JUST IN

கனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுகிறார் தமிழிசை..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதனிடையே கனிமொழியின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி, உயர்நீதிமன்றத்தில் தமிழிசை வழக்குத் தொடர்ந்திருந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில்,  ’சிங்கப்பூர் பிரஜையான கனிமொழியின் கணவர் அரவிந்தனின் வருமானத்தைப் பற்றி வேட்பு மனுவில் குறிப்பிடவில்லை, அதை மறைத்தது தவறு. வேட்புமனுக்கள் பரிசீலனையின்போது, கனிமொழியின் வேட்புமனு குறித்து எனது தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. அதைத் தேர்தல் அதிகாரி ஏற்கவில்லை. இதனால் கனிமொழியின் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும்’ என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கனிமொழிக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. 

இதனிடையே தெலங்கானா ஆளுநராக தமிழிசை பதவியேற்றார். இந்நிலையில் தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தெலங்கானா ஆளுநராக பதவியேற்றுள்ளதால் வழக்கை தொடர்ந்து நடத்த விரும்பவில்லை என தமிழிசை தரப்பில் கூறப்பட்டுள்ளது. வழக்கை தொடர்ந்து நடத்துவதா அல்லது வேண்டாமா என்பது பற்றி அக்டோபர் 14-ஆம் தேதி முடிவு செய்யப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

Advertisement: