[X] Close >

’தடம்’ படத்துல பல ஆச்சரியங்கள் இருக்கு! இயக்குனர் மகிழ் திருமேனி பேட்டி

Director-Mahil-thirumeni-Interview

‘’பொதுவாகவே ஒரு எழுத்தாளனுக்குள்ள நாலஞ்சு கரு எப்போதும் ஓடிட்டே  இருக்கும். அதுல ஏதாவது ஒண்ணு மட்டும், ’முதல்ல என்னை எழுது’ன்னு தொடர்ந்து  நச்சரிச்சுட்டே இருக்கும். அந்த மாதிரி என்னை எழுதத் தூண்டிகிட்டே இருந்த கதைதான், ’தடம்’ , இந்தப் படம் கண்டிப்பா எனக்கும் அருண் விஜய்-க்கும் முக்கியமான படமா இருக்கும்’ என்கிறார்  இயக்குனர் மகிழ் திருமேனி. ’முன்தினம் பார்த்தேனே’, ’தடையறத்தாக்க’, ’மீகாமன்’  படங்களுக்குப் பிறகு இப்போது இதை இயக்கி இருக்கிறார். 


Advertisement

ஷுட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன.


Advertisement

 '’மீகாமன் படத்துக்காக சில ஆய்வுகள் பண்ணும்போது, ஒரு விஷயம் என் கண்ணுல பட்டது. அது எனக்கு ஆச்சரியமா இருந்தது, இப்படியெல்லாம் கூடவா நடக்கும்னு. அந்த  ஆச்சரியத்துக்கு காரணம், அது நிஜம்ங்கறதுதான். அது ஒரு திரைப்படத்துக்கான விஷயமா  தோணுச்சு. ’மீகாமன்’ முடிஞ்சதும் இதை அடுத்தப்படமா பண்ணணும்னு முடிவு  பண்ணினேன். அதன்படி ’தடம்’ படத்தை ஆரம்பிச்சேன். இதுக்கும் நிறைய ஆய்வுகளை தொடந்தேன். இந்தக் கதையும் அப்படியே தேடித் தேடி தன்னைத்தானே எழுதி முழுமைப் படுத்திக்கிச்சு. இது ஒரு டிபிக்கல், மகிழ்திருமேனி டைப் ஆஃப் ஆக்‌ஷன் படம்  இல்லை. இது இன்வஸ்டிகேட்டிவ் திரில்லர். இதை குடும்பத்தோட எல்லாரும் பார்க்கணும்னு  ஆசை. எல்லாருமே ரசிப்பாங்க. காலேஜ் பசங்க, பொண்ணுங்க, பெற்றோர்,  உறவினர்கள்னு எல்லாருமே தங்களோட வாழ்க்கையை இதோட தொடர்புப்படுத்தி பார்த்துக்க முடியும். ஆனாலும் கதையைத் தாண்டி நான் போகலை. பொதுவாகவே என் படங்களோட திரைக்கதை, கதையை தாண்டி போகாது. இதுவும் அப்படித்தான். இந்தப் படம் எப்ப ரிலீஸ் ஆகும்னு ஓர் இயக்குனரா எனக்கும் பெரிய ஆவல் இருக்கு. 

படத்தோட டீசர்ல ரத்தம்...
ஆங்... முதல்ல சொல்லிடறேன். இது என்ன மாதிரியான கதை அப்படிங்கறதை வெளிப்படுத்ததான் அந்த ரத்தம். மற்றபடி படத்துல ரத்தமோ, கோரமான காட்சிகளோ சுத்தமா கிடையாது. அதீத வன்முறையோ, ரத்தத் தெறிப்புகளோ, நிச்சயம் இருக்காது. 

அருண் விஜய்யோட உங்களுக்கு இது இரண்டாவது படம்...


Advertisement

ஆமா. ’தடையறத் தாக்க’ படத்தை இரண்டு பெரிய ஹீரோக்கள் பண்ணணும்னு  காத்திருந்தாங்க. எனக்கு அதை அருண் விஜய்தான் பண்ணணும்னு ஆசை. ஏன்னா, அந்தக்  கதைக்கு அவர் பொருத்தமா இருந்தார். அந்தக் கால கட்டத்துல அவருக்கு, ஒரு அடுத்த  லெவல் படம் தேவையா இருந்தது. அப்படி உருவாக்குன படம், ’தடையறத் தாக்க’. அந்தப்  படம் வெளியானதும், ஒரு பத்திரிகைல, ‘அருண் விஜய் உங்க இன்னிங்ஸ்,  இங்கயிருந்துதான் ஸ்டார்ட் ஆகுது’ன்னு எழுதியிருந்தாங்க. ’தடையறத் தாக்க’ படத்துல  இருந்தே அடுத்த படம் சேர்ந்து பண்ணுவோம்னு கேட்டுட்டே இருந்தார். அப்புறம் அவர்  ‘என்னை அறிந்தால்’ படத்தை முடிச்சார். பிறகு இதை ஆரம்பிச்சோம். அருண் விஜய்யை பொறுத்தவரை நான் அவருக்கு ஒரு சகோதரர் மாதிரி. ’தடையறத் தாக்க’ அவரை ஒரு முழுமையான ஆக்‌ஷன் ஹீரோவா காட்டுச்சு. இந்தப் படம், வேற  மாதிரி காட்டும். எங்க ரெண்டு பேர் கேரியர்லயுமே இந்த படம் முக்கியமானதாக இருக்கும்.

3 ஹீரோயினாமே..?

தானியான்னு ஒரு ஹீரோயின் அறிமுகமாகுறாங்க. பெங்களூர் பொண்ணு. இவங்க  தெலுங்கு, கன்னடத்துல நடிச்சிட்டு இருக்காங்க. அடுத்து ஸ்ருதின்னு ஒரு மாடல்  அறிமுகமாறங்க. மூன்றாவதா வித்யா பிரமோத் பண்றாங்க. அப்புறம்  பெப்சி விஜயன், சோனியா அகர்வால், யோகி பாபு...ன்னு நிறைய பேர் நடிக்கிறாங்க. எல்லா கேரக்டருமே கதைக்கு தேவையானதா இருக்கும்.

உங்க முதல் படம் தவிர, மற்ற படங்கள் த்ரில்லராவே இருக்கே, ஏன்? ரொம்ப பிடிக்குமோ?

எனக்கு ரொம்ப பிடிச்ச ஜானர்னா, டிராமாவும் காமெடியும்தான். அதுக்குப் பிறகு  கேட்டீங்கன்னா, ரொமான்ஸ். என் படங்கள்ல ரொமான்ஸ் நல்லாருக்கும்னு  நிறைய பேர் சொல்லியிருக்காங்க. எனக்கு பிடிச்ச ஜானர் இதுவா இருந்தாலும் என்னைப் பொறுத்தவரை எல்லா ஜானர்லயும் படம் பண்ணணும்னு ஆசை இருக்கு. மீகாமன் படத்தை  எடுத்துகிட்டா, த்ரில்லர் மாதிரி இருக்கும், கூடவே ஆக்‌ஷனும் இருக்கும். ’தடம்’   த்ரில்லர் டைப் படமா இருந்தாலும் ஆக்‌ஷன் அதிகம் இருக்காது. ஒரு கிரைம் நடக்குது. அது  பற்றிய விசாரணைதான் படம். கதையை உண்மைக்கு நெருக்கமா சொல்ல ரொம்ப  மெனக்கெட்டிருக்கோம். இதுவும் த்ரில்லர் படமா அமைஞ்சது தற்செயல்தான். 

 நல்ல தமிழ்ப் பெயரை டைட்டில்ல பயன்படுத்தறீங்களே...

முதல் படத்துல கவுதம் வாசுதேவ் மேனன் தொடர்பு இருக்கணும்னு நினைச்சேன். அதனால  அவர் இயக்கிய படத்து பாட்டுல இருந்து எடுத்து ’முன்தினம் பார்த்தேனே’ன்னு டைட்டில் வச்சேன். ’தடையறத் தாக்க’ டைட்டில் வேற மாதிரி. எப்படின்னா, ’காக்க காக்க’ படம் பண்ணும்போது எல்லா அசிஸ்டென்ட் டைரக்டர்கிட்டயும் படத்துக்கு டைட்டில் கேட்டார் டைரக்டர் கவுதம் வாசுதேவ் மேனன். அப்ப நான் சொன்னது, ’தடையறத் தாக்க’. இது அவருக்குப் பிடிச்சது. ஆனா, அந்த படத்துக்கு முதல்ல இருந்த  தயாரிப்பாளர் அதை வேண்டாம்னு சொன்னதால, காக்க காக்கன்னு மாத்தினோம். அந்த  டைட்டில் எனக்கு பிடிச்சதால, என் இரண்டாவது படத்துக்கு அதை வச்சேன். எனக்கு  தமிழ்ப்பெயர்கள் வைக்கிறதுதான் பிடிக்கும். நாம தமிழ்ப் படம்தானே பண்றோம். இதுக்கு ஏன்  ஆங்கில பெயர். அப்படி வச்சாலும் அதுல அந்நியத்தன்மை இருக்கும். போலியா தெரியும்.  அதனால அதுல எனக்கு விரும்பம் இல்லை.

எல்லா இயக்குனருக்குள்ளும் நடிகர்கள் இருக்காங்க. கவுதம் கூட, இப்ப நடிக்க  ஆரம்பிச்சுட்டார்... உங்களுக்கு?

என்னைய நிறைய இயக்குனர்கள் நடிக்கக் கூப்பிட்டிருக்காங்க. ’மின்னலே’ நேரத்துலயே  டைரக்டர் செல்வராகவன் சொன்னார். ’என் படத்துல உன்னை நடிக்க வச்சு  பெரிய ஹீரோவாக்கி காட்டறேன்’ன்னு. எனக்கு சிரிப்புதான் வந்தது. அவர்  விளையாட்டுக்குச் சொன்னாரா, சீரியசா சொன்னாரான்னு தெரியாது. அப்புறம் இன்னும்  நிறைய இயக்குனர்கள் கேட்டாங்க. எனக்கு அதுல விருப்பம் இல்லை. இயக்கத்தையே  ஒவ்வொரு படத்துலயும் அனுபவபூர்வமா கத்துக்கிட்டிருக்கோம். அதனால நடிப்பை தனி கிராஃப்டா பார்க்கிறேன். நடிக்கப் போனா, என் இயக்குனர் வேலை பாதிக்கும்னு நினைக்கிறேன்.  இயக்குனரா இருக்கிறது போதும். இதுவே எனக்கு மகிழ்ச்சியா இருக்கு.

அனுராக் காஷ்யப்புக்கு நீங்க டப்பிங் பேசறீங்களாமே?
’காக்க காக்க’ படத்துல வொர்க் பண்ணும்போது என்னை டப்பிங் பேசச் சொன்னாங்க.  ’தடையறத் தாக்க’ படத்துல தயாரிப்பாளர்கள் பேசச் சொன்னாங்க. மறுத்திருக்கேன்.  ஏன்னா, என் குரல் எனக்கே பிடிக்காது. அப்புறம் மாடுலேஷன் வராது. இயக்குனர் அஜய்  ஞானமுத்து என்னை அழைச்சார். ஒரு இயக்குனரா எனக்கு அவரைப் பிடிக்கும். ’இமைக்கா நொடிகள்’ படத்தோட டிரைலரை காண்பிச்சார். பிடிச்சிருந்தது. அனுராக்  காஷ்யப்புக்கு நீங்கதான் டப்பிங் பேசணும்னு சொன்னார். முதல்ல மறுத்தேன். அவர் பேசி கன்வின்ஸ்  பண்ணிட்டதால நான் பேச ஆரம்பிச்சுட்டேன்.

அடுத்து?
குடும்பத்தோட உட்கார்ந்து ரசிக்கிற மாதிரி காமெடி, ரொமான்ஸ் படங்கள் பண்ண போறேன்.  அதுல ஒரு படத்துல என் குரு கவுதம் வாசுதேவ் மேனன் நடிக்கப் போறார். அவர்கிட்ட  இன்னும் பேசலை. ஆனா, எப்பவோ ஒரு முறை நடிக்கிறதா வாக்குக் கொடுத்திருக்கார். அந்த வாக்கை இப்ப கேட்கப் போறேன்.
 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close