வெளியேறியது பரிதாப பாகிஸ்தான்: இறுதிப் போட்டியில் இந்தியா-பங்களாதேஷ்

வெளியேறியது பரிதாப பாகிஸ்தான்: இறுதிப் போட்டியில் இந்தியா-பங்களாதேஷ்
வெளியேறியது பரிதாப பாகிஸ்தான்: இறுதிப் போட்டியில் இந்தியா-பங்களாதேஷ்

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா -பங்களாதேஷ் அணிகள் நாளை மோதுகின்றன.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஹாங்காங் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தான், ‘பி’ பிரிவில் இருந்து ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு முன்னேறின. இரண்டு லீக்கிலும் தோல்வி யடைந்த இலங்கை, ஹாங்காங் அணிகள் வெளியேறிவிட்டன.

சூப்பர்-4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும். அதன்படி சூப்பர்-4 சுற்று ஆட்டத்தில் பங்களாதேஷ், பாகிஸ்தான் அணிகளை வென்று இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறிவிட்டது. இந்திய அணி, ஆப்கானுடன் மோதிய சம்பிரதாயப் போட்டி ’டை’யில் முடிந்தது. இந்நிலையில் சூப்பர் 4 சுற்றின் கடைசி லீக் போட்டி அபுதாபியில் நேற்று நடந்தது. இதில் பாகிஸ்தான் -பங்களாதேஷ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற பங்களாதேஷ் பேட்டிங்கை தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியில், ஃபார்மில் இல்லாத வேகப்பந்துவீச்சாளர் முகமது ஆமிர் உட்கார வைக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ஜூனைத் கான் சேர்க்கப்பட்டிருந்தார். பங்களாதேஷ் தரப்பில் காயம் காரணமாக ஷகிப் அல் ஹசன் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக மொமினுல் ஹக் சேர்க்கப்பட்டிருந்தார்.

பங்களாதேஷ் தொடக்க ஆட்டக்காரர்களாக லிட்டன் தாஸ், சவுமியா சர்கார் களம் இறங்கினார்கள். பாகிஸ்தானின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடக்க வீரர்கள் தங்கள் விக்கெட்டை எளிதில் பறிகொடுத்தனர். லிட்டன் தாஸ் 6 ரன்னிலும் சவும்யா சர்கார் ரன் ஏதும் எடுக்கா மலும் ஜுனைத் கான் பந்துவீச்சில் வீழ்ந்தனர். அடுத்த வந்த மொனினுல் ஹக், ஷாகின் அப்ரிதி பந்துவீச்சில் 5 ரன்னில் அவுட் ஆக, 12 ரன்களை சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்து அந்த அணி தடுமாறியது.

பிறகு முஷிஃபிகுர் ரஹிம் முகமது மிதுனுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர். மிதுன் 60 ரன்கள் எடுத் த நிலையில் வெளியேறினார். இருவரும் இணைந்து 4-வது விக்கெட்டுக்கு 144 ரன்கள் குவித்து அணியை மீட்டனர். அரைசதம் அடித்த முஷ்ஃபிகுர் ரஹிம் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 99 ரன்களில் ஷாகின் அப்ரிதி பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் சர்பிராஸ் அகமதுவிடம் கேட்ச் கொடுத்து ஏமாற்றமளித்தார். மற்றவர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. மஹமத்துல்லா 25 ரன்கள் எடுத்தார். இதைய டுத்து அந்த அணி 48. 5 ஓவர்களில் 239 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

பாகிஸ்தான் தரப்பில் ஜுனைத் கான் 4 விக்கெட்டும் ஷாகின் அப்ரிதி, ஹசன் அலி தலா இரண்டு விக்கெட்டும் ஷதாப் கான் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 240 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பாகிஸ்தான் களமிறங்கியது. அந்த அணியின் பஹர் ஜமான், இமாம் உல் ஹக் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். பங்களாதேஷ் பந்துவீச்சில் அனல் பறந்தது. இதனால் பாகிஸ்தான் அணியின் விக்கெட்டுகள் சீரான இடை வெளியில் விழுந்தன. இமாம் உல் ஹக் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 81 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஆசிப் அலி 31 ரன்னும், அனுபவ வீரர் சோயிப் மாலிக் 30 ரன்னும் எடுத்து வெளியேறினர். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.


இதனால் பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 37 ரன்கள் வித்தி யாசத்தில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில் முஸ்தபிஷூர் ரஹ்மான் 4 விக்கெட்டுகளும், மெஹித் ஹசன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 99 ரன்கள் விளாசிய முஷிஃபிகுர் ரஹிம் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த தோல்வியை அடுத்து ஆசிய கோப் பை இறுதிப் போட்டியில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறியது. 

இதையடுத்து நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியாவை சந்திக்கிறது பங்களாதேஷ். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com