[X] Close

திமுக தலைவராக ஓராண்டு பயணம்..! - சாதித்தாரா ஸ்டாலின்?

Subscribe
MK-Stalin-completed-One-year-in-DMK-Leader-Posting

திமுக தலைவராக இருந்த கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த நேரத்தில் அக்கட்சியின் செயல் தலைவராக 2017ம் ஆண்டு ஜனவரில் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். ஆட்சியைப் பொறுத்தவரை சென்னை மாநகராட்சி மேயர், சட்டமன்ற உறுப்பினர், உள்ளாட்சித்துறை அமைச்சர், துணை முதல்வர் என தமிழக அரசில் முக்கியமான பெரிய பதவிகளை ஸ்டாலின் வகித்துவிட்டார். அதேபோல், கட்சியைப் பொறுத்தவரை திமுக வட்டப் பிரதிநிதி, மாமன்ற பிரதிநிதி, இளைஞர் அணி செயலாளர், துணை பொதுச் செயலாளர், பொருளாளர் என முக்கியமான பொறுப்புகளை வகித்துவிட்டார். எத்தனை வெற்றிகள் பெற்றிருந்தாலும், பதவிகளை வகித்திருந்தாலும் செயல் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் தன்னை மீண்டும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் ஸ்டாலின்.


Advertisement

ஆனால், செயல் தலைவராக அவர் இருந்த காலகட்டம் வெற்றிகரமாக முடியவில்லை. திமுகவின் செயல் தலைவராக 2017ஆம் ஆண்டு ஜனவரியில் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் நடைபெற்ற முதல் தேர்தல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல். ஆனால், அந்த தேர்தலில் திமுக தனது டெபாசிட்டை இழந்தது. ஸ்டாலின் சந்தித்த முதல் தேர்தலிலே படுதோல்வி. அப்போது, ஸ்டாலின் மீது கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. எதிர்க்கட்சி தலைவராக அவர் சிறப்பாக செயல்பட்டு இருந்தாலும், தேர்தல் வெற்றிதானே முக்கியமான அளவுகோல்.


Advertisement

செயல் தலைவராக இருந்த காலம் முழுவதும் தன்னை நிரூபித்துக் கொள்வதற்கு ஸ்டாலினுக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. செயல் தலைவராக எந்தவொரு தேர்தல் வெற்றியையும் பெறாமலே அவரது காலம் சென்றுவிட்டது. கருணாநிதி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி மரணமடைந்த பின்னர், அந்த மாதம் 28ம் தேதி திமுகவின் தலைவராக பொறுப்பேற்றார் ஸ்டாலின். தற்போது, அவர் தலைவராக பொறுப்பேற்று ஓராண்டு இன்றுடன் நிறைவடைந்துள்ளது.


Advertisement

தலைவராக ஸ்டாலின் சாதனைகள்:

தன்னை நிரூபிக்க அவர் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த தருணமும் இந்த ஓராண்டில் அவருக்கு கிடைத்தது. ஆம், 2019ஆம் ஆண்டு மக்களவை பொதுத் தேர்தல்தான் அது. கூட்டணி அமைப்பதில் இருந்து பிரச்சாரத்தை கச்சிதமாக முடிப்பது வரை அனைத்தையும் சிறப்பாக செய்து முடித்தார். மக்களவை தேர்தலில் அவருக்கு மாபெரும் வெற்றி கிட்டியது. தேனியை தவிர்த்து தேர்தல் நடைபெற்ற 38 தொகுதிகளில் 36இல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றது. 

வெற்றி என்றால் அது சாதாரண வெற்றி அல்ல. 3 லட்சம், 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். புதுச்சேரியிலும் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றது. இந்த வெற்றியில் முக்கியமான விஷயம் என்னவென்றால், நாடுமுழுவதும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியின் அபார வெற்றியை பெற்றிருந்தது. அனைத்து கட்சியும் பெரும்பாலான இடங்களில் தோல்வியை தழுவியிருந்த நேரத்தில் திமுக முழு பலத்துடன் வெற்றி பெற்றது. சட்டமன்ற இடைத்தேர்தலிலும் 13 இடங்களில் திமுக வென்றது.

அதே நேரத்தில் வேலூர் இடைத்தேர்தலிலும் திமுக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. ஏனென்றால், தமிழகத்தில் மோடி எதிர்ப்பு அலை காரணமாகத்தான் திமுக அவ்வளவு பெரிய வெற்றியை பெற்றது என பலரும் கூறினர். அதிமுகவும் அதனை ஓரளவுக்கு வெளிப்படையாக ஆமோதித்தது. திமுக, அதிமுக இடையே பிரச்சாரம் கடுமையாக இருந்தது. தேர்தல் முடிவுகளின் போதும் கடுமையாக பரப்புரை நிலவியது. இறுதியில் திமுக வேட்பாளரும் துரைமுருகன் மகனுமான கதிர் ஆனந்த் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தோல்வி அடைந்திருந்தால், மோடி எதிர்ப்பைதான் மக்களவை தேர்தலில் திமுக அறுவடை செய்தது. தன் சொந்த பலத்தில் வெற்றிபெறவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்திருக்கும். ஆனால், ஸ்டாலின் தப்பித்துக் கொண்டார்.

தேர்தல் வெற்றிகளை தாண்டி அரசியல் களத்திலும் திமுக தலைவராக ஸ்டாலினுக்கு ஏறுமுகம்தான். மற்ற எந்த மாநில அரசியல் கட்சிகளின் தலைவர்களை விடவும், ஏன் காங்கிரஸ் கட்சியை காட்டிலும் ஸ்டாலின் தான் பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். குறிப்பாக புதிய தேசிய கல்விக் கொள்கை, முத்தலாக், என்.ஐ.ஏ என தன்னுடைய எதிர்ப்பை எல்லாவற்றிலும் தெளிபடுத்தினார். காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் எதிர்ப்பை பதிவு செய்ததோடு, சமீபத்தில் டெல்லியில் எதிர்க்கட்சிகளை கூட்டி திமுக தலைமையில் கூட்டத்தையும் நடத்தினார். 

விமர்சனங்கள்:

ஜெயலலிதா இல்லாத நிலையில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட பின்னர் முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியை கவிழ்க்க வாய்ப்பு இருந்ததாகவும் அதனை ஸ்டாலினால் செய்ய முடியவில்லை எனவும் பலர் விமர்சனம் செய்தனர். ஆனால், புறவாசல் வழியில் திமுக ஆட்சிக்கு வராது என ஸ்டாலின் கூறிவந்தார். அதற்கும் ஒரு வாய்ப்பாக மக்களவை தேர்தலுடன் 21 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வந்தது. இதில், திமுக நேரடியாக ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இருந்தது. ஆனால், 8 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக தன்னுடைய ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. முதல்வர் பழனிசாமியும் தமிழக அரசியலில் ஒரு ஆளுமையாக இதன் மூலம் தன்னை நிரூபித்துக் கொண்டார். ஆட்சி கவிழ்ந்துவிடும், ஆட்சி கவிழ்ந்துவிடும் என தொடர்ச்சியாக ஸ்டாலின் பேசிவந்த நிலையில் அது நடைபெறவில்லை என்பது கொஞ்சம் திமுகவினருக்கு வருத்தம்தான். 

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்ட பிறகு வாரிசு அரசியல் குறித்த விமர்சனங்கள் எழுந்தது. திமுகவிற்குள் பெரிய எதிர்ப்பு எதுவும் இல்லை என்றாலும் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்ய ஏதுவாக அது அமைந்துவிட்டது. 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close