[X] Close >

புதிய இந்தியாவைப் படைக்க அரசும் மக்களும் இணைந்து பங்களிக்க வேண்டும் - குடியரசுத் தலைவர்

president-ramnath-govind-address-Indians

புதிய இந்தியாவைப் படைக்க அரசும் மக்களும் இணைந்து பங்களிக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.


Advertisement

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவர் பேசியதாவது:

நமது நாடு சுதந்திரம் பெறப் பாடுபட்ட அனைத்து சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் நாம் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம். இந்திய விடுதலைக்காக நாடு முழுவதிலுமுள்ள ஆண்கள் பெண்கள் என அனைவரும் ஒன்றிணைந்து போராடினர். நமது நகரங்களோ அல்லது கிராமங்களோ நமது நாடு முழுவதும் சுதந்திரத்திற்கு முன்பு நிலவிய நற்பண்புகளை மீண்டும் நாம் உருவாக்க வேண்டும். நாம் ஒன்றிணைந்து பணியாற்றினால்தான் அரசின் திட்டங்கள் ஒவ்வொருவருக்கும் போய்ச் சேரும். நாம் புதிய இந்தியாவை படைக்க பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். அதற்கு நமக்குள் ஒற்றுமையும் கட்டுப்பாடும் அவசியம். அரசும் மக்களும் இணைந்த
பங்களிப்பை ஊக்கப்படுத்த வேண்டும். 


Advertisement

நாம் இப்போதிருக்கும் நிலையில் இருந்து முன்னேறிச் செல்வதுதான் புதிய இந்தியாவின் நோக்கம். அது நமக்கு பெருமையை அளிக்கும். அத்தகைய ஒரு புதிய இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனும் வளர்ச்சி அடைந்து அவர்களால் சமூகத்திற்கும் தேசத்திற்கும் முழுமையாகப் பங்களிக்க முடியும். சட்டத்தை உருவாக்குவதும் அதை அமல்படுத்துவதையும் அரசு செய்யலாம். ஆனால் அவற்றை பின்பற்றுவது மக்களின் கடமை. பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது பொது மக்களாகிய நீங்கள் பொறுமை காத்தீர்கள். கருப்புப் பணத்தை எதிர்த்த போராட்டத்தில் பங்களித்தீர்கள். சிலிண்டர் மானியத்தை விட்டுக் கொடுத்தவர்களுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன். அவர்களுக்கு அரசு சட்டம் எதுவும் போடவில்லை. அவர்கள் தாங்களாகவே தங்களின் பொறுப்பை காட்டியிருக்கிறார்கள். அந்தக் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். நாம்
ஒவ்வொருவரும் சமூகத்திற்கு திருப்பி அளிப்பதற்கான வழி வகைகளைக் காண வேண்டும். புறக்கணிக்கப்பட்ட குழந்தைகள் கல்வி கற்க நீங்கள் உதவ வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
 
நமது விவசாயிகள் வெறுமனே வேலை மட்டும் செய்யவில்லை. அவர்கள் சுயநலமின்றி நமது தேசத்திற்கு சேவை ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள். நாம் அனைவரும் அவர்களை முன்னுதாரணமாக்கி பின்பற்ற வேண்டும். நமது படை வீரர்களும் காவலர்களும் துணை ராணுவப் படையினரும் வெறுமனே அவர்களின் வேலையை மட்டும் செய்து கொண்டிருக்கவில்லை. நமது ஒட்டுமொத்த தேசத்திற்கும் சுயநலமின்றி அவர்கள் சேவை செய்து வருகின்றனர். நாம் வெளிநாட்டில் இருந்தாலும் சரி உள்நாட்டில் இருந்தாலும் சரி இந்தியக் குடிமகனாக நாம் நமது நாட்டின் பெருமைக்கு என்ன செய்தோம் என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும்.

பன்முக வரி விதிப்பு முறையை மாற்றவும் பரிவர்த்தனையை எளிதாக்கவும் அரசு ஜிஎஸ்டியை அமல்படுத்திக் கொண்டிருக்கிறது. நமது அன்றாடப் பரிவர்த்தனை மற்றும் வர்த்தகக் கலாச்சாரத்தில் ஜிஎஸ்டியை ஒரு அத்தியாவசியமான அங்கமாக்குவது நம் ஒவ்வொருவருக்குமான தேவை. நாம் செலுத்தும் வரிகள் தேசத்தைக் கட்டமைக்கப் பயன்படுத்தப்படுகிறது என்பது நாம் ஒவ்வொருவரும் பெருமைப்படத்தக்க விஷயம். 

அரசு கழிப்பறைகளைக் கட்டுகிறது அல்லது அதற்கு உதவுகிறது. இது நாம் ஒவ்வொருவரும் திறந்த வெளிக் கழிப்பறை இல்லாத இந்தியாவை உருவாக்குவதற்குத்தான். புதிய இந்தியா எதிர்காலத்தை நோக்கி விரையும் ஒரு சமூகமாக இருக்க வேண்டியது அவசியம். அதே சமயத்தில் அது கருணை மிகுந்த சமூகமாகவும் இருக்க வேண்டும். ஒலிம்பிக் 2020 உலகின் கண்களில் நாம் உயர்ந்து நிற்பதற்கான மற்றொரு வாய்ப்பை வழங்கியிருக்கிறது. இன்று உலகமே இந்தியாவை பெருமை பொங்கப் பார்க்கிறது. 


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close