[X] Close

ஜெயரஞ்சன் முதல் டி.ஆர்.பி.ராஜா வரை: தமிழ்நாடு வளர்ச்சி கொள்கைக் குழுவின் பின்புலம்

Subscribe

தமிழ்நாடு மாநில வளர்ச்சி கொள்கைக் குழு துணைத் தலைவராக பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சனை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


Advertisement

கடந்த 1971ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதியால் உருவாக்கப்பட்ட மாநில திட்டக் குழு, கடந்த ஆண்டு மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவாக மறுசீரமைப்பு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்தக் குழுவுக்கு புதிய உறுப்பினர்களை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின் தலைமையில் செயல்படும் மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் துணைத் தலைவராக பொருளாதார நிபுணர் பேராசிரியர் ஜெயரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பேராசிரியர் ராம சீனுவாசன் என்பவர் முழு நேர உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா, சித்த மருத்துவர் சிவராமன் உள்ளிட்ட 8 பேரை பகுதி நேர உறுப்பினர்களாக நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்தக் குழு கொள்கைக்கான ஆலோசனை வழங்குதல், இலக்கு நிர்ணயித்தல், கொள்கை ஒத்திசைவு உருவாக்குதல், சிறப்பு திட்டங்களை செயல்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய பணிகளை மேற்கொள்ள உள்ளது.


Advertisement

ஜெயரஞ்சன்: வளர்ச்சி கொள்கை குழுவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜெயரஞ்சன் கடந்த 35 ஆண்டுகளாக தமிழகத்தில் பொருளாதார மாற்றங்கள் குறித்து 65 ஆய்வுப் பணிகளை மேற்கொண்டவர். அடித்தட்டு மக்களின் மேல் அக்கறை மிகுந்த ஜெயரஞ்சன் பொருளாதாரம் குறித்த ஆழமான அலசல்களை எளிமையான முறையில் பொது மக்களுக்கு ஊடகங்கள் வழியே வழங்கி புகழ் பெற்றவர்.

மல்லிகா ஸ்ரீநிவாசன்: தமிழக அரசு குழுவில் இடம் பெற்றுள்ள மல்லிகா ஸ்ரீநிவாசன் பிரபல தொழிலதிபர் ஆவார். TAFE டிராக்டர் நிறுவன தலைவராக உள்ள இவரை நாடெங்கும் உள்ள பொதுத் துறை நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகளை தேர்வு செய்யும் குழுவின் தலைவராகவும் மத்திய அரசு அண்மையில் நியமித்துள்ளது.

ராம.சீனிவாசன்: மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் பகுதி நேர உறுப்பினராகியுள்ள பேராசிரியர் ராம.சீனிவாசன் சென்னை பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியர். 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சியின் போது தமிழக அரசின் திட்டக் குழுவில் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.


Advertisement

நர்த்தகி நடராஜ்: தமிழக அரசு நியமித்த குழுவில் இடம் பெற்ற மற்றொருவர் நர்த்தகி நடராஜ். மதுரையை சேர்ந்த திருநங்கையான இவர் புகழ்பெற்ற நடனக்கலைஞர். முதன் முதலில் திருநங்கை என்ற சொல்லை பயன்படுத்தியவர் நர்த்தகி நடராஜ். இதை அறிந்த அன்றைய முதலமைச்சர் கருணாநிதி, இனி திருநங்கை என்ற சொல்லையே 3ஆம் பாலினத்தவரை குறிக்க பயன்படுத்த வேண்டும் என்ற அரசாணையை பிறப்பித்தார்.

கு.சிவராமன்: தமிழக அரசு நியமித்துள்ள குழுவில் மருத்துவத் துறையிலிருந்து இடம் பிடித்துள்ளார் பிரபல சித்த மருத்துவர் சிவராமன். 28 ஆண்டுகளுக்கு மேலாக சித்த மருத்துவத்தை அறிவியல் பார்வையுடன் வழங்கி மக்களுக்கு சேவை செய்து வருகிறார் சிவராமன். மக்களிடையே சிறுதானிய பயன்பாட்டை உயர்த்தியதில் முக்கிய பங்காற்றியவர் சிவராமன்.

சுல்தான் இஸ்மாயில்: தமிழகத்தின் வளர்ச்சியை திட்டமிடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவில் இடம் பெற்றுள்ளவர்களில் சுல்தான் அகமது இஸ்மாயிலும் குறிப்பிடத்தக்கவர். விலங்கியல் துறை பேராசிரியரான இவர், மண்ணியல் உயிரியலாளர் என்ற வகையில் வெகுவாக அறியப்பட்டவர். மக்கும் கழிவுகளை மறுசுழற்சி நுட்பங்கள் மூலம் உரமாக மாற்றுவதிலும் மண்வளத்தை பெருக்குவதிலும் இவரது பங்களிப்பு அளப்பரியது.

தீனபந்து: ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான தீனபந்து கல்வி உதவித் தொகை திட்டம், ராமநாதபுரம் மற்றும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டம், அனைத்து நகராட்சிகளிலும் பாதாளச் சாக்கடை போன்ற பணிகளில் முத்திரை பதித்தவர். மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த போது அத்துறையின் செயலாளராக பணியாற்றிய தீனபந்துவிற்கு தமிழகத்திற்கு சேவை செய்ய மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

ம.விஜயபாஸ்கர்: சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராக உள்ள ம.விஜயபாஸ்கர் அனைத்துலக தொழிலாளர் அமைப்பு, ஐநா சமூக வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்திலும் ஆலோசகராக இருந்துள்ளார்.

ஜோ.அமலோற்பவ நாதன்: பிரபல ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணரான அமலோற்பவ நாதன், தமிழகத்தில் மனித உடல் உறுப்பு மாற்ற திட்ட செயலாக்கத்திலும் முக்கிய பங்காற்றியவர்.

டி.ஆர்.பி.ராஜா: தமிழ்நாடு வளர்ச்சி கொள்கை குழுவில் உள்ள டி.ஆர்.பி.ராஜா மன்னார்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close