நெருங்கும் தைத்திருநாள்.. ஊர் ஏக்கத்தில் நகர்ப்புறவாசிகள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தைத் திருநாளான பொங்கல் நெருங்கி வரும் நிலையில், நகரத்தில் வாழும் மக்களுக்கு தங்களது கிராமத்து எண்ணங்கள் வட்டமிட தொடங்கியிருக்கும்.


Advertisement

உழவர் திருநாள், அறுவடைத் திருநாள், தைத் திருநாள் எனப் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் நிறைய பெயர்கள் உண்டு. தமிழர்களின் விழாக்களில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது இந்தத் தைத் திருநாள். ஒரு பருவத்திற்கான நெல் அறுவடை முடியும் தருணத்தை கொண்டாடுவதுதான் இந்தப் பண்டிகையின் நோக்கம். விவசாயத்திற்கு உதவியாக இருந்த சூரியன், கால்நடைகள் ஆகியவற்றிற்கு நன்றி சொல்லுவதே இந்த விழாவின் சாரம்சம். கூடவே அறுவடையை கொண்டாடுதல். ஆட்டம், பாட்டம், விளையாட்டு என 4 நாட்களும் ஒரே திருவிழா கோலமாகதான் கிராமங்கள் இருக்கும். 

                 


Advertisement

தைத் திருநாளான ஜனவரி 13, 14 ஆம் தேதிகளில் தொடங்கி 16, 17 ஆம் தேதிகளில் முடிவடையும். அதனால், புத்தாண்டு முடிந்த உடனேயே பொங்கல் பண்டிகையை பற்றிய எண்ணங்கள் மனதில் வட்டமிட தொடங்கிவிடும். கிராமங்களிலேயே இருப்பவர்களை காட்டிலும், அங்கிருந்து நகரத்திற்கு குடிபெயர்ந்தவர்களுக்குதான் இந்த ஏக்கம் அதிகமாக இருக்கும். பொங்கல் நெருங்கி விட்டாலே, ‘ஊருக்கு எப்ப வருவீங்க’ என்று பலரும் கிராமங்களிலிருந்து நகரத்தில் உள்ள தங்கள் சொந்தங்களுக்கு போன் செய்துவிடுவார்கள். 

          

கிராமங்களுடன் தொடர்பில் உள்ள நகர்புறவாசிகளுக்கு இரண்டு விழாக்கள்தான் முக்கியமானது. ஒன்று கோயில் கொடை. மற்றொரு பொங்கல் பண்டிகை. பொங்கல் பண்டிகையை பொறுத்தவரை குறைந்தபட்சம் 2 முதல் நான்கு நாட்கள் விடுமுறை இருந்தால்தான் முழுமையாக கொண்டாட முடியும். நான்கு நாட்களும் ஊரில் இருக்க வேண்டும் என்றே எல்லோரும் நினைப்பார்கள். 


Advertisement

     

கிராமங்களில் இருந்து இளைஞர்கள் பொங்கலுக்கு சில தினங்களுக்கு முன்பாகவே ஒரு குழு அமைத்து, பண்டிகையை கொண்டாட்டங்களுக்கு வசூல் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அரசு வேலையில் இருப்பவர்கள், பதவியில் இருப்பவர்கள், பஞ்சாயத்து தலைவர், மளிகை கடை வைத்திருப்பவர்கள் என ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு தொகை போட்டு வசூல் செய்வார்கள். சென்னை, திருப்பூர் போன்ற நகரங்களில் வேலை செய்பவர்களுக்கு போன் செய்து இந்த வருடம் பொங்கலுக்கு ஆளுக்கு இவ்வளவு ரூபாய் சேர்க்கிறோம் என்று முன்கூட்டியே சொல்லிவிடுவார்கள்.

          

பொங்கல் என்றாலே வீடுகளில் மாடுகளுக்கு சிறப்பு செய்தல், ஊர்க் கூடி பொங்கல் வைத்தல் போன்றவற்றை தாண்டி விளையாட்டுப் போட்டிகள்தான் எல்லோருக்கும் மனதில் வரும். ஏனெனில், இளைஞர்கள் மட்டுமல்லாது பெரியவர்கள் கூட பொங்கல் பண்டிகையின் போது நடைபெறும் நிகழ்ச்சிகளில் மகிழ்ச்சிகரமாக கலந்து கொள்வார்கள். 

           

கும்மியடித்தல், வடம் இழுத்தல், இசை நாற்காலி, பானை உடைத்தல் உள்ளிட்ட சில நிகழ்ச்சிகள் பெரியவர்களுக்கு என்றே நடக்கும். ஜல்லிக்கட்டு, வழுக்குமரம் ஏறுதல் போன்றவை இளைஞர்களுக்காக நடக்கும். அதுபோக, பாட்டிலில் நீர் நிரப்புதல், பலூன் உடைத்தல், சாக்கு ஓட்டப்பந்தயம், ஸ்லோ சைக்கிள் உள்ளிட்ட போட்டிகள் சிறுவர்களுக்காக நடக்கும்.

        

பொங்கலுக்கு ஊருக்கு சென்றாலே நாட்கள் போவதே தெரியாது. திரும்பி போக மனமில்லாமல் மீண்டும் நகர்புறத்தை நோக்கி கிராமங்களில் படையெடுப்பார்கள். அவர்களுடன், பொங்கல் கொண்டாடிய நினைவுகளும் உடன் வரும். 

loading...

Advertisement

Advertisement

Advertisement