[X] Close

கொரோனா தடுப்பூசி குறித்த நோபல் விஞ்ஞானியின் வைரல் வீடியோ: மத்திய அரசு விளக்கம்

Subscribe
Nobel-laureate-Luc-Montagnier-didnot-say-Covid-vaccine-recipients-will-die-in-two-years--Govt-Explained

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இறந்து போய்விடுவார்கள் என நோபல் பரிசு பெற்ற லூக் மாண்டாக்னியர் கூறியதாக வெளியான வீடியோ பதிவு போலியானது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.


Advertisement

வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் கொரோனா காலத்தில் இல்லாதவர்களுக்கு உதவி கிடைப்பது மருத்துவ வசதிகள் கிடைக்கச் செய்வது உள்ளிட்ட பல்வேறு நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்தப்பட்டாலும், அதே அளவு வதந்தி பரப்பி மக்களை அச்சத்தில் ஆழ்த்துவதையும் செய்கிறது.

அப்படி வாட்ஸ்அப் செயலியில் மிக வேகமாக ஒரு வீடியோ காட்சி பரவியது. அதுதான் உலகை ஆட்டிப்படைத்த ஹெச்ஐவி வைரஸ் கிருமியை கண்டறிந்த வரும் நோபல் பரிசு பெற்றவருமான உலகப் புகழ்பெற்ற வைராலஜி விஞ்ஞானி லூக் மாண்டாக்னியர், எந்த வகையான கொரோனா தடுப்பூசி செலுத்தி இருந்தாலும், அவர்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு உயிர் பிழைத்திருப்பது இயலாத ஒன்று, தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் அனைவரும் இறந்து போவார்கள் என அவர் பேசியதாக வீடியோ பதிவு.


Advertisement

11 நிமிடங்கள் பிரெஞ்சு மொழியில் ஓடக்கூடிய ஒரு செய்தி தொலைக்காட்சி நேர்காணலில் பேசிய லூக் மாண்டாக்னியர் பெரும் தொற்று காலத்தில் தடுப்பூசி போடுவது என்பது நிச்சயம் செய்யக்கூடாத ஒன்று. தற்போதைய தடுப்பூசிகள் வைரஸ்களை செறிவூட்டியே தயாரிக்கப்பட்டுள்ளது. அதனை செலுத்தும் பொழுது வைரசின் செயல்பாடு மேலும் அதிகரிக்கவே உதவிசெய்யும் இதைதான் நோய் எதிர்ப்பு சார்ந்த நோய்க்கிருமி மேம்பாடு என அழைக்கிறோம். இவ்வாறு தடுப்பூசிகள் செலுத்துவதன் மூலம் புதிய உருமாறிய வைரஸ்கள் வேகமாக உருவாக காரணமாக அமையும் என அவர் பேசியிருந்தார்.

அதாவது அவர் நேரடியாக குறிப்பிடப்படுவது, பெருந்தொற்று காலத்தில் தடுப்பூசி செலுத்துவது என்பது செய்யக்கூடாத ஒன்று; அதனை சிறிது காலத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் பேசியிருந்தார். ஆனால் வழக்கமான கொரோனாவை விட மோசமான சில மனித விஷக்கிருமிகள் அதனை வெட்டி ஒட்டி தடுப்பூசியை குத்திக் கொண்டவர்கள், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் உயிரிழந்து விடுவார்கள் என பேசியதாக திரித்து வெளியிட்டு உள்ளனர்.

இந்த தகவல்களை மத்திய அரசு முற்றிலுமாக திரித்துக் கூறப்பட்ட பொய்ச் செய்தி என தெளிவுபடுத்தியுள்ளது.


Advertisement

image

அதேநேரத்தில் அவர்களின் தடுப்பூசி குறித்த கருத்துகளுக்கும் பல்வேறு முக்கிய விஞ்ஞானிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். லூக் கடந்த சில ஆண்டுகளாகவே தடுப்பூசிகள் குறித்தும் ஹோமியோபதி மருத்துவம் குறித்தும் தொடர்ந்து முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை கூறி வருவதாகவும், எந்தவிதமான அடிப்படை அறிவியல் தரவுகளும் இல்லாமல் இத்தகைய குற்றச்சாட்டுகளை அவர் முன்வைப்பதாக கூறியுள்ளனர்.

கொரோனா பரவத் தொடங்கியபோது அது சீனாவில் இருந்து ஆய்வகங்கள் மூலமாக உருவாக்கப்பட்டது என இவர் கூறியது தற்போது வரை சர்ச்சைக்குரிய கருத்தாகவே இருந்து வருகிறது.

முன்னதாக, டிஎன்ஏ என சொல்லப்படும் மரபணுக்கள் மின்காந்த அலைகளை வெளியிடுகிறது; நல்ல நோய் எதிர்ப்பு சக்தி இருந்தாலே எச்ஐவி வைரசால் ஏற்படும் எய்ட்ஸ் நோயில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்; தண்ணீருக்கு நினைவுத்திறன் இருக்கிறது போன்ற சில அறிவியல் உண்மைகள் எதுவும் இல்லாத கருத்துக்களை அவ்வப்போது கூறி பேசுபொருளாக இருப்பது இவரது வாடிக்கையாக இருந்தது.

பிரெஞ்ச் அரசாங்கம் தடுப்பூசி என்ற பெயரில் அடுத்த தலைமுறைகளை கொஞ்சம் கொஞ்சமாக கொன்று வருகிறது என கடந்த 2017ஆம் ஆண்டு இவர் கூறிய கருத்து பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. உலகம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் நோபல் பரிசு பெற்றவர் என்ற பெயரில் பொது சுகாதாரத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் இத்தகைய கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என லுக்கிற்கு கடிதம் எழுதியிருந்தனர்.

தற்போது கொரோனா தடுப்பூசி குறித்து லூக் எழுப்பியுள்ள சந்தேகங்களுக்கு பல விஞ்ஞானிகளும் அறிவியல்பூர்வமாக பதிலளித்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட பகுதியில் நோய் பரவல் இருக்கிறது என்றால், தடுப்பூசிகள் உடனடியாக அதனை செயல்படுத்தி விடும். ஆனால் பெரிய எண்ணிக்கையில் வைரஸ் பரவல் இருக்கும்போது மிகக் குறைவான எண்ணிக்கையில் நோய் எதிர்ப்பு திறனில் இருந்து தப்பிக்கும் வைரஸ்கள் உருமாற்றம் பெற்றதாக மாறிவிடும். அதனை தடுக்க தொடர்ந்து அதிகப்படியான தடுப்பூசிகளை செலுத்தும்பொழுது அவை விரைவில் கட்டுக்குள் வந்துவிடும். இது தற்போது கத்தார் மற்றும் பிரிட்டன் நாடுகளில் வெற்றிகரமாக செய்யப்பட்டு வருவதாக புள்ளிவிவரங்கள் கூறுவதாக கூறுகின்றனர்.

லூக் கூறியதே அபத்தமான ஒரு விஷயம்; ஆனால் அதைவிட அபத்தமான விஷயம், அதனையும் வெட்டி ஒட்டி வீணான வதந்திகளை பரப்புவது என ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சில முன்னணி விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் வேதனை தெரிவிக்கின்றனர். அரசும் தேவையற்ற வதந்திகளை பரப்புவதை மக்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

பெருந்தொற்று காலத்தில் நாட்டிற்கு செய்யும் மிகப்பெரிய சேவை இத்தகைய வதந்திகளை பரப்பாமல் இருப்பதுதான்.

- நிரஞ்சன் குமார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close