“தேர்தலை திருவாரூர் மக்களே விரும்பவில்லை” - ஜெயக்குமார்

minister-jayakumar-speech-about-thiruvarur-election

திருவாரூரில் இடைத்தேர்தல் வருவதை அத்தொகுதி மக்களே விரும்பவில்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


Advertisement

திருவாரூர் இடைத்தேர்தல் வரும் 28 ஆம் தேதி நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் ஆதரவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.


Advertisement

இந்தச் சூழலில் திருவாரூர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் சாகுல் அமீது போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார். அதனைதொடர்ந்து அமமுக சார்பில் எஸ்.காமராஜ் என்பவர் போட்டியிடுவார் என டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டார். பின்னர் நேர்காணல் கூட்டத்திற்குப் பின் திமுக தலைவர் ஸ்டாலின், பூண்டி கலைவாணன் வேட்பாளராக போட்டியிடுவார் என அறிவிப்பு வெளியிட்டார்.

ஆனால் அதிமுக சார்பில் இதுவரை வேட்பாளரை அறிவிக்கவில்லை. வேட்பாளருக்கான நேர்காணல் நடைபெற்ற பின்னர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “இன்னும் ஓரிரு நாட்களில் அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்படுவார்” எனத் தெரிவித்தார்.


Advertisement

இதனால் திருவாரூரில் இடைத்தேர்தல் நடக்கலாம் நடக்காமலும் போகலாம் என்று சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை திரு.வி.க. நகர் தொகுதிக்குட்பட்ட கன்னிகாபுரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தபின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

வேட்டி, சேலை, அரிசி உள்ளிட்ட பொருட்களும் அவர்களுக்கு வழங்கப்படும் எனக் கூறினார். டி.டி.வி.தினகரனை அதிமுக ஒரு பொருட்டாகவே நினைத்ததில்லை எனக் கூறிய அமைச்சர் ஜெயக்குமார், தினகரனை ஒரு சுயேட்சை வேட்பாளராக மட்டுமே பார்ப்பதாகவும் தெரிவித்தார். 

திருவாரூர் இடைத்தேர்தலை அத்தொகுதி மக்களே விரும்பவில்லை எனவும் கஜா புயல் பாதிப்பில் இருந்து மக்கள் முழுமையாக மீளாத நிலையில், அங்கு தேர்தல் நடத்துவது சரியாகப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement