[X] Close >

பாஜகவின் அசுர வளர்ச்சியில் சரிகிறதா காங்கிரஸ் கூடாரம் ?

Including-congress-leaders-has-been-moving-lot-to-Bjp-party

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக முழு பலத்துடன் ஆட்சி அமைத்துள்ளது மற்ற கட்சிகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு தன்னுடைய இரண்டாவது ஆட்சி தொடங்கிய சில மாதங்களிலேயே முக்கியமான கட்டத்தை நேற்று எட்டியுள்ளது. கடந்த ஆட்சியில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற முடியாமல் பாஜக அரசு திணறி வந்தது. ஆனால், எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த முத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இது, எதிர்க்கட்சிகளை கொஞ்சம், கொஞ்சமாக பாஜக கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதையே காட்டுகிறது. 

                


Advertisement

முந்தைய மோடி அரசு மீது எதிர்ப்பு அலைகள் இருப்பதாக கருதப்பட்ட நிலையில், மக்களவை தேர்தலில் அது எதுவுமே எதிரொலிக்கவே இல்லை. பாஜக தனியாகவே 300க்கும் மேற்பட்ட இடங்களை வென்று அசுர பலத்துடன் ஆட்சி அமைத்தது. பாஜக அரசு இரண்டாவது முறையாக பெரும் பலத்துடன் ஆட்சி அமைத்தது மற்ற கட்சிகளை ஆட்டம் காண வைத்துள்ளது என்றே தெரிகிறது. அதற்கு முக்கியமான காரணமாக எதிர் கட்சி அந்தஸ்து பெரும் அளவிற்கு கூட வேறு எந்தவொரு கட்சியும் வெற்றியை பெறவில்லை. காங்கிரஸ் வெறும் 54 இடங்களிலேயோ வெற்றி பெற்றிருந்தது.

                 

இரண்டாவது முறையாக மோடி அரசு அமைந்தது முதல், மற்ற கட்சிகளில் இருந்து தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பாஜகவுக்கு படையெடுப்பது அதிகரித்துள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் இது நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இரண்டாம் கட்ட தலைவர்கள் மட்டுமல்லாமல் பதவியில் இருந்து எம்.எல்.ஏக்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்து வருகின்றனர். 


Advertisement

                 

சமீபத்தில் இந்த நிகழ்வுகள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. மேற்குவங்கத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஏராளமானோர் பாஜகவில் இணைந்தனர். மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மிகப்பெரிய சவாலாக பாஜக உருவெடுத்துள்ளது. குஜராத் மாநிலத்தில் இருந்து ஏற்கெனவே நிறைய காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவிற்கு தாவியிருந்த நிலையில், ஓபிசி தலைவராக அறியப்பட்ட அல்பேஸ் பாஜக கூடாரத்திற்கு சென்றுவிட்டார். 

              

கோவா அரசியலில் திடீர் திருப்பமாக, 10 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அக்கட்சியிலிருந்து விலகி, பாஜகவில் இணைந்தனர். பாஜகவில் இணைந்த எம்.எல்.ஏக்களில் மூன்று பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

              

அதன் தொடர்ச்சியாக, கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத அரசு தன்னுடைய ஆட்சியை இழந்துவிட்டது. இதில், சுயேட்சை எம்.எல்.ஏக்கள் பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்தனர். கர்நாடக அரசியலின் குழப்பத்தை தனக்கு சாதகமாக பாஜக பயன்படுத்திக் கொண்டது. 

                 

அதன் தொடர்ச்சியாக, மகராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூன்று எம்.எல்.ஏக்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். காங்கிரஸ் எம்.பி சஞ்சய் சிங் தன்னுடைய மாநிலங்களவை எம்.பி பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

                 

காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து பாஜகவை நோக்கி பலரும் படையெடுத்து வருகின்றனர். இதற்கு முக்கியமான காரணம் பாஜகவின் பலம் மட்டுமல்ல பலமான எதிர்க்கட்சி இல்லாததும் தான். அதாவது, காங்கிரஸ் கட்சியின் சரிவும் இதற்கு முக்கியமான காரணம். அடுத்தடுத்து இரண்டு மக்களவை தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியை தழுவியுள்ளது, அதுவும் மிகவும் மோசமான தோல்வி. ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்கு பின்னர் காங்கிரஸ் கட்சி புத்துணர்ச்சி பெற்றதாக கருதப்பட்டது. 

                                  

ஆனால், மக்களவை தேர்தலில் அந்த மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி தன்னுடைய தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆனால் புதிய தலைவர் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. தலைமை வெற்றிடம் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. அதற்கு கர்நாடகாவில் ஆட்சியை இழந்தது ஒரு உதாரணம்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் அரசுகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ராகுல் காந்தி ராஜினாமா கடிதம் கொடுத்தது முதல் காங்கிரஸ் கட்சி ஒரு காரிய கமிட்டி கூட்டத்தையும் நடத்தவில்லை. தலைமை வெற்றிடத்தை காங்கிரஸ் கட்சி உணர்ந்து விரைவில் அந்த சிக்கலை சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

                       

அதாவது, பாஜகவின் அசுர வளர்ச்சி மற்ற கட்சிகளை காட்டிலும் காங்கிரஸ் கட்சிக்கே அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என்பதை சமீபத்திய நிகழ்வுகள் காட்டுகின்றன. 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close