விளையாட வேண்டாம் என்று வீரர்களுக்கு சொல்லக் கூடாது - கபில் தேவ்

விளையாட வேண்டாம் என்று வீரர்களுக்கு சொல்லக் கூடாது - கபில் தேவ்
விளையாட வேண்டாம் என்று வீரர்களுக்கு சொல்லக் கூடாது - கபில் தேவ்

விளையாட்டு வீரர்களை ஒரு போதும் விளையாட வேண்டாம் என்று சொல்லக்கூடாது என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஜெய்ஷ் - இ -முகமது அமைப்பு ஈடுட்டது. இதையடுத்து அந்த நாட்டுக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருகின்றன. பாகிஸ்தானுடன் எந்த விளையாட்டு போட்டிகளிலும் இந்தியா விளையாடக்கூடாது எனவும் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுடன் ஜூன் 16ஆம் தேதி நடைபெறவுள்ள போட்டியை இந்திய அணி புறக்கணிக்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அங்கமான கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியாவின் (சிசிஐ) அலுவலகம் மும்பை பிராபோர்ன் மைதானத்தில் இருக்கிறது. இங்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய பாகிஸ்தான் பிரதமருமான இம்ரான்கானை கவுரவிக்கும் வகையில் அவரது புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது. இதே போல் சக வீரர்களுடன் இம்ரான்கான் இருக்கும் குரூப் போட்டோவும் தொங்கவிடப்பட்டு இருந்தது. பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கிளப் நிர்வாகிகளின் முடிவின்படி இவ்விரு புகைப்படங்களும் அகற்றப்பட்டன.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றப் போது இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் கபில்தேவ், “விளையாட்டு வீரர்களை ஒருபோதும் விளையாடக்கூடாது என்று சொல்லக்கூடாது. ஏனென்றால் விளையாட்டு வீரர்கள் விளையாட மட்டும்தான் தெரியும். அதனால் அவர்கள் அதை தான் செய்யவேண்டும்” எனக் கூறியுள்ளார்.

ஏற்கெனவே இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் சுனில் கவாஸ்கர் பாகிஸ்தான் உடனான போட்டியில் இந்தியா விளையாட வேண்டும் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com