[X] Close

ஓடிடி திரைப் பார்வை: கேரள கம்யூனிஸ்டுகளை இழிவுபடுத்துகிறதா ‘நாயட்டு’...?

Subscribe
Nayattu-Film-Review

பட்டியலின மக்களின் வாக்குகளை எப்படி லாபத்திற்காக அரசியல் கட்சிகள் பயன்படுத்திக் கொள்கின்றன. போலீஸ்காரர்களாகவே இருந்தாலும் அவர்களுக்கு இருக்கும் உச்சபட்ச நெருக்கடிகள் என்ன...? மக்கள் அறிந்து கொள்ளும் செய்திக்கும் உண்மைக்கும் இடையிலிருக்கும் தொலைவு எவ்வளவு போன்றவற்றை பல்வேறு கோணங்களில் பதிவு செய்திருக்கும் மிகத்துணிச்சலான சினிமாதான் நாயட்டு. சமகால லாப அரசியலை அடர்த்தியான சினிமா மொழியில் பேசுகிறது இப்படம்.


Advertisement

image

கேரள கிராமமொன்றில் காவலர்களாக பணிபுரிகிறார்கள் மணியன், சுனிதா மற்றும் பிரவின் மைக்கேல். இம்மூவரும் ஒரு விழாவில் கலந்து கொண்டு ஜீப்பில் வீடு திரும்பும் போது ஒரு விபத்து ஏற்படுகிறது. நடக்கவிருக்கும் தேர்தலில் லாபமடைய அரசியல் கட்சிகள் அந்த விபத்தை எப்படி பயன்படுத்திக் கொள்கின்றன. அம்மூன்று காவலர்களின் வாழ்க்கையும் எப்படி சிதைக்கப்படுகிறது என்பதன் த்ரில்லிங் திரைக்கதை தான் நாயட்டு.


Advertisement

நடக்காத குற்றங்களை நடந்ததாக சித்தரிப்பதில் அனுபவமுள்ள காவலர் மணியன். இக்கதாபாத்திரத்தில் ஜோஜூ ஜார்ஜ் நடித்துள்ளார். விபத்து நடப்பதற்கு சில காட்சிகளுக்கு முன்பு விபத்தில் இறந்தவர் சார்ந்த கட்சிக்காரர்களுடன் காவல்நிலையத்தில் தற்செயலாக கைகலப்பில் ஈடுபடுகிறார்கள் மணியனும், பிரவினும். தற்செயலான அந்தக் கைகலப்பு நடந்துமுடிந்த விபத்தை கொலையாக யூகிக்க போதுமானதாக இருக்கிறது. இப்படி நகரும் இக்கதையில் முதல் 30 நிமிடங்களுக்குப் பிறகு சூடுபிடிக்கிறது திரைக்கதை. மெல்ல அரசியல் நிறமேறி நம்மை திக்குமுக்காட வைக்கிறது அது. மணியன் பட்டியலினத்தைச் சேர்ந்தவர், விபத்தில் இறந்தவரும் பட்டியலினத்தைச் சேர்ந்தவர். தேர்தல் சமயமாக இருப்பதால் அவ்விபத்து கொலையாக சித்தரிக்கப்பட்டு பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கப்படுகிறது. ஒரு பட்டியலினத்தவரின் இறப்புக்கு நீதி இல்லையா என சிவப்பு போர்க்கொடிகள் எழுகின்றன. வழக்கம் போலவே எந்த முன்விசாரணையும் செய்யாமல் எந்திரங்கள் போல கண்மூடித்தனமாக ‘பட்டியலினத்தவருக்கு பாதுகாப்பு இல்லையா.?’ என முழங்குகின்றன அவை. இறந்தவர் மட்டுமல்ல கொலை செய்தவராக சொல்லப்படும் மணியனும்கூட பட்டியலினத்தை சேர்ந்தவர்தான் ஆனால் அது பொதுவெளியில் சென்று சேரவில்லை, அல்லது கொண்டு சேர்க்கப்படவில்லை.

image

மணியன், சுனிதா, பிரவின் மூவரும் தப்பியோடுகின்றனர். தேர்தல் முடிந்த பிறகு ஊர் திரும்பி நடந்ததை நிரூபிப்பது என்பது அவர்களது திட்டம். ஆனால் அது நடக்கவில்லை. மாறாக பட்டியலின மக்களின் ஓட்டுக்காக மூவரும் எப்படி வேட்டையாடப்பட்டார்கள் என்பது தான் இப்படம் பேசும் கசக்கும் உண்மை. காவல்துறையை சேர்ந்தவர்களாக இருந்தாலுமேகூட அவர்களுக்கு இருக்கும் பாதுகாப்பின்மை குறித்து பேசுகிறது இப்படம். ஒரு விசயத்தை பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து பிரமாதமாக இயக்கியிருக்கிறார் இப்படத்தின் இயக்குநர் மார்டின் ப்ரகாட்.


Advertisement

நாயட்டு என்கிற இந்த சினிமா எப்படி பல விசயங்களை அதனதன் தர்க்க கோணத்தில் ஆராய்கிறதோ அதே போல இதனைப் பார்க்கும் பார்வையாளர்களும் அவரவர் கோணத்தில் சில குற்றச்சாட்டுகளையும் முன்வைக்கின்றனர். ஜோஜூ ஜார்ஜ் கதாபாத்திரம் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி அல்ல, அவர் குற்றங்களை ஜோடிப்பவர். போலீஸ் நிலையத்தில் அநாகரீகமாக நடந்து கொள்ளும் ஒருவர் அங்குள்ள சுவற்றில் எச்சில் துப்புகிறார். இப்படியாக ஆங்காங்கே நெகடிவாக வரும் கதாபாத்திரங்களை நேரடியாகவே பட்டியலின மக்களாக சித்தரித்திருப்பது. இயக்குநரின் உள்ளார்ந்த பட்டியலின வெறுப்பு என்கின்றனர் சிலர். அதே போல கேரள கம்யூனிஸ்டுகள் முன்பின் யோசனையின்றி ஒரு பிரச்சனையை அணுகுவார்கள் என்பதாகவே கதையின் கரு அமைந்திருக்கிறது. ஒரு விபத்தை கொலையென நம்பி போர்க்கொடி தூக்கி பெரிய சேதத்தை விளைவிப்பவர்களின் கையில் செங்கொடி கொடுத்திருக்கிறார் இயக்குநர். இப்படியாக கம்யூனிஸ்ட் வெறுப்பு பட்டியலின வெறுப்பு என இயக்குநர் தன் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியினை இந்த சினிமா முழுக்க தூவியிருக்கிறார் என்ற விமர்சனங்கள பலமாக எழுந்தன. அது போலவே கேரள தமிழக எல்லையில் வாழும் தமிழர்களை கஞ்சா செடி பயிரிடுகிறவர்களாக காட்டியிருப்பது தமிழர்கள் பலரையும் கொதிக்க வைத்திருக்கிறது. இப்படத்தில் மட்டுமல்ல பல மலையாள சினிமாக்களில் தமிழர்களை தரமற்றவர்களாக சித்தரிக்கும் போக்கு நீண்டகாலமாகவே இருந்து வந்திருக்கிறது. இப்படியாக நாயட்டு என்கிற இந்த சினிமா மீது இருவேறு அபிப்ரயங்கள் ரசிகர்களிடையே உண்டு.

image

அரசியல் கடந்து சினிமாவாக இதனைப் பார்த்தால் மணியனாக நடித்திருக்கும் ஜோஜூ ஜார்ஜின் நடிப்பு குறித்து சொல்லவே வேண்டாம் அவர் தன் பங்கினை அவரது முந்தைய படங்களைப் போலவே வெகு சிறப்பாக செய்திருக்கிறார். பெண் காவலர் சுனிதாவாக வரும் நிமிஷா சஜயன் சின்னச் சின்ன முக அசைவுகளில் கூட பதற்றத்தை நமக்கு கடத்துகிறார். ஜோஜூ ஜார்ஜ், நிமிஷா சஜயன் இருவரும் நடித்து இதற்கு முன் வெளியான தத்துவார்த்த மலையாள சினிமா சோலா (Chola). 2019ல் வெளியான அந்த சினிமாவிலும் கூட நாயாட்டு போலவே இருவரும் காடுகளில் திரிவது போல திரைக்கதை அமைந்திருக்கும், அதன் பிறகு நிமிஷா சஜயன் நடிப்பில் வெளியாகி இந்திய அளவில் பாராட்டப்பட்ட திரைப்படம் ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’. தற்போது நாயட்டு, இப்படியாக நிமிஷா சஜன் நடிப்பில் வெளியான இப்படங்கள் அனைத்துமே சிறப்பான வெற்றியை அடைந்திருக்கின்றன. இதில் சோலா மற்றும் தி கிரேட் இண்டியன் கிச்சன் ஆகிய படங்கள் அமேசான் பிரைமில் காணக் கிடைக்கின்றன.

image

நாயட்டு திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கும் விஷ்னு விஜயின் உழைப்பு கவனிக்கத்தக்கது. இக்கதையினை நன்கு உள்வாங்கி மிகச் சரியான அலைவரிசையில் பார்வையாளனுக்கு கடத்தி இருக்கிறார். ஒளிப்பதிவாளர் ஷைஜு காலித்தும் தன் பங்கை சிறப்பாகவே செய்திருக்கிறார்.

திரில்லர் படங்கள் வெறுமனே கிரைம் ஸ்டோரிகளாகத்தான் இருக்கும் என்ற எண்ணத்தை மாற்றிக் காட்டியிருக்கிறது நாயட்டு. சமகால அரசியலை வேறுகோணத்தில் காட்டி நம்மை சிந்திக்கவைக்கிறது. த்ரில்லர் விரும்பிகள் தவறவிடக் கூடாத இந்த சினிமா தற்போது நெட்பிளிக்ஸில் கிடைக்கிறது.

- சத்யா சுப்ரமணி

முந்தைய ஓடிடி திரைப் பார்வை: 'பாரம்' - அதிரவைக்கும் 'தலைக்கூத்தல்' சடங்கு தரும் தாக்கம்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Related Tags : filmcinemacinema reviewmalayalam cinemaindian cinema
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close