[X] Close

மத்திய அரசா? ஒன்றிய அரசா? – என்ன சொல்கிறது இந்திய வரலாறு: விரிவான அலசல்

Subscribe
Central-Government-or-Union-Government-----What-Indian-History-Says--A-Comprehensive-Analysis

இந்தியாவை ஒன்றிய அரசு என அழைப்பதா அல்லது மத்திய அரசு என அழைப்பதா என்ற சர்ச்சை தற்போது தமிழகத்தில் வீரியமடைந்திருக்கிறது. இந்த சூழலில் இந்தியா வரலாறு ரீதியாக எப்படி அழைக்கப்பட்டது என்பது பற்றிய அலசல்.


Advertisement

இந்தியா உருவான கதை:

1600 கள் வரை இந்திய துணைக்கண்டம் பல பேரரசுகளாலும், சிற்றரசுகளாலும் ஆளப்பட்டு வந்தன, அப்போதெல்லாம் இந்தியா ஒருங்கிணைந்த நாடு இல்லை. அதன்பின்னர் டச்சுக்காரர்கள், போர்த்துகீசியர்கள், ஆங்கிலேயேர்கள் என பலரும் பல பகுதிகளை கொஞ்சம் கொஞ்சமாக கைப்பற்ற ஆரம்பித்தனர். இதில் இங்கிலாந்து கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவின் பெருவாரியான பகுதிகளை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. சென்னை, மும்பை, கல்கத்தா என இந்தியாவின் பல பகுதிகளை கிழக்கிந்திய கம்பெனி ஆண்டாலும் ஒவ்வொரு மாகாணமும் தனித்தனியான ஆட்சிப்பகுதியாகவே இருந்தன. இந்த மாகாணங்கள் அனைத்து தனித்தனியாக இங்கிலாந்து கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டில் இருந்தன. பின்னர் இவை அனைத்தும் 1773ஆம் ஆண்டில் மாற்றப்பட்டு சென்னை, மும்பை உள்ளிட்ட அனைத்து மாகாணங்களுக்கும் மத்திய தலைமை மாகாணமாக கல்கத்தாவை அறிவித்தது  கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி. அப்போதுதான் இந்தியாவில் முதன்முதலாக ஒருங்கிணைந்த ஆட்சி ஏற்படுத்தப்பட்டது, அதன்பின்னர் கல்கத்தாவில்  மத்திய அரசாக இருந்த தலைமை ஆளுநரின் கட்டுப்பாட்டில் அனைத்து மாகாணங்களும் இயங்க தொடங்கியது. பிறகு இந்த அனைத்து மாகாணங்களும் நேரடியாக இங்கிலாந்து அரசின் கட்டுப்பாட்டின் கீழ் 1858 ஆம் ஆண்டு விக்டோரியா மகாராணியின் ஆளுகைக்கு வந்தது.


Advertisement

image

1900 களில் விடுதலைக்குரல்கள் இந்தியா முழுமைக்கும் ஒலிக்க தொடங்கியது, இவ்விடுதலை போராட்டத்தில் அனைத்து மொழி மக்களும் கலந்துகொண்டனர், உயிர்த்தியாகம் செய்தனர். காங்கிரஸ் கட்சி தொடங்கிய பின்னர் அக்கட்சியும் மொழிவழி மாநில உரிமைகளை வலியுறுத்தி பேசியது, காந்தியடிகளும் மொழிவழி மாநில உரிமைகளுக்கு ஆதரவாக நின்றார். பிறகு 1919இல் இந்தியாவில் இரட்டை ஆட்சி முறை ஏற்படுத்தப்பட்டது, இதனால் ஆட்சிப்பொறுப்பில் சில துறைகள் இந்தியர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.  அதன்பின்னர் பல கட்ட போராட்டங்களுக்கு பின்னர் இந்தியாவில்  1935 இல் மாகாண சுயாட்சிமுறை அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால் மேலாட்சி ஆங்கீகாரம் தரப்படவில்லை.  1935 இல் ஆங்கிலேயர்களால் இயற்றப்பட்ட இந்திய அரசு சட்டம் இந்தியாவை “ஒன்றியம்” என்றும் ‘கூட்டாட்சி’ என்றுமே வரையறுக்கிறது. பிறகு 1947ல் இந்திய விடுதலைக்கு பின்னர் இயற்றப்பட்ட “இந்திய அரசிலமைப்பு சட்டத்தின்” படி, “india that is bharath shall be a union of states” என்று சொல்லப்பட்டுள்ளது. அதாவது ‘இந்தியா எனப்படும் பாரதம் என்பது மாநிலங்களின் ஒன்றியம்’ என அழைக்கப்பட்டது.

ஒன்றிய சர்ச்சை ஏன் உருவானது?


Advertisement

இந்திய விடுதலைக்கு பின்னர் பல அரசியல் கட்சிகளும், மாநில முதல்வர்களும் இந்திய அரசை ஒன்றிய அரசு என்றுதான் அழைத்து வந்தனர். தமிழகத்தில் 70கள் வரை ஒன்றிய அரசு, கூட்டாட்சி என்ற வார்த்தைகள் அரசியல் கனலை மூட்டிக்கொண்டுதான் இருந்தன. ஆனால், அதன்பின்னர் படிப்படியாக மத்திய அரசிடம் அதிகாரங்கள் குவிக்கப்பட தொடங்கின, இதனால் பல மாநில அரசுகள் மத்திய அரசை ‘எஜமானன்’ தோரணையில் பார்க்க தொடங்கியதால் இதுபோன்ற குரல்களும் கிட்டத்திட்ட மறைந்தேவிட்டன. இப்போது தமிழகத்தில் ஆட்சிப்பொறுப்பேற்றுள்ள  முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய அரசை ‘ ஒன்றிய அரசு’ என அழைத்து கலகக்குரலை தொடங்கியுள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராயி விஜயன், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் போன்றோரும் ‘ கூட்டாட்சி’ பற்றி குரலை எழுப்பிவருகின்றனர்.

image

தமிழகத்தை பொறுத்தவரை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்டவை ஒன்றிய அரசு என்பதையே ஆதரிக்கிறது, காங்கிரஸ் கட்சியும் ஒன்றிய அரசு என அழைப்பதில் தவறில்லை என சொல்லிவிட்டது, நாம் தமிழர் கட்சியும் ஒன்றிய அரசு என்பதுதான் சரி என்கிறது. இந்த சூழலில் பாஜக இதனை கடுமையாக விமர்சிக்க தொடங்கியுள்ளது, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசு என்பதே சரி என சொல்கிறார். மக்கள் நீதி மய்யம், அமமுக, பாமக போன்ற கட்சிகள் இந்த விவகாரம் குறித்த எந்த கருத்தும் தெரிவிக்காமல் உள்ளனர்.

இதுபற்றி பேசிய தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன், “ இந்திய அரசை ஒன்றிய அரசு என்றுதான் சொல்லவேண்டும். மத்திய அரசு என்று இந்திய அரசை சொன்னால், மாநில அரசுகள்  ‘ஓரங்கட்டப்பட்ட அரசுகள்’ என்றுதானே பொருள். இந்தியா பல மொழிவழி தேசிய இனங்களை தன்னகத்தே கொண்ட நாடு, எனவே அதனை ஒன்றிய அரசு என அழைப்பதே சரியானது. 1935 இல் ஆங்கிலேயர்கள் இயற்றிய இந்திய அரசு சட்டத்தில் இந்தியாவை ‘கூட்டரசு’ என்றுதான் சொன்னார்கள், அப்போது மாகாண முதல்வர்கள் ‘PREMIER’ அதாவது பிரதமர் என்றே அழைக்கப்பட்டனர், அந்தளவுக்கு மாநிலங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய சட்டமாகவே அது இருந்தது. அப்போதைய காங்கிரஸ் தலைவர்களும் அரசியலமைப்பு சட்டம் உருவாக்கும் போது ராணுவம், பணம் அச்சிடுதல், வெளியுறவுத்துறை உள்ளிட்ட மூன்று அதிகாரங்கள் தவிர மற்ற அனைத்து அதிகாரங்களும் மாநிலங்களுக்கே வழங்கப்படும் என்று தெரிவித்தனர். அதன்பின்னர் பாகிஸ்தான் பிரிவினை, இந்து-முஸ்லீம் கலவரம் வந்த பிறகு மாநிலங்களின் பல அதிகாரங்களை ஒன்றிய அரசின் கைகளுக்கு கொண்டுசென்றனர். அதற்கு முன்னர் காங்கிரஸின் கொள்கை ஒன்றியத்திலிருந்து மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்கப்படும், மாநிலங்களிலிருந்து கிராமங்களுக்கு அதிகாரம் வழங்கப்படும் என்பதாகவே இருந்தது.

சோவியத் யூனியனில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களும் குடியரசு என்றுதான் அழைக்கப்பட்டது அதனால் தான் அது ‘சோவியத் யூனியன் ஆஃப் ரிப்ப்ளிக்’ என இருந்தது. USA எனப்படுவது United States of America  அதாவது ‘அமெரிக்க ஐக்கிய நாடுகள்’  என்று பொருள், இதில் ‘ஸ்டேட்ஸ்” என்பது ‘நாடு’ என்ற பொருளிலேயே அழைக்கப்படுகிறது.  இந்திய அரசியமைப்பிலும் ‘india that is bharath shall be a union of states’ என்றுதான் சொல்லப்பட்டுள்ளது, அதாவது ‘இந்தியா என்பது அரசுகளின் ஒன்றியம்’ என்றுதான் பொருள். எனவே ஸ்டேட் என்றால் நாடு என்றுதான் பொருள், ஆனால் இந்தியாவில் நாம் அதனை மாநிலம் என்று அழைக்கிறோம், அது தவறானது.

image

எங்கள் அமைப்பில் கடந்த 50 ஆண்டு காலமாகவே நாங்கள் ஒன்றிய அரசு என்றுதான் அழைக்கிறோம். ஆந்திராவில் என்.டி.ஆர் கட்சி தொடங்கியபோது, மத்திய அரசு என்பது ‘ ஒன்றிய அரசு’ என்றுதான் அழைப்போம் என்றார், அது அப்போது அனலை உருவாக்கி அவர் ஆட்சியை பிடிக்க உதவியது. ஆரம்பத்தில் ஒன்றிய அரசுக்கு குறைவான அதிகாரங்களே ’ஒன்றிய பட்டியலில்(union list)’ இருந்தது, அதிக அதிகாரங்கள் ‘மாநில பட்டியலில்(state list)’ இருந்தது. அதன்பின்னர் பல காலகட்டங்களில் பல பிரதமர்கள் படிப்படியாக ‘ மாநில பட்டியலில்’ இருந்த பல அதிகாரங்களை ‘ ஒத்திசைவு பட்டியலுக்கு(concurrent list)’ கொண்டு சென்றனர், இதனால்தான் இப்போது ஒன்றிய அரசுக்கு எதிரான குரல்கள் ஒலிக்க தொடங்கியுள்ளன.  அதனால் ஒன்றிய அரசு என சொல்வதுதான் அரசியலமைப்பு சட்டப்படி சரியான வார்த்தை, இதில் எந்த தவறும் இல்லை. இயல்பான ஒரு சொல்லாடலைத்தான் இப்போது திமுக பயன்படுத்துகிறது, ஆனால் நீண்டகாலமாக இதனை பலரும் பயன்படுத்த மறந்துவிட்டதால் இப்போது அது பலருக்கு ஆச்சர்யமாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது. இந்தியா என்பது பல நாடுகளின், பல மொழிவழி தேசிய இனங்களின் தொகுப்பாகவே உள்ளது, இது ஒன்றிய அரசுதான். மத்திய அரசு இல்லை.” என்கிறார் அழுத்தமாக

-வீரமணி சுந்தரசோழன் 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close