உபி: மதுபான மாஃபியாவுக்கு எதிராக செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் சாலை விபத்தில் உயிரிழப்பு

உபி: மதுபான மாஃபியாவுக்கு எதிராக செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் சாலை விபத்தில் உயிரிழப்பு
உபி: மதுபான மாஃபியாவுக்கு எதிராக செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் சாலை விபத்தில் உயிரிழப்பு
சில தினங்களுக்கு முன்பு பத்திரிகையாளர் சுலாப் ஸ்ரீவாஸ்தவா, தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காவல்துறையினருக்கு எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலத்தில் செயல்பட்டு வரும் ஏபிபி கங்கா செய்தித் தொலைக்காட்சியில் பிரதாப்கர் மாவட்ட செய்தியாளராக பணியாற்றி வந்தவர் சுலாப் ஸ்ரீவாஸ்தவா. இவர் நேற்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது சாலை விபத்தில் சிக்கியதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்த விபத்தில் சுலாப் ஸ்ரீவாஸ்தவா உயிரிழந்து விட்டதாகவும் காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு, சுலாப் ஸ்ரீவாஸ்தவா தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காவல்துறையினருக்கு எழுதிய கடிதத்தை சக பத்திரிகையாளர்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடுள்ளனர்.
அந்தக் கடிதத்தில், ''பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள மதுபான மாஃபியாவுக்கு எதிரான எனது செய்தி ஒன்று ஜூன் 9-ம் தேதி எங்களது சேனலில் வெளியானது. இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதன்பின்னர் என்னை சில மர்ம நபர்கள் பின்தொடர்வதாக தெரிகிறது. எனது செய்தி குறித்து மதுபான மாஃபியாக்கள் என்னை பழிவாங்க அலைகிறார்கள் என சந்தேகிக்கிறேன். இதனால் எனது குடும்பத்தினரும் மிகவும் கவலையடைந்துள்ளனர்" என்று சுலாப் ஸ்ரீவாஸ்தவா அந்தக் கடிதத்தில் கூறியிருந்தார்.
இக்கடிதம் தொடர்பாக சுலாப் ஸ்ரீவாஸ்தவாவிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து மதிப்பீடு செய்ய காவல்துறையினர் உள்ளூர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருந்தனர். இந்த சூழலில்தான், சுலாப் ஸ்ரீவாஸ்தவா சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.
சுலாப் ஸ்ரீவாஸ்தவா மரணம் தொடர்பாக பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பதிவில், ''உத்தரப்பிரதேச அரசு அமைதியாக உள்ளது. உண்மையை அம்பலப்படுத்துவதற்காக ஊடகவியலாளர்கள் ஆபத்தான கேள்விகளைக் கேட்கிறார்கள். அரசாங்கம் தூங்கிக் கொண்டிருக்கிறது. சுலாப் ஸ்ரீவாஸ்தவாவின் குடும்பத்தினர் சிந்தும் கண்ணீருக்கு அரசிடமிருந்து ஏதேனும் பதில் இருக்கிறதா?” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
சுலாப் ஸ்ரீவாஸ்தவா மரணம் குறித்து மூத்த போலீஸ் அதிகாரி சுரேந்திர திவேதி கூறுகையில், ''முதற்கட்ட விசாரணையில் சுலாப் ஸ்ரீவாஸ்தவா தனது பைக்கில் தனியாக வந்துள்ளார். அவரது பைக் சாலையின் ஒரு 'ஹேன்ட்பைப்' மீது மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது. அங்கிருந்த ஒரு செங்கல்சூளையின் தொழிலாளர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அனைத்துக் கோணங்களிலும் விசாரித்து வருகிறோம்'' என்று அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com