளிக்கின்றனர் தெரிவிக்கின்றனர்.

மேலும், ''அவசரம் காட்டாமல் சரியான நேர திட்டமிடலுடன் வேலை செய்ய வேண்டும். ஒரே இடத்தில் அமர்ந்து நீண்ட நேரம் வேலை செய்யாமல் அவ்வப்போது எழுந்து சிறிது நேரம் ஓய்வு எடுத்துக்கொள்ளலாம். நீண்ட நேரம் மானிட்டர்களை பார்க்காமல் இடையிடையே கண்ணுக்கு ஓய்வு அளிக்கும் விதமாக பச்சை நிறம் தொடர்பாக பொருட்களை பார்க்கலாம். இரவு பகல் பார்க்காமல் வேலை செய்யாமல், சரியான தூக்கம், சரியான நேரத்தில் சாப்பாடு என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

உடற்பயிற்சி, தியானம், மனதுக்கு பிடித்த வேலைகளை செய்வது, பயணம் செய்து மனதை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்வது, நண்பர்கள், குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பது போன்ற செயல்கள் நம்மையும் நம் மனதையும் ஆரோக்யமாக வைத்திருக்கும் என்றும் மருத்துவர்கள் அறிவுரை கூறுகின்றனர்.

செய்யும் வேலை சரியாக பயணிக்க வேண்டுமென்றால் உடல்நிலையும், மனநிலையும் நமக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வேலையில் காட்டும் அக்கறையை நம் உடல்நிலையிலும் காட்டவேண்டும் என்றும், நாம் உழைப்பதே நமக்காகவும், நம் குடும்பத்திற்காகவும் என்பதை உணர்ந்து உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டுமென்பதே மருத்துவர்களின் அறிவுரையாகவும் உள்ளது.


 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close