[X] Close

ஓடிடி திரைப்பார்வை: எளிய மனிதர்களும் சட்டமும் - நீதித்துறையை கூண்டில் நிறுத்திய ‘கோர்ட்’

Subscribe
Court-Movie-Review

பொதுவாக தத்தமது தேசத்தின் நீதித்துறையின் மீது கேள்வி எழுப்புவதும், விமர்சிப்பதும் ஒரு சிக்கலான காரியம். அதற்கொரு தனி துணிச்சலும் தேவை. இந்திய நீதித் துறையை பத்திரிகையாளர்கள், பொதுமக்கள், சமூக அக்கறையாளர்கள், வலைத்தள போராளிகள் என பலரும் விமர்சித்திருக்கலாம். ஆனால் சினிமா என்கிற கலை வடிவத்திற்குள் அது முறையாக இதுவரை பேசப் பட்டிருக்கிறதா என்றால் சந்தேகம் தான். ஆனால் 2015-ல் வெளிவந்த ‘கோர்ட்’ என்ற மராத்தி மொழி திரைப்படம் கிண்டலான பாணியில் நமது நீதித்திறை மீதும் அதன் சட்ட வடிவத்தின் மீதும் சரமாரியாக விமர்சனங்களை வீசியிருக்கிறது. தற்போது நெட்பிளிக்ஸில் கிடைக்கும் இந்த சினிமா குறித்து பார்ப்போம்.


Advertisement

image

65 வயது முதியவரான கவிஞர் ‘நாராயண் காம்ளே’ மும்பையின் புறநகர் பகுதியில் வசித்து வருகிறார். அவர் அப்பகுதி குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது, மேடைகளில் சமூக சிந்தனையுள்ள பாடல்கள் பாடுவது என சோல்னா பையும் ஜிப்பாவுமாக வலம் வருகிறார். ‘கற்பி, ஒன்று சேர்,புரட்சி செய்’ என்ற அம்பேத்கரின் சிந்தனைபடி வாழ்பவர் அவர். அவர் மீது விநோதமான வழக்கு ஒன்றை பதிவு செய்து கைது செய்கிறது மும்பை காவல்துறை. அப்பகுதியில் துப்புரவுத் தொழிலாளி ஒருவர் பணியின் போது விஷவாயு தாக்கி இறந்து போகிறார். அதற்கு ‘காம்ளே’ மேடையில் பாடிய பாடல் தான் காரணம் என்கிறது வழக்கு. இவ்வழக்கில் காம்ளேவுக்கு என்ன நடந்தது என்பது தான் மீதிக்கதை.


Advertisement

உண்மையில் இதுவரை நீதிமன்றம் என்ற அமைப்பின் மீது நமக்கு இருக்கும் அபிமானங்கள் அனைத்தையும் சரியான தரவுகளுடன் தகர்க்கிறது இத்திரைப்படம். துப்புரவு வேலை செய்கிறவர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காததே பெரும்பாலான மரணங்களுக்கு காரணம் என்ற அடிப்படை விஷயத்தை கூட புரிந்து கொள்ளாமல் ‘நாராயண் காம்ளே’வை குற்றவாளியாக்கி முன்நகர்கிறது வழக்கு.

image

இரு தரப்பு வாதங்களையும் விசாரிக்கும் நீதிபதி வழக்கை கோடை விடுமுறைக்கு பிறகு ஒத்திவைக்கிறார். கோர்ட்டின் அறைக் கதவுகளை கோர்ட் ஊழியர் ஒருவர் வரிசையாக மூடுகிறார். கடைசியில் அந்த அறை முற்றிலும் இருட்டாக இருப்பதாக அக்காட்சி பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இப்படியாக படம் முழுக்க நுட்பமான குறியீடுகள் கவனம் பெறுகின்றன.


Advertisement

கோடை விடுமுறையில் தனியார் சொகுசு விடுதியில் தங்கியிருக்கும் நீதிபதி ‘சதவர்த்’ தனது நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டே ஐ.டி துறையின் கவர்ச்சிகரமான சம்பளம் பற்றி பேசுகிறார். இறுதி காட்சியில் புல்வெளியில் இருக்கும் இருக்கையில் அமர்ந்து உறங்குகிறார் அவர். அங்கு பெரிய சத்தம் எழுப்பி விளையாடும் சிறுவர்கள் நீதிபதியின் தூக்கத்தை கலைத்துவிட அவர் கோபத்தில் சட்டென ஒரு சிறுவனை கைநீட்டி அடித்துவிடுகிறார். அடிவாங்கிய சிறுவன் வாய் பேசும் திறனற்ற மாற்றுத்திறனாளி. சட்டம் இப்படி எளிய இயலாத மனிதர்கள் மீதே தங்கள் வலிமையை காட்டுகிறது என்ற குறியீடுடன் படம் முடிகிறது. நீதிபதி உறக்கத்தை தொடர்கிறார்.

image

இயக்குநர் “சைதன்ய தம்ஹானே”விற்கு இது முதல்படம். கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் களப்பணிக்கு பின்னரே அவர் இக்கதையை உருவாக்கியிருக்கிறார். இதற்காக தொழில் முறை நடிகர்களை கூட அவர் பயன்படுத்தவில்லை. படத்தில் துப்புரவு தொழிலாளியின் மனைவியாக நடித்திருக்கும் ‘உஷா’ உண்மையாகவே பாதிக்கப்பட்ட பெண் தான். அவரது கணவர் மும்பை புறநகர் பகுதியில் துப்புரவு பணியில் இருந்த போது விஷவாயு தாக்கி இறந்து போனவர்.

எதிர் தரப்பு வக்கீலாக நடித்திருக்கும் ‘விவேக்’ இயக்குநரின் நண்பர் மற்றும் இப்படத்தின் தயாரிப்பாளரும் கூட. முதல் படத்திலேயே இயக்குநர் இப்படி பல துணிச்சலான முயற்சிகளை செய்திருப்பது பாரட்டுக்குரியது. தேசிய விருது பெற்ற இத்திரைப்படம் வியன்னா, ஹாங்காங், சிங்கப்பூர் என சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை பெற்றது. மேலும் இத்திரைப்படம் இந்தியா சார்பாக ஆஸ்கருக்கும் பரிந்துரைக்கப்பட்டது.

image

2011-ஆம் ஆண்டு ஜெய்பீம் காம்ரேட் என்ற ஆவணப்படத்தை ஆனந்த் பட்வர்த்தன் இயக்கினார். அந்த ஆவணப்படத்தின் தாக்கமே தன்னை ‘கோர்ட்’ திரைப்படத்தை உருவாக்கத் தூண்டியது என்கிறார் இயக்குநர் ‘சைதன்ய தம்ஹானே’.

ஒரு படைப்பின் கிளையிலிருந்து இன்னொரு படைப்பின் வேர் துவங்கலாம். கலை என்பதே பகிர்தல் தானே…?

- சத்யா சுப்ரமணி

முந்தைய ஓடிடி திரைப் பார்வை: `சைக்கிள்` -கேசவின் திருடுபோன மஞ்சள் நிற சைக்கிள் பறக்குமா...?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Related Tags : court movieindian cinemaottott moviescinemacinema news
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close