சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு, சதுரகிரி மலைப்பகுதியில் அன்னதானம் வழங்க கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பெருநாழியைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்திருளப்பன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,"மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா மேற்குத் தொடர்ச்சி மலையில் 8 கிமீ தொலைவில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி மற்றும் சந்தன மகாலிங்க சுவாமி மலைக்கோயில் உள்ளது. கோயில் பகுதியில் இருந்த அன்னதான மடங்கள் மூலம், பக்தர்களுக்கு 24 மணிநேரமும் இலவச அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிலையில் அறநிலையத்துறை இணை ஆணையர் மடங்களை மூட உத்தரவிட்டார். பிறகு, தனியார் உணவகங்கள் திறக்கப்பட்டன.
அங்கு உணவு பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இதுபோன்ற நடவடிக்கைகளால் பக்தர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, நீதிமன்றம் தலையிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்க சுவாமி கோயில் பகுதிகளில் செயல்பட்டு வந்த அன்னதான மடங்களை மீண்டும் திறக்கவும், மூடப்பட்டு பராமரிப்பின்றி கிடக்கும் கழிவறைகளை சுத்தம் செய்து பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதிகளை செய்து தரவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார். இதேபோல் மேலும் சில மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த மனுக்கள் நீதிபதிகள் சத்யநாராயணன், புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் தரப்பில், ‘‘வரும் 31ம் தேதி ஆடி அமாவாசை வருகிறது. இதற்காக தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர். உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காவிட்டால் மிகுந்த சிரமம் ஏற்படும். எனவே, அடிப்படை வசதிகள் செய்வது அவசியம்’’ என்றனர்.
இதையடுத்து அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், ‘‘ஆடி அமாவாசைக்கு சதுரகிரி வரும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், உணவு, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் மதுரை மாவட்ட நிர்வாகம், கோயில் நிர்வாகம், வனத்துறை ஆகியவை இணைந்து மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள், “கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சதுரகிரி மலைப்பகுதியில் அன்னதானம் வழங்க கூடாது. சதுரகிரி மலை அடிவாரத்தில் உள்ள தனிப்பாறை பகுதியில் வனத்துறை சோதனை சாவடிக்கு வெளியே உள்ள பகுதிகளில்தான் அன்னதானம் வழங்க வேண்டும். மேலும், கோயில் நிர்வாகத்திடம் அனுமதி பெறமால் கடைகள் இருந்தால், அவற்றை வனத்துறை அப்புறப்படுத்த வேண்டும். இந்த உத்தரவு, இந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழாவுக்கு மட்டுமே பொறுந்தும்” எனக் கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
Loading More post
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி