இன்றைய முக்கிய செய்திகள்..!

Today-important-news

மின்சார வாகனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. மின்சார வாகனங்கள், அதற்கான உதிரிபாகங்கள் மற்றும் பேட்டரிகள், பேட்டரி சார்ஜிங் உபகரணங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்பவர்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 50 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்து, குறைந்தபட்சம் 50 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. 


Advertisement

இந்தி மொழியைத் திணிக்கும் மத்திய அரசின் முயற்சிகளைக் கண்டித்து, வரும் 20 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுமென திமுக அறிவித்துள்ளது. சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில், கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உயர்நிலை செயல்திட்டக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, டிகேஎஸ் இளங்கோவன், ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், இந்தியாவை இந்தி இணைக்கும் என்ற அமித்ஷாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் ‌தன்னையும் பிரிக்க முடியாது என துணை மு‌தலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரே மொழி கொள்கை, 5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அறிவிப்பு குறித்த கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.


Advertisement

தமிழகத்தில் பள்ளிகளுக்கு காலாண்டுத் தேர்வுகள் முடிந்து, வருகிற 23ஆம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை விடுமுறை என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த ஆண்டுக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, பள்ளிகளில் காந்திய சிந்தனை சார்ந்த நிகழ்ச்சி நடத்தப்படும் என ஒருங்கிணைந்த கல்வித் திட்ட இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பினார். இதையடுத்து, காலாண்டு விடுமுறை நாட்களில் இந்நிகழ்ச்சி குறித்த சுற்றறிக்கை வெளியானதால், விடுமுறை இருக்குமா என சந்தேகம் எழுந்தது. இதையடுத்து விளக்கம் அளித்துள்ள பள்ளிக் கல்வித் துறை, காலாண்டு விடுமுறையில் எந்த மாற்றமும் இல்லை என அறிவித்துள்ளது. 

மொழிப் பாடங்களுக்கு ஒரே தாளாக தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டதையடுத்து, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 10 வகுப்பு தேர்வில் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கு இரண்‌டு தாள்களாக தேர்வு நடத்தப்பட்டுவந்த நிலையில், இனி ஒரே தாளாக தேர்வு நடத்தப்படும் என கடந்த 13ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement