கல்லுக்குட்டை ஏரியை ஆய்வு செய்த அறப்போர் இயக்கத்தினர் கைது

police-arrested-10-arapore-iyakkam-people

சென்னை தரமணியிலுள்ள கல்லுக்குட்டை ஏரியை ஆய்வு செய்யச் சென்ற அறப்போர் இயக்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.


Advertisement

தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகளை ஆய்வு செய்து, அதனை தூய்மைப்படுத்துவதற்கான முன்னெடுப்பில் அறப்போர் இயக்கத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தரமணியிலுள்ள கல்லுக்குட்டை ஏரியை அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த பத்து பேர் ஆய்வு செய்து உள்ளனர். 

அப்போது அங்கு விரைந்த காவல்துறையினர், உரிய அனுமதியின்றி ஏரியை ஆய்வு செய்ததாகக் கூறி அவர்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் வேளச்சேரி-தரமணி சாலையிலுள்ள திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இச்சம்பவம் தன்னார்வலர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement

இதுகுறித்து அறப்போர் இயக்கத்தினர் கூறுகையில், “2015 ஆம் ஆண்டு வெள்ளத்திற்குப் பிறகு அதற்கான காரணங்கள் என்ன? அதை எப்படி மீட்டெடுப்பது என்பது குறித்து கடந்த 4 வருடங்களாக அறப்போர் இயக்கத்தின் சார்பில் ஆய்வு செய்து வருகிறோம். பல்வேறு ஏரிகளை ஆய்வு செய்து அரசிடம் பிரச்னைகள் குறித்த தகவல்களை கொடுத்து மீட்டெடுத்து வருகிறோம். அதேபோல் வில்லிவாக்கம் ஏரியைக்கூட ஆய்வு செய்து அரசிடம் அறிக்கை கொடுத்ததையடுத்து தற்போது அரசாங்கம் அந்த ஏரியில் பணிகளை மேற்கொண்டு வருகிறது. 

அதனடிப்படையில் இன்று கல்லுக்குட்டை ஏரியை ஆய்வு செய்ய வந்திருந்தோம். அப்போது அங்கு வந்த காவல்துறையினர் அனுமதி வாங்காமல் எப்படி ஆய்வு செய்யலாம் எனக்கூறி எங்களை கைது செய்கிறோம் எனத் தெரிவித்தனர். இதற்கு முன்பு கூட செய்த பணிகளை பார்த்து போலீசாரே எங்களை பாராட்டியுள்ளனர். இதுவரை யாரிடமும் இதுகுறித்து அனுமதி வாங்கியது கிடையாது. தற்போது ஏதாவது சட்டம் இருந்தால் சொல்லுங்கள். அடுத்த முறையில் இருந்து பின்பற்றுகிறோம் எனத் தெரிவித்தோம். ஆனால் அவர்கள் மறுத்து எங்களை கைது செய்துள்ளனர். காவல்துறை ஏன் இவ்வாறு செய்கிறது எனத் தெரியவில்லை” எனக் கூறினர்.  


Advertisement


 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement