குப்பை கிடங்கில் கிடந்த கை, கால்கள் யாருடையது..? துப்பு துலங்காததால் திணறும் போலீஸ்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

குப்பை கிடங்கில் பெண்ணின் உடலுறுப்புகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு இன்னு‌ம் ஓயவில்லை. பலகட்ட விசாரணை தோல்வியில் முடிந்ததால், இந்த வழக்கு காவல்துறைக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.


Advertisement

சென்னை பெருங்குடி குப்பைக் கிடங்கில் பெண்ணின் கை, கால்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தான் தமிழகத்தின் தற்போதைய பரபரப்புச் செய்தி. கடந்த 21-ஆம் தேதி பெருங்குடி குப்பைக் கிடங்குக்கு வந்த லாரியில், ரத்தம் படிந்த நிலையில் பெண்ணின் வலது கையும்‌, 2 கால்களும் துண்டுகளாக வெட்டப்பட்டு சாக்குப் பைக்குள் கண்டெடுக்கப்பட்டன‌. தலையும், உடலும் இல்லாததால்‌, கொலை செய்யப்பட்ட பெண் யார் என அடையாளம் தெரியவில்லை.


Advertisement

மிகவும் சிக்கலாக கருதப்படும் இந்த வழக்கில், உடலுறுப்புகளை ‌வைத்து கொல்லப்பட்ட பெண் யார் என கண்டறிய விசாரணையைத் தொடங்கியது காவல்துறை. வெட்டப்பட்ட கையின் விரல் ரேகையை வைத்து பெண் யார் என்பதை கண்டறிந்துவிடலாம் என திட்டமிட்ட காவலர்கள், அரசின் ஆதார் அமைப்பின் உதவியை ‌நாடினர். ஆனால், இறந்த செல்கள் மூலம் கைரேகை விவரங்களை துல்லியமாக பெறமுடியாது என ஆதார் அமைப்பு கைவிரித்துவிட்டதால், முதல் முயற்சியிலேயே காவல்துறைக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

வெட்டப்பட்ட பெண்ணின் உடலுறுப்புகள் கோடம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட பகுதியில் இருந்து வந்த குப்பை லாரியில் தான் கொண்டுவரப்பட்டுள்ளது. கொலை செய்த நபர், அப்பகுதியில் உள்ள ஏதேனும் ஒரு குப்பை தொட்டியில், கை, கால்களை வீசிச்‌ சென்றிருக்கலாம் என்பது காவல்துறையின் சந்தேகம். அதனால், அந்த மண்டலத்திற்குட்பட்ட ‌16 வார்டுகளில், ஆயிரத்து 280 குப்பை தொட்டிகளுக்கு அருகே உள்ள சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை.


Advertisement

துண்டாக்கப்பட்ட அந்த கையில் சிவன் பார்வதி படமும், ட்ராகன் படமும் பச்சை குத்தப்பட்டிருந்தது. அந்த தகவல்களை வைத்தும், வெட்டப்ப‌ட்ட கை, கால்கள் வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டைப் பையில் உள்ள‌ முகவரியை வைத்தும் ஏதேனும் தகவல் கிடைக்குமா என விசாரணையை‌ தீவிரப்படுத்தியது காவல்துறை. ஆனால், அதிலும் எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை என தெரிகிறது. எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடி‌ய, காவலர்கள் வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். சென்னை மற்றும் தமிழகம் முழுவதிலும், காணாமல் போன பெண்களின் விவரங்களைச் சேகரித்து வரும் காவல்துறையினர், மீட்கப்பட்ட கை, கால்களில் உள்ள அடையாளங்கள் அவற்றுடன் ஒத்துப்போகிறதா என்ற விசாரணையில் இறங்கியுள்ளனர்.

இறுதியாக‌, இவ்விவகாரத்தில் சமூக வலைதளங்கள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் மூலமாக, பொதுமக்களின் உதவியையும் நாடியுள்ளது காவல்துறை. க்ரைம் த்ரில்லர் படங்களில் வரும் கதையை விஞ்சும் அளவில், காவல்துறையினருக்கு பெரும் சவலாக அமைந்திருக்கிறது இந்தச் சம்பவம். கொல்லப்பட்ட பெண்ணின் உடலுறுப்புகள் கண்டெடுக்கப்பட்டு 4‌ நாட்களாகியும், எந்த துப்பும் துலங்காததால் காவல்துறை திணறி வருகிறது.

loading...

Advertisement

Advertisement

Advertisement