“இது எங்க பிக்கி பேங்க் காசு” - மழலைகளிடம் வெளிப்பட்ட மனிதநேயம்

Kerala-Flood-Fund---2-Child-Give-the-their-Piggy-bank-money-to-Puthiya-Thalaimurai

கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய தலைமுறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தில் பொதுமக்கள் நிவாரண பொருள்கள் அளித்து வருகின்றனர். கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்காக தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை, நெல்லை ஆகிய 5 இடங்களில் புதிய தலைமுறை சார்பில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 


Advertisement

இங்கு அப்பகுதி பொதுமக்கள் நிவாரண பொருள்களை அளித்து வருகின்றனர். அதன்படி சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள புதிய தலைமுறை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தில் பொதுமக்கள் நிவாரண பொருள்கள் அளித்து வருகின்றனர். இதில் நேற்று நடைபெற்ற இரண்டு சம்பவங்கள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. நேற்று இரண்டு பெண் குழந்தைகள் அவர்களது தந்தையுடன் புதிய தலைமுறை அலுவலகத்திற்கு வந்தனர். வெள்ள நிவாரணப் பணிகளுக்கு தங்கள் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த பணத்தை கொண்டு வந்தனர். நாம் அந்தக் குழந்தைகளிடம் பணம் நேரடியாக வாங்க மாட்டோம் என்று கூறினோம். அந்தக் குழந்தைகள் “நாங்க அப்பா கிட்ட இருந்து காசு வாங்கித் தரல, நாங்க எங்க பிக்கி பேங்க்ல (Piggy Bank) இருந்து எடுத்துத் தரோம்” என்று கூறினார்கள்.


Advertisement

அதற்கு நாம், “நாங்கள் பணம் நேரடியாக வாங்குவதில்லை, வங்கிக் கணக்கில் செலுத்தலாம்” என்பதையும் கூறினோம். உடனே அந்த மழலைகளில் மூத்த பெண், “கேரளாவுக்கு நாங்க என்ன வாங்கித் தரலாம்” என்று கேட்டார். புது போர்வை, புதுத் துணிகள், பிஸ்கட்ஸ், ரஸ்க், பால் பவுடர் இதுபோன்று ஏதேனும் வாங்கிக் கொடுக்கலாம் என்றோம். இரவு 10.00 மணிக்கு அவர்களது தந்தையுடன் மீண்டும் மழலைகள் வந்தனர். 14 உயர்தர கம்பளி போர்வைகளோடு! அவற்றின் மதிப்பு ரூ.6000 இருக்கும். அந்தக் குழந்தைகள் பெயர் திவ்யா மற்றும் தர்சினி. அவர்கள் இருவருக்கும் புதிய தலைமுறையின் நன்றிகள்!


Advertisement

இதேபோன்று, நேற்று மதியம் நடுத்தர வர்க்கத்தை அப்பா, மகன் (4 வயது) புதிய தலைமுறை அலுவலகத்திற்கு நிவாரணப் பொருட்களாக வழங்க வந்தனர். அவர்கள் ஒரு முறை மட்டும் உடுத்திய துணிகளை கொண்டு வந்து தந்தனர். நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக, பழைய உடைகளை வாங்குவதில்லை என விளக்கிக் கூறினோம். அதற்கு அந்தச் சிறுவன், “அப்பா நாம புதுத் துணி வாங்கிக் கொடுக்கலாம்பா” என்று கூறினார். அந்தத் தருணத்தில், தந்தையின் முகத்தில் புது உடைகள் வாங்கப் பணமில்லை என்ற வருத்தம் தெரிந்தது. இருப்பினும் அவர்களின் மனிதநேயம் ஒரு நிமிடம் நம்மை உறைய வைத்தது. ஏழ்மையிலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய முயன்ற அந்தத் தந்தை, மகனுக்கு புதிய தலைமுறையின் நன்றிகள்.

சென்னையில் மட்டுமின்றி, திருச்சி, மதுரை உள்ளிட்ட இடங்களிலும் புதிய தலைமுறை உதவி மையத்தில் நிவாரண பொருள்கள், மருந்து பொருள்கள் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் வழங்கி வருகின்றனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement