[X] Close >

ராஜீவ் காந்தி மகன் ராகுல் காந்தி காங். தலைவரான கதை  

how-was-rahul-gandhi-entered--in-congress-party-

மத்தியில் தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் 2014ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் மிக மோசமான தோல்வியை சந்தித்தது. அதிகா‌ரப்பூர்வ எதிர்க்கட்சியாக அமர்வதற்கு உரிய உறுப்பினர்களின் எண்ணிக்கையைகூட அது பெறவில்லை. இதனால், மன வருத்தத்தில் இருந்த சோனியா, அடுத்தாக சட்டப்பேரவைத் தேர்தல்களில் கவனம் செலுத்தினார். 


Advertisement

எனினும் எதிர்பார்த்தபடி வெற்றி கிடைக்கவில்லை. இடையில் அவருக்கு உடல் நலம் பாதிக்கவே, செயல் தலைவராக இருந்த ராகுல் காந்தியை 2017ஆம் ஆண்டு தலைவர் பொறுப்புக்கு நிறுத்தினார் சோனியா. இதற்கு மூத்தத் தலைவர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்ததை அடுத்து, காங்கிரஸின் தலைவராக உயர்ந்தார் ராகுல். 


Advertisement

அதன் பின் கட்சியை ‌பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்ட ராகுல், கட்சியின் அனுபவசாலிகளையும், இளைஞர்களையும் அரவணைத்து அவர்களுக்கு பொறுப்புகளை வழங்கினார். கடந்த ஆண்டு நடந்த ஐந்து மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் மூன்று மாநிலங்களில் வெற்றி பெற்றது, அந்தக் கட்சிக்கு புத்துயிர் ஊட்டியது. மேலும்‌ கர்நாடகாவில் நடந்த தேர்தலிலும், போதிய இடங்களை பெறாவிட்டாலும், கூட்டணி ஆட்சி அமைத்தது காங்கிரஸ் தொண்டர்களிடையே மிகுந்த புத்துணர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. 

இதற்கு அடுத்தக் ‌கட்டமாக மக்களவைத் தேர்தலில் கவனம் செலுத்திய ராகுல் காந்தி, பாஜக வேட்பாளர்கள் பட்டியலை அறிவிப்பதற்கு முன்பாகவே, காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை அதிரடியாக வெளியிட்டார். நாடு முழுவதும் சூறவாளி சுற்றுப்பயணம்‌ மேற்கொண்ட ராகுல், ரஃபேல் ஊழலை தேர்தல் பரப்புரையில் முதன்மையாக வைத்து பரப்புரையை மேற்கொண்டார். 


Advertisement

ஏழை, எளிய மக்களை கவரும் வகையில், காங்கிரஸ் வெற்றி பெற்றால் ஆண்டுதோறும் 72 ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என வாக்குறுதியளித்தார். வேலையில்லா திண்டாட்டமும், அவரது பரப்புரையில் முக்கிய பங்கு வகித்திருந்தது. 

எனினும் இந்தத் தேர்தலிலும் காங்கிரஸ் மோசமான தோல்வியை பதிவு செய்தது. வழக்கமாக போட்டியிடும் அமேதி தொகுதியிலும் அவருக்கு மிகப் பெரிய சறுக்கல் ஏற்பட்டது. இதனால், ராகுலின் தலைமை குறித்து மறைமுகமான விமர்சனங்கள‌ எழுந்த நிலையில், தோல்வி குறித்து ஆலோசிப்பதற்காக கடந்த மே 25ம் தேதி காங்கிரஸ் காரிய கமிட்டி கூடியது. 

அப்போது தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு முழுப் பொறுப்பேற்று தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் ராகுல். அவரது இந்த முடிவை காங்கிரஸ் காரிய கமிட்டியும், தொண்டர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. தொடர்ந்து அவர் ‌பதவியில் நீடிக்க வேண்டும் எனத் தொண்டர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், சில தினங்கள் முன்பு அவர் காங். கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர்களை அழைத்து பேசினார். அதன்பிறகு ராகுலே தலைவராக நீடிப்பார் என்றே காங். கட்சிக்கு நெருக்கமான வட்டாரம் தகவல் தெரிவித்திருந்தது. ஆனால் அதையெல்லாம் பொய்யாக்கும்படி நேற்று ராஜினாமா செய்ததற்கான காரணங்களை விளக்கி ‌‌அறிக்கை ஒன்றை ராகுல் காந்தி வெளியிட்டார். 

காங்கிரஸை பொறுத்தவரை இக்கட்டான சூழலில் அந்தக் கட்சி தவித்து வரும் நிலையில், ராகுலின் இந்த முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது என்றே அவரது தொண்டர்கள் கூறுகின்றனர். அதே சமயம், அவர் பொறுப்பில் இருந்து விலகியது ஒருவிதமான அரசியல் வியூகமே என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்த வியூகம் வெற்றியாக மாறுமா என்பதை காலம்தான் தீர்மானிக்கும்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close