[X] Close >

2018 யூனியன் பட்ஜெட் - எதிர்பார்ப்புகள் என்னென்ன?

2018-Union-Budget--People-expectations

அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு பட்ஜெட் இது என்பதால் இந்த பட்ஜெட் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இன்னொரு பக்கம் ஜி.எஸ்.டி.க்குப் பிறகான முதல் பட்ஜெட் என்பதால் இதன் பொருளாதார முக்கியத்துவங்களும் அதிகம்தான்...


Advertisement

தேர்தல் வரும் போதெல்லாம் மக்களுக்கு இலவசங்களை அறிவிக்கும் பட்ஜெட்களே பெரும்பாலும் எதிர்பார்க்கப்படுகின்றன, ஆனால் கடந்த 22ஆம் தேதியில் ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பிரதமர் மோடி,


Advertisement

’2019-ம் ஆண்டு நடக்கும் பொதுத் தேர்தலுக்காக வரும் பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இருக்கும் என்பதை நம்பவில்லை. சாமானிய மக்கள் இலவசங்களையும், கவர்ச்சி அறிவிப்புகளையும் கேட்பதில்லை. அவர்கள் நேர்மையான ஆட்சியை எதிர்பார்க்கிறார்கள். அவ்வாறு கேட்கிறார்கள் என நாம் கற்பனை செய்து கொள்கிறோம்’ - என்று பேசியிருந்தார். அதனால் இந்த பட்ஜெட் கவர்ச்சிகரமாக பட்ஜெட்டாக, தேர்தல் பட்ஜெட்டாக இருக்க வாய்ப்புகள் குறைவு என்றே கருத வேண்டியுள்ளது. ஆனால், பாஜகவுடனான 29 ஆண்டுகாலக் கூட்டணியை சிவசேனா முறித்துக் கொண்டுள்ள நேரத்தில், அடுத்தடுத்து 8 மாநிலத் தேர்தல்கள் இவ்வாண்டில் அணிவகுக்கும் சூழலில் இலவச அறிவிப்புகளை முழுதும் புறம்தள்ளும் ஒரு பட்ஜெட்டை பாஜக அரசு வழங்குமா என்பதும் கேள்விக்கு உரியதே.

இன்னொரு பக்கம் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களுக்கான வரியைக் குறைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன, அமெரிக்கா தனது கார்ப்பரேட் வரியை 35% என்பதில் இருந்து 21%ஆகக் குறைத்து உள்ள நிலையில் அரசு அதற்குப் பணியக் கூடும் என்பதே கணிப்பாக உள்ளது. கார்ப்பரேட்களுக்கு வரிகள் குறைக்கப்படும் போது, சாமானியர்களின் எதிர்பார்ப்புகள் புறம்தள்ளப்பட்டால் அது எதிர்மறையான விமர்சனங்களையே உருவாக்கும். பட்ஜெட் குறித்த பிரதான எதிர்பார்ப்புகளைப் பார்ப்போம்.

தனிநபர் வருமானவரி வரம்பு


Advertisement

இந்த பட்ஜெட் மீது மக்களுக்கு நியாயமான எதிர்பார்ப்புகளே நிறைய இருக்கின்றன. அதில் பிரதானமானது தனிநபர் வருமானவரி வரம்பில் தளர்வு.

இந்தியாவில் இப்போது தனிநபர் வருமானவரி வரம்பு 2.5 லட்சமாக உள்ளது. 2.5 லட்சம் என்ற வருமானம் குடும்பச் செலவுகளுக்கே போதாது என்ற நிலையில், கடந்த ஆண்டே இந்த வருமான வரி வரம்பை 5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் அதனை அரசு ஏற்கவில்லை. 2.5 லட்சத்திற்கும் மேலே உள்ளவர்களுக்கான வரி சதவிகிதம் மட்டுமே 10ல் இருந்து 5ஆக குறைக்கப்பட்டது. இப்போது நாடெங்கும் ஜி.எஸ்.டி. அமலில் உள்ளநிலையில், உலகின் மிக அதிக ஜி.எஸ்.டி.யை மக்களிடம் இருந்து வசூலிக்கும் நாடான இந்தியா இந்த வரம்பை உயர்த்த வேண்டிய கட்டாயம் உள்ளது.

சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்ட பாஜகவினரும், பல பொருளாதார அறிஞர்களும் ‘இவ்வளவு ஜி.எஸ்.டி.விதிக்கப்படும் போது தனிநபர் வருமான வரியே தேவையில்லை’ – என்றே கூறுவது இங்கு குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ஆக்ஸ்பாம் வெளியிட்ட ஆய்வுகள் கடந்த 2017ஆம் ஆண்டில் இந்தியாவில் உருவான செல்வங்களில் 73% செல்வம் 1% பணக்காரர்களிடமே சென்றது என்று வெளியிட்ட ஆய்வுகளின் அடிப்படையில், 27% வளங்களை 99% மக்கள் பகிர்ந்து கொள்ளும் நிலையில், பணக்காரர்களை விட்டுவிட்டு, எளிய மக்களையே அரசு குறிவைத்தால் அது மக்களாட்சிக்கு உரிய பட்ஜெட்டாக இருக்க முடியாது என்பதே பொருளாதார ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.

ஜி.எஸ்.டி. வளையத்துக்குள் பெட்ரோல், டீசல்:

பெட்ரோல், டீசல் விலையை தினசரி நிர்ணயிக்கும் முறையால் அவற்றின் விலை தொடர்ந்து ஏறியே வருகிறது. பெட்ரோல், டீசல் விலையில் பெரும்பான்மை பங்கு வகிப்பவை மத்திய மாநில அரசுகளின் கலால் வரிகள்தான். இதனால் அவற்றின் மீதான கலால் வரிகளை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இவற்றை நீக்கி உச்சபட்ச ஜி.எஸ்.டி.யான 28% வரியை விதித்தாலும் பெட்ரோல், டீசல் இரண்டுமே 50 ரூபாய்க்கும் கீழ் வந்துவிடும். ஆனால் மத்திய, மாநில கலால்வரி வருவாய்கள் பாதிக்கப்படும். ஒவ்வொரு ஜி.எஸ்.டி. கூட்டத்திலும் மத்திய நிதியமைச்சர் ஜேட்லி ‘ஜி.எஸ்.டி. வரம்புக்குள் பெட்ரோலியப் பொருட்கள் விரைவில் கொண்டுவரப்படும்’ என்றே சொல்லிவருகிறார். அது இந்த பட்ஜெட்டின் போதாவது நிறைவேற்றப்பட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேம்படுத்தப்பட வேண்டிய ராணுவத் தளவாடங்கள்:

இந்திய ராணுவத்திற்கான செலவு ஆண்டுதோறும் இந்திய பட்ஜெட்டின் பிரதான செலவு ஆகும். ஆனாலும் இவ்வளவு செலவுகள் செய்யப்பட்டும் இந்திய ராணுவம் போதிய வலிமையை உடையதாக இல்லை என்பதே இன்றைய நிலையாக உள்ளது. கடந்த ஆண்டு வெளியான சி.ஏ.ஜி. அறிக்கையானது ’எதிரி நாட்டுடன் போர் மூண்டால் இந்திய ராணுவத்தின் வெடிப் பொருட்கள் பத்தே நாட்களில் காலியாகிவிடும்’ - என்று கூறியது, மேலும் அந்த அறிக்கை, தனியார் ஆலைகளில் இருந்து வெடிபொருட்களை வாங்க கடந்த 2009-13-ம் ஆண்டில் ராணுவ தலைமை நடவடிக்கை எடுத்தது. ஆனால் இப்போதுவரை அந்த திட்டம் நிலுவையில் உள்ளது.

கடந்த 2007-08 மற்றும் 2015-16-ம் ஆண்டுகளில் இந்திய கடற்படையைச் சேர்ந்த போர்க் கப்பல்கள், நீர்மூழ்கி களில் 38 விபத்துகள் நேரிட்டுள்ளன. பெரும்பாலும் தீ, வெள்ளம் காரண மாகவே விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதை தடுப்பதற்கான போதிய தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வில்லை.

விபத்துகளை தடுக்க கடற்படை சார்பில் கடந்த 2014-ம் ஆண்டில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டது. ஆனால் இந்த குழுவுக்கு மத்திய அரசு இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை. புதிய போர்க்கப்பல், நீர்மூழ்கிகளை கடற்படையில் சேர்க்க 8 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை ஆகிறது.
அண்மையில் கடற்படையிடம் 4 போர்க்கப்பல்கள் ஒப்படைக்கப்பட்டன. இதில் 2 போர்க்கப்பல்களில் போதிய ஆயுதங்கள், சென்சார் கருவிகள் பொருத்தப்படவில்லை. இதனால் கடற்படையின் செயல்திறன் பாதிக்கப் பட்டுள்ளது - என்றது. இவை குறித்தும் கவனம் செலுத்தும் கடமை மத்திய அரசுக்கு உள்ளது.

ஊரக வளர்ச்சி:

நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஆண்டு முழுவதும் குறைவாகவே இருந்துள்ளது. கடந்த ஆண்டில் மேக் இன் இந்தியா, உள்கட்டுமான திட்டங்கள் போன்ற வளர்ச்சித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும் அவை ஊரக வளர்ச்சி சார்ந்ததாக இல்லை, இந்தியாவின் பல மாநிலங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டு விவசாயிகள் மரணம் அதிகரித்துள்ள சூழலில், இவ்வாண்டு பட்ஜெட்டில் ஊரக வளர்ச்சி சார்ந்த திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. 2018இல் தேர்தல் நடைபெறும் 8 மாநிலங்களில் மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் விவசாயமே பிரதான தொழில் என்பதால், அதுவும் ஊரக வளர்ச்சி சார்ந்த திட்டங்கள் அறிவிக்கப்படத் தூண்டுதலைத் தரலாம்.

ரயில்வே பட்ஜெட்

கடந்த ஆண்டில் இருந்து பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட் இணைக்கப்பட்டது. சமீபத்தில் லோயர் பெர்த் இருக்கைகள், ஜன்னலோர இருக்கைகளின் கட்டணங்களை உயர்த்த ரயில்வே துறை பரிசீலித்ததில் இருந்து, வரும் ரயில்வே பட்ஜெட்டும் கட்டண உயர்வுகளை உள்ளடக்கியதாக இருக்கலாம் என்றே கருதப்படுகிறது. 

இன்னொரு பக்கம் கடந்த ஆண்டில் மிக அதிக அளவிலான ரயில் விபத்துகள் நடந்ததை மனதில் கொண்டு மத்திய அரசு, ’இந்த முறை ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய நோக்கமாக பயணிகள் பாதுகாப்பு இருக்கும், ரயில் விபத்துக்களை தவிர்க்கும் நோக்கத்தில், ஆளில்லா லெவல் க்ராஸிங்குகளை நீக்கவும், ரயில் தடங்களை புதுப்பிக்கவும் நிதி ஒதுக்கப்படும், ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் 8 கேமராக்கள் மூலம் கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது. இவை குறித்த தெளிவான அறிவிப்புகளை பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close