திடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..?

திடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..?
திடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..?

உலகளவில் மிகவும் பிரபலமான காடு பிரேசிலின் அமேசான் காடு ஆகும். இந்தக் காட்டில் பல அரிய வகை உயிரினங்கள் வசித்து வருகின்றன. சமீபத்தில் இந்தக் காடுகளில் அதிகளவில் காட்டுத் தீ பரவி வருகிறது. எனவே அந்தப் பகுதியின் பெரும்பாலான இடங்களில் காட்டுத் தீயின் புகை அதிகரித்து வருகிறது. இந்த வருடத்தில் அமேசான் காடுகளில் அதிகமான தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 9,500 காட்டு தீ சம்பவங்கள் அமேசான் காடுகளில் நடைபெற்றதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்த காட்டுத் தீ சம்பவத்திற்கு மக்களின் செயல்களே காரணம் என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். ஏனென்றால் அமேசான் காடுகளில் பெரும் அளவில் ஏரியும் காட்டு தீ விபத்து சம்பவத்திற்கு, மக்கள் காட்டு பகுதியில் தங்களின் பயன்பாட்டிற்காக வைக்கும் தீயே பிரதான காரணம் என்று தெரியவந்துள்ளது. பொதுவாக இந்த பருவத்தில் காடுகளில் தீ பிடிப்பது இயல்பு என்றாலும் அமேசான் காட்டில் தீ பரவுவது சற்று கடினம் தான். எனினும் தற்போது மக்களின் செயல்பாடுகளால் காட்டுத் தீ சம்பவங்கள் அமேசான் காடுகளில் அதிகரித்துள்ளதாக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். 

பிரேசில் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தரவுகளின்படி அமேசான் காடுகளில் கடந்த ஆண்டைவிட இந்தாண்டில் 80 சதவிகிதம் அதிகமான காட்டு தீ சம்பவங்கள் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அத்துடன் அமேசான் காடுகள் கடந்த ஜூன் மாதத்தில், முந்தைய காலங்களை விட 88% அதிகமாக அழிக்கப்பட்டதாக இந்த மையம் தெரிவித்துள்ளது. மேலும் விவசாயிகள் தங்களின் நில தேவைக்காக அமேசான் காட்டில் தீ மூட்டியதும் காட்டு தீ அதிகரிக்க முக்கிய காரணம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். 

அதேபோல தற்போது இருக்கும் பிரேசில் அதிபர் போல்சோனாரோவின் வளர்ச்சி கொள்கைகளும், அமேசான் காட்டின் அழிவிற்கு ஒரு காரணமாக ஆர்வலர்கள் கருதுகின்றனர். ஏனென்றால் அதிபர் தேர்தலின் போது போல்சோனாரோ அமேசான் காடுகளில் உள்ள வளங்களை வைத்து பிரேசில் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதாக உறுதியளித்தார். அவரின் இந்தக் கொள்கையினால் தற்போது அமேசான் காட்டின் அழிப்பு அதிகரித்துள்ளது என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். 

'World Wildlife Fund For Nature ' என்ற சுற்றுச்சூழல் அமைப்பு, “ பூமியின் நுரையீரலாக கருதப்படும் அமேசான் காடுகளில் அழிப்பு அதிகமானால், பூமியில் அதிகளவில் கார்பன் வாயு பரவ நேரிடும். இது பருவநிலை மாற்றத்திற்கு முக்கிய பங்காகவும் ஆகிவிடும்” என எச்சரித்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com