முதல்வர் வேட்பாளர் யார் ? - அதிமுகவில் புதிய கலகமா? ராஜதந்திரமா?

முதல்வர் வேட்பாளர் யார் ? - அதிமுகவில் புதிய கலகமா? ராஜதந்திரமா?
முதல்வர் வேட்பாளர் யார் ? -  அதிமுகவில் புதிய கலகமா? ராஜதந்திரமா?

சட்டசபை தேர்தலே திமுக, அதிமுகவுக்கு இலக்கு:

உள்ளாட்சி தேர்தல் ஏன் திமுக, அதிமுக ஆகிய பிரதான கட்சிகளுக்கு முக்கியம் என்றால், அடுத்த ஓராண்டில் சட்டசபை தேர்தல் வரவுள்ளது. அதனால்தான், இந்த உள்ளாட்சி தேர்தலை மிகவும் கவனமாக கடந்துவிடவேண்டும் என்பதில் இருகட்சிகளும் உறுதியாக இருக்கின்றன. இரண்டு கட்சிகளின் ஒட்டுமொத்த இலக்கும் 2021 சட்டசபை தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதுதான். 

கட்சிகளின் முதல்வர் வேட்பாளர் யார்? யார்?

2021 சட்டசபை தேர்தலில் திமுக தரப்பில் முதல்வர் வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். ஆனால், அதிமுகவை பொருத்தமட்டில் ஒருவித சிக்கல் இருப்பதாகவே சமீபத்திய நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

அதிமுகவில் முதல்வர் பழனிசாமி வலிமைமிக்க தலைவராக உருவெடுத்து வருவதாகவும், கட்சியை சிறப்பாக வழிநடத்தி செல்வதாகவும் அவர்களது கட்சி தலைவர்களே நற்சான்றிதழ்களை வழங்கி வந்தனர். ஓபிஎஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்றாலும் ஈபிஎஸ் கைதான் கட்சி மற்றும் ஆட்சியிலும் ஓங்கி இருப்பதாகவே அரசியல் விமர்சகர்கள் கூறிவந்தனர். அதனால், முதல்வர் வேட்பாளருக்கு பழனிசாமியை தவிர வேறு யாரும் போட்டியாக இருக்கமாட்டார்கள் என்றே எல்லோராலும் பார்க்கப்பட்டது. 

விவாதத்தை கிளப்பிய ஓபிஎஸ்

அதிமுக சார்பில் சமீபத்தில் புதிதாக ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. அதிமுகவில் யார் முதலமைச்சர் வேட்பாளர் என்பதுதான் அது. முதலில் இந்த விவாதத்தை கிளப்பியவர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தான். செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு அளித்த பதிலில், முதல்வர் வேட்பாளர் யார் என்பதை நிர்வாகிகள் கூடிதான் முடிவெடுப்போம் என்று தெரிவித்தார். அதுநாள் வரை எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளராக இருப்பார், ஒற்றைத்தலைமை உருவாக்கிவிட்டார் என்று பேசப்பட்டு வந்த நிலையில், இந்த கருத்து புதிய விவாதத்தை கிளப்பியது.

அதிமுகவில் தர்ம யுத்தத்தை நடத்தியவர் ஓ.பன்னீர்செல்வம். பின்னர் ஒருவழியாக சமாதானமாகி துணை முதல்வர் பதவியையும் பெற்றுக் கொண்டார். ஏற்கனவே இரண்டு முறை முதல்வர் நாற்காலியில் அமர்ந்தவர் அவர். அதனால், மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமர வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருக்க வாய்ப்பு அதிகம். அதனால், தேர்தல் நெருங்கும் போது தன்னை முதல்வர் வேட்பாளராக முன்னிருத்த அவர் முனையலாம் என்ற கருத்து அவரது பேட்டியின் மூலம் வருகிறது. 

அதிர்ச்சி அளித்த அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி:

ஓபிஎஸ் பேசிய அந்த கருத்தினை விட, அதிமுகவில் முதல்வர் வேட்பாளருக்காக போட்டி இருப்பதை உறுதி செய்தது அமைச்சர் ஜெயக்குமாரின் பேட்டிதான். ஆளும் கட்சியின் குரலாக, முதல்வரின் குரலாக பார்க்கப்பட்டவர் ஜெயக்குமார்.

ஆனால், இந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ‘அதிமுகவில் யார் முதல்வர் வேட்பாளர் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆலோசித்த பின்னரே கூற முடியும்’ என்று கூறினார். ஜெயக்குமார் இப்படி பேசியதுதான் எல்லோருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இதனால், முதல்வர் பழனிசாமியே முதல்வர் வேட்பாளராக இருக்க வேண்டும் என்பதில் சிலர் தயக்கம் காட்டுகிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

முதல்வர் வேட்பாளர் - மழுப்பிய எடப்பாடி பழனிசாமி

ஓபிஎஸ் மற்றும் ஜெயக்குமாரின் கருத்து அதிமுகவில் முதல்வர் வேட்பாளருக்கு போட்டியும், சர்ச்சைகளும் இருப்பது வெளிச்சம் போட்டு காட்டியது. இத்தகைய சூழலில் இந்தக் கருத்தினை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது முதல்வர் பழனிசாமியின் இன்றைய பேச்சு. 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் உங்களை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி அதிமுக தேர்தலை சந்திக்க உள்ளதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, “இன்னும் தேர்தலே அறிவிக்கப்படவில்லை. அதற்குள் உங்கள் கற்பனையான கேள்விக்கெல்லாம் எப்படி பதில் அளிக்க முடியும். எங்களைப் பொறுத்தவரை அதிமுவைச் சேர்ந்தவர் தமிழகத்தின் முதலமைச்சராக 2021 தேர்தலில் வருவார்” என தெரிவித்துள்ளார். 

இரட்டை இலை சின்னம் தான் சிக்கலா?:

2021 சட்டசபை தேர்தலில் அதிமுகவிற்கு ஒரு சவால் நிச்சயம் உள்ளது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருந்த காலத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தவரே முதல்வர் வேட்பாளராக இருந்தனர். ஆனால், தற்போது பொதுச் செயலாளர் பதவி இல்லை.

அதனால், தற்போதைய நிலையே வேறு. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் பல்வேறு சவால்களை சந்தித்து அதிமுக தற்போதுதான் மூச்சு வாங்கியிருக்கிறது. தற்போதைய நிலையில், ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் முறையே ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக உள்ளனர். இரட்டை இலை சின்னத்தை பொருத்தவரை இருவரது கையெழுத்தும் கட்டாயம் தேவை. இதுதான் ஈபிஎஸ்-க்கும் நெருக்கடியாக இருக்கிறதா என்ற ஐயம் எழுகிறது. 

எப்படி இருப்பினும், ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் வரும் சட்டசபை தேர்தல் என்பதால் நிச்சயம் இந்த தேர்தலில் அதிமுக வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஏனெனில், அதிகாரத்தில் உள்ளதால் தான் அதிமுக நிலை கொண்டிருக்கிறது என்ற விமர்சனத்திற்கு அவர்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டியுள்ளது. அதனால், முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சைகள் எதுவும் எழாமலே பார்த்துக் கொள்வது அதிமுகவுக்கு நன்று.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com