தமிழ் மருத்துவத்துக்காக பிரத்யேக நூலகம் ! நெல்லையில் ஓர் புதிய முயற்சி

New-Library-for-Tamil-Medicine-in-Tanjore

நூலகங்கள் என்றால் கதை, வரலாறு, வாசிப்பு, நடப்பு  செய்திகளை அறிவது என இல்லாமல் அதனையும் தாண்டி  தமிழ் பண்பாட்டினை மீட்டெடுக்கும் தளமாகவும் மாற்றப்பட்டு வருவது வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்தவகையில் தமிழ்நாட்டு அரசின் சீரிய முயற்சியில் நெல்லை மாநகரிலுள்ள மாவட்ட நூலகத்தின் முதல் தளத்தில் தமிழ் மருத்துவம் சார்ந்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.


Advertisement

பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் பொது நூலகத்துறை பொதுமக்களின் வாசிப்பு திறனை ஊக்குவித்து வருகிறது. தமிழக நூலகங்களில் கணினி மயமாக்கல், பார்வையற்றோருக்கான பிரெய்லி முறை வாசிப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்து கொடுத்து வருகிறது. இருப்பினும் பொது நூலகத்துறையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் வகையில் அரசு பல்வேறு நகரங்களில் சிறப்பு நூலகங்களை காட்சி படங்களோடு செயல்படுத்த உத்தரவிட்டு உள்ளது. 


Advertisement

அதன்படி தமிழகத்தில் 8 இடங்களில் தலா ஒரு கோடி செலவில் 8 சிறப்பு நூலங்களை அமைத்து வருகிறது. அதில் கீழடியில் பழம்பெரும் தமிழர் நாகரீகம் வெளிப்படுத்தும் சிறப்பு நூலகம், தஞ்சையில் தமிழிசை, நடனம், நுண் கலை சார்ந்த நூலகம், மதுரையில் நாட்டுப்புற கலை சார்ந்த நூலகம், நெல்லையில் தமிழ் மருத்துவம் சார்ந்த நூலகம், சென்னையில் அச்சுக்கலை சார்ந்த நூலகம் என 8 இடங்களில் நூலகம் அமைக்க முடிவு செய்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது. 


Advertisement

இதில் நெல்லையில் நடைபெற்று வந்த தமிழ் மருத்துவம் சார்ந்த நூலகம் அமைக்கும் பணிகள் தற்போது முடிவுறும் தருவாயில் திறப்பு விழா காணும் எதிர்பார்ப்புடன் உள்ளது. பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட மைய நூலகத்தின் முதல் தளத்தில் இந்த நூலகம் காண்போர் கண்களை கவரும் வண்ணம் உள்ளது. 

நூலகத்தை சுற்றிலும் வெளியே மூலிகைச் செடிகள் வைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மக்கள் மத்தியில் தமிழ் மருத்துவத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நூலகமானது உருவாக்கப்பட்டு உள்ளது. வெறும் புத்தகப்படிப்போடு மட்டும் இன்றி  இந்த நூலகத்தின் சிறப்பாக நூலகத்தினுள் கண்காட்சி கூடம் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தக்கூடிய பல்வேறு மருந்துகள்,  மருத்துவம் சார்ந்த பல்வேறு  நூல்கள், சித்த மருத்துவம் சார்ந்த விதைகள் போன்றவற்றை வைக்கப்பட்டு உள்ளது. 

அத்துடன் நம் முன்னோர்கள் பயன்படுத்திய நீராவி குளியல் இயந்திரம், இடி உரல், செந்தூரம் எரிக்கும் கருவி, மெழுகுத்தலைக்கருவி என அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது. இது பொதுமக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருப்பதுடன், இங்கு வைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவ மூலிகையின் பயன்பாட்டையும் விளக்கும் வகையில் உள்ளது. 

மேலும் காணொளி காட்சி மூலம் கருத்தரங்கு நடத்தவும், எல்இடி மூலம் தமிழ் மருத்துவர்களின் உரையும் இடம் பெறும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. சித்த மருத்துவம் தொடர்பாக மாதந்தோறும் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்துவது, வாரத்தில் மூன்று நாட்கள் இலவசமாக யோகா சொல்லிக் கொடுப்பது போன்ற பல்வேறு விசயங்களை மக்கள் மத்தியில் எடுத்து செல்ல திட்டமிடப்பட்டு உள்ளது. இது பொதுமக்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இதுகுறித்து அங்கு படிக்கவரும் வாசகர்கள், “நம் முன்னோர்கள் பயன்படுத்திய சித்த மருத்துவத்தின் மகத்துவம் தற்போதைய தலைமுறைக்கு தெரிவது இல்லை என்றும், இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள இந்த தமிழ் மருத்துவ நூலகம் தங்களுக்கும், பாளையங்கோட்டையில் உள்ள பழமை வாய்ந்த அரசு சித்த மருத்துவக்கல்லூரியில் தமிழ் மருத்துவம் சார்ந்து படிக்கும் மாணவர்களுக்கும் மிகுந்த பயனுள்ளதாக அமையும்” எனத் தெரிவிக்கின்றனர். 

தமிழக அரசினால் தொடங்கப்பட்ட முதல் அரசு சித்த மருத்துவமனை கல்லூரி நெல்லையில் தான் தொடங்கப்பட்டது என்பதால் அதனை நினைவு கூறும் வகையில் தொடங்கப்பட்ட இந்த சிறப்பு நூலகமானது அதிகாரிகள் ஆய்வுக்கு பின்னர் விரைவில் தமிழக முதல்வரால் திறக்கப்பட உள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement