[X] Close >

பதிலுக்கு பதில் வசனங்கள்! டிரைலரில் மோதுகிறார்களா ரஜினியும் அஜித்தும் ? 

Hashtag-battle-between-petta-and-viswasam

பேட்ட, விஸ்வாசம் படங்களின் போட்டி தியேட்டரில் தொடங்குவதற்கு முன்னதாகவே டிரைலரில் போட்டி தொடங்கிவிட்டது என்று சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

இயக்குநர் சிவாவுடன் 4வது முறையாக அஜித் கூட்டணி வைத்த படம் விஸ்வாசம். படம் தொடங்கியபோது அஜித்தின் கெட்டப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. பெரிய மீசை, தூக்குதுரை என்ற பெயர் விஸ்வாசம் ஒரு கிராமத்து பின்னணியில் உருவாகும் திரைப்படம் என உறுதியாகியது. அதன் பின் படப்பிடிப்புகள் ஹைதராபாத்திலும், தேனிக்கு அருகேயும் நடைபெற்றன. விஸ்வாசம்’ படத்தின் மோஷன் போஸ்டரை நவம்பர் 27 ஆம் தேதி படக்குழுவினர் வெளியிட்டனர். அதன் பின்னர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இதைத்தொடர்ந்து சமீபத்தில் பாடல்கள் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களின் வரவேற்பையும் பெற்றுள்ளது. படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில் படத்தின் டிரைலர் இன்று வெளியாகி அனைத்து தரப்பினர் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது. டிரைலர் வெளியான சில நிமிடங்களிலேயே விஸ்வாசம் தொடர்பான ஹேஸ்டேக்குகள் உலக அளவிலும் ட்ரெண்ட்டிங்கில் வந்தது.


Advertisement

அஜித் குரலில் அதிரடியான வசனங்கள், பசுமையான காட்சி பின்னணி என நீண்ட நாட்களுக்கு பிறகு முழு கிராமத்து படமாக விஸ்வாசம் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். படத்தில் விவசாயத்துக்கும், கிராமத்துக்கும் முன்னுரிமை கொடுக்கப்படுவதால் கிராமத்துக்குள் நுழைந்து விவசாயத்தை அழிக்க நினைக்கும் கார்ப்ரேட் வில்லன்களை எதிர்க்கும் ஹீரோவின் கதையாக விஸ்வாசம் இருக்கலாம் என்றும் தெரிகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு படம் முழுவதும் வேட்டி சட்டையில் அஜித், அழகான கிராமத்து பெண்ணாக நயன்தாரா, கிராமத்து பின்னணி, குடும்ப உறவுகள், குடும்ப பாசம் என பக்கா குடும்ப பொழுதுபோக்கு படமாக விஸ்வாசம் இருக்கும் என டிரைலர் சொல்கிறது. அதற்கு ஏற்றார்போல படத்துக்கு எந்த கத்தரிப்பும் இல்லாமல் யூ சர்ட்டிபிகேட் கொடுத்துள்ளது தணிக்கைக்குழு.

பொங்கலுக்கு ரஜினியின் பேட்ட திரைப்படமும் ரிலீஸ் ஆக உள்ளதால் சினிமா ரசிகர்களிடையே வரும் பொங்கல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் போட்டி தற்போதே சமூக வலைதளங்களிலும் தொடங்கிவிட்டது. விஸ்வாசம் படத்தின் குடும்ப பின்னணியில் உருவான 'கண்ணான கண்னே' பாடல் வெளியான சில நாட்களிலேயே பேட்ட டிரைலர் வெளியானது. டிரைலரின் கடைசியில் ரஜினி கூறும் ''ஏய் எவனுக்காது பொண்டாட்டி கொழந்த குட்டின்னு செண்டிமெண்ட் இருந்தா அப்படியே ஓடிப்போயிடு.. கொல காண்டுல இருக்கேன் கொல்லாம விட மாட்டேன்'' என்ற டயலாக் குறிப்பிட்டு விஸ்வாசம் திரைப்படத்துக்கு கொடுக்கப்பட்ட வார்னிங் என பேட்ட ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.


Advertisement

இந்நிலையில் இன்று வெளியான விஸ்வாசம் திரைப்படத்தில் அஜித் பேசும் ''பேரு தூக்குதுரை, தேனி மாவட்டம், ஊரு கொடுவிளார்பட்டி, பொண்டாட்டி பேர் நிரஞ்சனா, பொண்ணு பேர் ஸ்வேதா, ஒத்தைக்கு ஒத்த வாடா'' என்ற டயலாக் பேட்ட திரைப்படத்துக்கு கொடுக்கப்பட்ட பதில் என விஸ்வாசம் ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

தியேட்டரில் போட்டி என்பதற்கு முன்னதாகவே டிரைலரில் போட்டி தொடங்கிவிட்டதாக சினிமா ரசிகர்கள் சொல்கிறார்கள். ஆரோக்யமான போட்டி சினிமாவுக்கு தேவையான ஒன்றுதான். ஆனால் அது எல்லையை மீறிவிடக்கூடாது என்பதே அனைவரின் கருத்து. உண்மை என்னவென்றால் வரும் பொங்கல் ரஜினி Vs அஜித் என்பது அல்ல. ரஜினி & அஜித் என்பதே.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close