உங்களிடம் ஸ்மார்ட்போன் இருக்கிறதா?: இந்த நோய் உங்களுக்கும் இருக்கலாம்; கவனம் தேவை!

Impact-of-Excessive-Mobile-Phone-Usage-on-Human

தகவல் பரிமாற்றத்துக்கான கண்டுபிடிப்பாக உருவாக்கப்பட்ட செல்போன், இன்று எல்லாமுமாகவே மாறிவிட்டது. சமூக வலைதளங்கள், வங்கி பரிவர்த்தனைகள் என செல்போன் இல்லாமல் நம்முடைய ஒரு நாளைக் கடப்பது கடினம்தான். என்னிடம் செல்போன் இல்லை என்று சொல்பவர்கள் அதிசயமாய் பார்க்கப்படுகிறார்கள். பள்ளி, கல்லூரிகளின் முக்கிய குறிப்புகள் எல்லாம் வாட்ஸ் அப் குரூப்பில் பறந்து கொண்டிருக்கின்றன.


Advertisement

பல வேலைகளின் ஆரம்ப புள்ளியே செல்போன் தான். இப்படி செல்போனை நம்பி நாம் ஓடத்தொடங்கி நீண்ட நாட்கள் ஆகிறது. ஒரு கண்டுபிடிப்பு வேலையை எளிதாக்கி நம்மை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச்செல்வது ஆரோக்யமானதுதான். அதே நேரத்தில் செல்போன் பயன்பாட்டால் நமக்கே தெரியாமல் நம்மை பல வியாதிகள் நெருங்கிக் கொண்டு இருக்கின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை.


Advertisement

தனியாக இருந்தாலோ அல்லது நண்பர்கள் கூடி சேர்ந்தாலோ உடனடியாக செல்போனை எடுத்து செல்ஃபி தட்டிவிட வேண்டும் என்பது இன்று பலரின் வாடிக்கையாகி விட்டது. புகைப்படம் நல்லதொரு நினைவு தான். அதற்காக ஒரு நாளைக்கு 10 - 20 செல்ஃபி எடுப்பது ஆரோக்கியமானது அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஒரு கட்டத்தில் செல்ஃபிக்கு நீங்கள் அடிமையாகவே ஆகிவிடுவீர்கள் என அதிர்ச்சி அளிக்கும் அவர்கள், அதனை சமூக வலைதளங்களில் பகிர வேண்டும், பலரும் அதற்கு லைக்கிட வேண்டும் என தொடர் மன நோயாகவும் வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள். இத்தகைய தீவிர செல்ஃபி மனப்பான்மையை செல்பிடிஸ் என்கிறார்கள். 

ஸ்மார்ட் போன்களை ஸ்குரோல் செய்ய நாம் அதிகம் ஆட்காட்டி விரலையும், கட்டை விரலையும் பயன்படுத்துகிறோம். இது தொடர்ந்து செய்யப்படுவதால் விரலின் முனைப்பகுதிகளிலும் முன்கையிலும் வலி உண்டாவதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு 'மொபைல் எல்போ' என்றும் மருத்துவர்கள் பெயரிட்டுள்ளனர். நீண்ட டெக்ஸ்ட்களை டைப் செய்து அனுப்பாமல் வாய்ஸ் நோட் பயன்படுத்துவது நல்லது என்றும், தேவையில்லாமல் சமூக வலைதளங்களுக்குள் புகுந்து மேலும் கீழும் ஸ்குரோல் செய்துகொண்டு இருப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் சில குறிப்புகளையும் மருத்துவர்கள் கொடுத்துள்ளனர்.


Advertisement

வீடியோக்கள் பார்ப்பது, சமூக வலைதளம் பயன்படுத்துவது, கேம் விளையாடுவது போன்ற பல காரணங்களுக்காக நீண்ட நேரம் தலையை சாய்த்துக் கொள்கிறார்கள் செல்போன் பயனாளர்கள். இதனால் கழுத்து தசையில் வலி ஏற்பட்டு 60 பவுண்ட் அழுத்தம் ஏற்படுகிறது. இதற்கு டெக்ஸ்ட் நெக் என்று பெயர். நீண்ட நேர செல்போன் பயன்பாட்டை குறைத்துக்கொள்வது தான் இதற்கு தீர்வு என மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

செல்போனில் அதிக ஆபத்தாக பார்க்கப்படும் வீடியோ கேமில் உலகளவில் 100கோடிக்கும் அதிகமானவர்கள் மூழ்கிக் கிடக்கிறார்கள். பொழுதுபோக்கு என்ற நிலையை தாண்டி உயிரை பறிக்கும் நிலையையும் ஆன்லைன் விளையாட்டுகள் அடைந்துவிட்டன. செல்போன் விளையாட்டுகளில் மூழ்கிக்கிடப்பவர்கள் 'கேமிங் டிஸ்ஸார்டர்' என்ற ஆபத்தில் இருப்பவர்கள் என்கிறது சுகாதார அமைப்பு. இவர்கள் பொறுப்பின்மை, தூக்கமின்மை, சலிப்பு, உடல் சோர்பு என உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிப்படைகின்றனர். 


 
மற்ற வியாதிகளை விடவும் ஆபத்தானதாக இருக்கிறது நோமோபோபியா. அடிக்கடி செல்போனை பயன்படுத்திக்கொண்டு இருக்கும் ஒரு நபர் ஏதோ வேலை காரணமாகவோ அல்லது சார்ஜ் இல்லாமல் செல்போன் ஆஃப் ஆகிவிட்டாலோ செல்போனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் அவர்கள் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் எதையோ இழந்ததை போல ஆகிறார்கள். இதற்குத்தான் நோமோபோபியா என்று பெயர். பல இளைஞர்கள்  நோமோபோபியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வாரம் ஒருநாளாவது செல்போன் இல்லாமல் பழகிக்கொள்ள வேண்டும். புத்தகங்கள் படிப்பது, விளையாடுவது, நண்பர்களுடன் நேரம் செலவழிப்பது போன்ற மற்ற செயல்களில் மனதை செலுத்தி செல்போன் எண்ணத்தை குறைத்துக்கொள்ளலாம் என்பது மருத்துவர்களின் அறிவுரையாக இருக்கிறது. 

எந்த ஒரு கண்டுபிடிப்பாக இருந்தாலும் நன்மை, தீமை உள்ளடக்கியதாகவே இருக்கும் என்பது நியதி. அதனை பயன்படுத்தும் நாம் தான் அதனை சரியான விதத்தில் கையாண்டு நமக்கு சாதமாக்கிக்கொள்ள வேண்டும். சிறிது எச்சரிக்கையாக நாம் இருந்தால், நமக்கே தெரியாமல் நம்மை அணுகும் புதிய வியாதிகளை தூர விரட்டலாம்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement