[X] Close >

எல்லோருக்கும் தெரிந்த வேட்பாளர்கள் ! அறிமுகம் இல்லாத வாக்காளர்கள் ! எடுபடுமா இந்த யுக்தி ?

Loksabha-elections-2019--Candidates-in-the-fray-who-are-from-outside-the-constituency

நாடே மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது. பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் தேர்தல் காலத்தில் அரங்கேறினாலும், எப்போதுமே விவாதத்தை எழுப்புவது சொந்த தொகுதியில் செல்வாக்குமிக்க ஒரு நபரை, வேறு தொகுதியில் அதாவது, தொகுதி மக்களுக்கு அதிக அறிமுகமில்லாத அல்லது தொடர்பே இல்லாத இடத்தில் நிறுத்துவது.


Advertisement

ஈரோட்டை பூர்விகமாக கொண்ட ஈவிகேஎஸ் இளங்கோவனை தேனியில் நிறுத்தியுள்ளது காங்கிரஸ். இதேபோல நெல்லையைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன், ராமநாதபுரத்தில் பாஜக வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சொந்த தொகுதியில் செல்வாக்குமிக்க இவர்கள், இதுவரை பெருமளவில் பரிச்சயமில்லாத தொகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளனர். மக்கள் வாக்களிக்கும் தேர்தல் ‌களத்தில் முதன்முறையாக இறங்கியுள்ள திமுக வேட்பாளர் கனிமொழியும் கூட, சென்னையோ அல்லது அவரது தந்தையின் ‌பூர்வீகமான திருவாரூரையோ தேர்வு செய்யாமல் தூத்துக்குடியில் களம் காண்கிறார். 


Advertisement

சென்னை தொகுதிகளில் போட்டியிட்டு வந்த தமிழிசை சவுந்த‌ரராஜனும் இந்தமுறை தூத்துக்குடியில் களமிறங்கியுள்ளார். இப்படி தொகுதியில் வசிக்காதவரை தேர்தலில் நிறுத்துவது உள்ளூர் தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்துமா? இது வெற்றி வாய்ப்பை பாதிக்குமா என்ற கேள்வி எழுகிறது. எனினும், கட்சியின் தலைவர்கள் எங்கு போட்டியிட்டாலும் வாக்காளர்களுக்கு பரிச்சயமானவராக இருப்பதால் அவர்களுக்கு ஓகேதான். ஆனால், பரிச்சயமற்ற வேட்பாளர்களை வாக்காளர்கள் ஏற்பார்களா என்பது சந்தேகமே. இதன் காரணமாகவே பெரியகுளம் தொகுதி அதிமுக வேட்பாளர் முருகன் மாற்றப்பட்டு மயில்வேல் நிறுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.


Advertisement

தமிழக அரசியல் வரலாற்றை புரட்டி பார்க்கையில் அரசியல் ஆளுமைகள் பலரும் வேறு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றியை கண்டுள்ளனர். விருதுநகரை பூர்வீகமாக கொண்ட முன்னாள் முதலமைச்சர் காமராஜர் குடியாத்தம், நாகர்கோவில் ஆகிய இடங்களில் வெற்றி பெற்றுள்ளார். சொந்த ஊரான விருதுநகரில் தோல்வியே கிடைத்தது. திருவாரூரை பூர்வீகமாக கொண்ட மறைந்த முதல்வர் கருணாநிதி குளித்தலை, சென்னை சைதாபேட்டை, அண்ணாநகர், துறைமுகம், சேப்பாக்கம் உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்டு தொடர் வெற்றிகளைக் குவித்துள்ளார். 

எம்ஜிஆரும் கூட சென்னை பரங்கிமலை, அருப்புக்கோட்டை, மதுரை, ஆண்டிபட்டி என பல தொகுதிகளில் களம் கண்டு வெற்றி பெற்றவர். ஜெயலலிதாவும் போடிநாயக்கனூர், பர்கூர், ஸ்ரீரங்கம், ஆர்.கே.நகர் என தமிழகத்தின் பல்வேறு தொகுதிகளில் களம் கண்டவர்தான். ஆனால், மிகப்பெரிய ஆளுமைகள் என்ற அடிப்படையில் தொகுதி அடையாளத்தையும் தாண்டி இவர்களுக்கு மக்கள் வாக்களித்தனர் என்பதை மறுப்பதற்கில்லை. தேசிய அளவில் பார்த்தாலும் கடந்த மக்‌களவை தேர்தலின் போது பிரதமர் நரேந்திர மோடி உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் போட்டியிட்டு வென்றவர் தான். மாநில அளவிலும் தேசிய அளவிலும் அடையாளமிக்க ஆளுமைகளுக்கு சொந்த தொகுதி என்பது தேவைப்படுதவில்லை.

நான்கு முறை கரூர் எம்பியான தம்பிதுரையின் பூர்வீகம் கிருஷ்ணகிரி. 1989ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பரிச்சயமே இல்லாத கரூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், 1999ஆம் ஆண்டு கிருஷ்ணகிரியில் மக்களவை தொகுதியில் போட்டியிட்ட அவருக்கு தோல்வியே மிஞ்சியது. தொகுதிக்கு சொந்தமானவர் என்பதையும் தாண்டி மற்ற காரணிகளூம் வாக்காளர்கள் கருத்தில் கொள்கின்றனர் என்பதே கடந்த கால தேர்தல்கள் நமக்கு உணர்த்துகின்றன. அது இந்த தேர்தலிலும் எதிரொலிக்குமா என்பது மே 23ஆம் தேதி தெரிந்துவிடும்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close