அண்ணா பல்கலை. பதிவாளர் கணேசன் அதிரடி நீக்கம்

Anna-university-scams-issue-Registrar-Ganesan-is-dismissed

அண்ணா பல்கலைக்கழக முறைகேடு புகார்களைத் தொடர்ந்து பல்கலைக்கழக பதிவாளர் கணேசன் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக இயற்பியல் பேராசிரியர் ஜெ. குமார் பொறுப்பு பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


Advertisement

கடந்த 2017-ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழத்தின் கீழ் தேர்வெழுதிய மாணவர்களில் 3 லட்சத்து 2 ஆயிரத்து 380 மாணவர்கள் விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்திருந்தனர். மறுமதிப்பீட்டுக்குப் பின் அவர்களில் 73 ஆயிரத்து 733 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 16 ஆயிரத்து 636 பேர் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் மாணவர்களிடம் தலா பத்தாயிரம் ரூபாய் லஞ்சமாக பெற்றுக்கொண்டு மறுமதிப்பீட்டில் தேர்ச்சியடைய வைத்ததாக அண்ணா பல்கலைக்கழகத்தின் அப்போதைய தேர்வுக் கட்டுப்பாட்டாளரான உமா உட்பட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.  அதனைதொடர்ந்து உமா முறைகேட்டில் ஈடுபட்டது நிரூபணமானதால் இடைநீக்கம் செய்யப்பட்டார்.


Advertisement

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் மறுமதிப்பீடு போன்ற பல்வேறு முறைகேடுகளில் பதிவாளர் கணேசனுக்கு தொடர்பு இருப்பதாக பல்கலைக்கழக ஆசிரியர்கள் குற்றம்சாட்டினர். இதனால் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆளுநர் மற்றும் துணைவேந்தருக்கு கடிதம் எழுதியிருந்தனர். இதைத்தொடர்ந்து  பல்கலைக்கழக பதிவாளர் கணேசன் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கணேசனின் பதவிக்காலம் கடந்தாண்டு முடிவடைந்த நிலையில், அவருக்கு பதவி நீட்டிப்பு அளிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement