[X] Close >

'தர்ம யுத்தம்’ போயாச்சு.. ‘ரஜினி யுத்தம்’ வந்தாச்சு... அதிமுக புதிய வேகம்

rajinikanth-vs-aiadmk--puthiya-thalaimurai-special-story

அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘நமது புரட்சி தலைவி அம்மா’ பத்திரிகை புதிய வேகம் எடுத்திருக்கிறது. ‘நமது எம்.ஜி.ஆரில்’ ஏற்கெனவே சித்திரகுப்தன் வகித்த பதவியை இப்போது ‘குத்தீட்டி’ கையில் எடுத்திருக்கிறார். இன்று வெளியான ‘நமது புரட்சி தலைவி அம்மா’ நாளிதழில் ரஜினிக்கு எதிராக ‘குத்தீட்டி’ கம்பு சுற்றி இருக்கிறார். 


Advertisement

“உங்க ‘வலை’வீச்சு எல்லாம் எங்க ‘இலை’ வீச்சிடம் எடுபடாது’ என வசனம் பேசியிருக்கிறார். உண்மைதான். இந்த ‘வலை’ வீச்சு ‘இலை’ வீச்சுக்கு நிகரில்லைதான். ஆனால் வலைதள வேகம் வேறுவிதமானது என்பதையும் உலகம் நிரூபித்திருக்கிறது என்பதை குத்தீட்டி புரிந்து கொள்வாரா எனத் தெரியவில்லை. ‘வால் ஸ்ட்ரீட்’ போராட்டம் ஃபேஸ்புக்கால் வந்தது. சாலையை மறித்து நியாயம் கேட்கத் திரண்ட மெரினா கூட்டம் எல்லாம் ஃபேஸ்புக்கால் வந்தது. எல்லாம் இந்த இளம் தலைமுறை. அவர்களுக்கு ‘இலை’தெரியாது. வலை தெரியும். உங்களுக்கு வலை தெரியாது. இலை தெரியும். இதுதான் பிரச்னை.


Advertisement

ரஜினி, எம்.ஜி.ஆரின் ஆட்சியை கொடுப்பேன் என்றது இவர்களுக்குப் பயத்தை தருகிறது. அப்படி பார்த்தால் அம்மா இருக்கும் வரை நீங்கள் எம்ஜிஆர் பெயரையே பயன்படுத்தவில்லையே? எம்ஜிஆர் நூற்றாண்டுகூட அம்மா மறைவிற்குப் பிறகுதானே நீங்கள் தலையில் தூக்க ஆரம்பித்தீர்கள் என்ற கேள்வி எழுப்பாமல் இருந்தால் உலகம் நம்மை மன்னிக்காது. அம்மா, அம்மா என பேசியக் காலத்தில் எம்ஜிஆர் என்ற முகம் உங்கள் கனவில்கூட வந்திருக்காது என்பதே உண்மை. 

கடந்த திங்கள்கிழமை ரஜினி எம்ஜிஆர் சிலை திறப்பில் கலந்து கொண்டார். அவர் வேண்டாம் என மறுத்ததாகவும். ஆனால் தொடர்ந்து கட்டாயப்படுத்தியதால் வந்ததாகவும் அவர் மேடையில் பேசியிருந்தார். ஜெயலலிதா இருக்கும் வரை நீங்கள் ஏன் அரசியலுக்கு வரவில்லை. வெற்றிடம் இருப்பதால் இப்போது வருகிறீர்களா? ஜெயலலிதா இருக்கும்போது வர பயமா? என அடுக்கடுக்கான புகாருக்கு ரஜினி பதிலளித்தார். ஆமாம், தமிழ்நாட்டில் வெற்றிடம் வந்துள்ளது. தலைமையில் ஒரு வெற்றியிடம் உள்ளது. தமிழ்நாட்டிற்கு தலைவர் தேவை. தலைமை தேவை. என்னால் அந்தத் தலைமையை கொடுக்க முடியும். எம்ஜிஆர் போல நல்லாட்சியை கொடுக்க முடியும் என உறுதி குறையாமல் பேசினார் ரஜினி. 

ரஜினி அப்படி பேசியது சரியா? தவறா? என்பதல்ல; ரஜினிக்கு இப்போது வந்துள்ள தெளிவு ஏன் இத்தனை காலம் வரவில்லை என்பதுதான் உதைக்கிறது. ஜெயலலிதா ஒரு நல்ல தலைவர் என்கிறார். அவர் காலத்தில் நடந்த ஊழல்கள் அவருக்குத் தெரியும். ‘இனிமேல் கடவுளே நினைத்தாலும் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது’ என உரிய நேரத்தில் உண்மையை பேசியவர் ரஜினி. ஆனால் அந்த உண்மை அவருக்கு இன்று கசக்கிறது. அதுதான் பிரச்னை. அன்று பேசிய போது அதில் ஒரு நேர்மை இருந்தது. ஆகவே மக்கள் உங்களை அரசியலுக்கு அழைத்தார்கள். ஆனால் அரியணை மீது விருப்பம் இல்லாமல் நேர்மையாக ஒதுங்கிக் கொண்டார் ரஜினி. அந்த உண்மை அவர் மகள் திருமணத்திற்குப் பிறகு அவருக்கே பிடிக்காமல் போனது. ‘பத்திரிகை வைத்ததும் பழைய விஷயத்தை மறந்து திருமணத்திற்கு வந்து வாழ்த்தினார் ஜெயலலிதா’என சொந்தக் கதையை பேசினார் ரஜினி. அவர் கல்யாணத்தில் கலந்து கொண்டது அவரது நாகரிகத்தை காட்டுகிறது. அன்று ரஜினி அநியாத்தை எதிர்த்தது அவரது உண்மை முகத்தைக் காட்டியது. சாதாரண மக்களுக்கே இதன் இடைவெளி புரியும் போது இவருக்கு இன்று பிடிபடாமல் பிசகுகிறாரே ஏன்? அதான் பிடிபடவில்லை நமக்கு.


Advertisement

ஜெயலலிதா இருக்கும் வரை கட்சி கட்டுப்பாடுடன் இருந்தது. அவருக்கு இணையான தலைமை இந்தியாவிலேயே இல்லை என்றார் ரஜினி. ஆமாம். அவர்காலத்தில் ஜனநாயகம் எப்படி இருந்தது? சுயமரியாதை எப்படி இருந்தது? பத்திரிகை சுதந்திரம் எப்படி இருந்தது?  எல்லா அமைச்சர்களும் எந்தளவுக்கு செயலற்று போய் இருந்தார்கள். எல்லாம் அம்மா, அம்மா என அவர்கள் எப்படி சேவை செய்து கொண்டிருந்தார்கள். அதை எல்லாவற்றையும் ரஜினி மறந்துவிட்டாரா? அல்லது அதையும் ஆதரிக்கிறாரா? இதை நாம் தெரிந்து கொண்டால் அவரையும் அவரது மனதையும் புரிந்து கொள்ள முடியும்.

என்னால் நல்ல ஆட்சியை தர முடியும் என இப்போது சொல்ல ரஜினிக்கு நா எழுந்துள்ளது. அதற்கு அவருக்கு உரிமை உண்டு. ஆனால் அதற்கு அவர் ஏன் எம்ஜிஆர் சாயம் பூசுகிறார் என்பதை குறித்து அதிமுக கேள்வி எழுப்புகிறது. ஒரு விஷயம் முக்கியம். எம்ஜிஆர் அதிமுகவை உறுவாக்கினார். ஆனால் அவர் அதிமுகவிற்கு மட்டும் சொந்தமானவர் அல்ல. அதையும் தாண்டி அவர் ஒரு மக்கள் விரும்பும் தலைவர். ஆகவே அவர் ரஜினிக்கு இன்று தேவைப்படுகிறார். ஆகவேதான் அதை அதிமுக எதிர்க்கிறார்.

இன்று அதிமுக வட்டம் எம்ஜிஆரை இப்போது காப்பாற்ற போராடுகிறது. ஆனால் அதற்கு முன்? கட் அவுட்களில் எம்ஜிஆர் 90 களில் இருந்தார். 2000திற்கு பிறகு அவர் எங்கே போனார்? என்பது அதிமுகவினர் நினைத்து பார்த்து பதில்தர வேண்டும். இதே ஜெயலலிதா உயிரோடு இருந்தக் காலத்தில் எம்ஜிஆர் இருட்டடிப்பு செய்யப்படுகிறார் என்ற கேள்வி எழுப்பப்படாமல் இல்லை. அதற்கு எங்கேயும் ஜெயலலிதா பதில் தந்ததாக ஞாபகம் இல்லை. அப்படி இருக்கும் போது அதிமுகவினருக்கு ஏன் இந்த எம்ஜிஆர் பாசம்? அங்குதான் அவர்களின் பயம் இருக்கிறது. ரஜினி அப்படியே எம்ஜிஆரை தூக்கிக் கொண்டுப்போய்விட்டால்? இவர்களின் கதி? அதற்காகதான் அதிமுக ரஜினியின் கனவை காலி செய்ய நினைக்கிறது.

இந்த இடத்தில் ரஜினிக்கு ஒரு விஷயத்தை புரிய வைக்க வேண்டும். இந்தப் பிம்ப அரசியலில் இருந்து நீங்கள் வெளியே வாருங்கள். அது எம்ஜிஆராக இருக்கலாம். அண்ணாவாக இருக்கலாம். யாராகக்கூட இருக்கலாம். முதலில் ஒழிக்க வேண்டியது இந்த ரசிக மனோநிலையை. அதை ரஜினி செய்வாரா எனத் தெரியவில்லை. ஒரு நல்ல விஷயம் அவர் கட் அவுட் வைப்பதை வேண்டாம் என்கிறார். ஆனால் படத்தின் வெளியீட்டின் போது பால்குடம் ஊற்றினால் மகிழ்வார். இந்த முரண்களை கொஞ்சம் அவர் கவனிக்க வேண்டும். 
‘நேர்மை, தூய்மை, ஆன்மிகம், சாதி மறுப்பு, மத சார்பற்ற அரசியல்’ எல்லாம் ரஜினி பேசுகிறார். ஆனால் மத அடையாளத்தை கொடுக்கும் ருத்ராட்சையை முத்திரையாக ஏற்கிறார். எப்போது பாபா பக்கத்திலேயே போஸ் கொடுக்கிறார். மறந்தும் ஒரு சிலுவையின் பக்கமோ பாபரின் பக்கமோ அவர் நிற்பதே இல்லை. வீட்டில் கூட வீர சிவாஜிக்குதான் புகைப்படம் இருக்கிறது. இந்த அடையாளம் எல்லாம் அவர் வீட்டில் உள்ளே இருப்பதில் தவறு இல்லை. ஆனால் உங்கள் மேடையை பொதுவாக மாற்றுங்கள். அது முக்கியம். எம்ஜிஆர் அந்த அடையாளத்தைக் கட்டி எழுப்பினார். சமய சார்பற்றவராக அவர் வாழ்ந்துக் காட்டினார். அதையும் ரஜினி கவனத்தில் கொள்ள வேண்டும். இப்போதைக்கு ஒன்று உறுதி; ரஜினி வீட்டிலும் பொது மேடைகளிலும் ஒரு மதச் சார்போடுதான் இருக்கிறார். அதை மட்டுமே இப்போதைக்கு உறுதியாகக் கூற முடியும்.
 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close