[X] Close

"இதுவும் கடந்து போகும்..." - களப்பணியாற்றும் கர்ப்பிணி செவிலியர் குமுதா பேட்டி

Subscribe
Pregnant-Nurse-Interview-on-International-nurses-day-2021

சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு, களத்தில் இருக்கும் இரண்டு செவிலியர்கள், நம்மிடையே அவர்களின் கொரோனா தடுப்பு அனுபவத்தை பகிர்ந்துக்கொள்கின்றனர்.


Advertisement

'மக்களின் உயிர்காக்கும் மகத்தான சேவையில் தாயுள்ளத்துடன் ஈடுபடுபவர்கள் செவிலியர்கள்' எனக்கூறி பொறுமையின் சிகரங்களான இருபால் செவிலியர்களுக்கும், செவிலியர் தின பாராட்டுகளை இன்று தெரிவித்திருந்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

கைவிளக்கேந்திய காரிகை என்று புகழப்படும் ஃபுளோரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்தநாளான மே 12-ம் தேதி ஒவ்வோர் ஆண்டும் சர்வதேச செவிலியர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. பிற காலங்களைவிடவும், பெருந்தொற்று நேரத்தில் செவிலியர்கள் போர்கள வீரர்களாவே கருதப்படுகின்றனர். காரணம், அவர்களின் இடைவிடாத சேவை.


Advertisement

image

மனித நாகரிகம் உருவான காலத்திலிருந்தே செவிலியர்களின் பணி உலகளாவிய அளவில் இருந்து வருகிறது என்றாலும், கடந்த ஆண்டுதான் செவிலியர்கள் நாள் கொண்டாடுவதற்கு வித்திட்ட ஃபுளோரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் 200-வது ஆண்டு விழாவாகும். இதனைப் போற்றும் வகையில் 2020-ம் ஆண்டை சர்வதேச செலிவியர் ஆண்டாக அறிவித்தது உலக சுகாதார நிறுவனம். உலக சுகாதார நிறுவனம் அறிவித்து, சில வாரங்களிலேயே, கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பரவத்தொடங்கியது. அதைத்தொடர்ந்து, பெயருக்கேற்றார் போல கடந்த ஆண்டு முழுக்க செவிலியர்களின் சேவையை நம்பியே மனித இனம் இயங்கியது. 2020 மட்டுமன்றி, கொரோனா காரணமாக, இந்த ஆண்டும் செவிலியர்களை நம்பியே நாம் இயங்கும் நிலை தொடர்ந்து வருகிறது.

ஆனால் `செவிலயர்களை நம்பியே இயங்குகிறோம், செவிலியர்களின் தேவை அதிகரித்துள்ளது' என்பதை கொண்டாட்டமாகவோ விழாவாகவோ நினைத்து செயல்படும் அளவுக்கு, இன்றைய சூழல்நிலை இல்லை. அந்த அளவுக்கு இயற்கை நம்மை கொடூரமாக தண்டித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மனித குலத்தை மீட்கும் மகத்தான பொறுப்பை ஏற்றுக்கொண்டு, ஒவ்வொரு நாளும் போராடிக்கொண்டிருக்கின்றனர் நம் செவிலியர்கள்.


Advertisement

கொரோனாவை பொறுத்தவரை, மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கின்றனர் என்றால், நோயாளிக்கு அருகிலேயே இருந்து அவர்களை பராமரித்து நோயற்ற மனிதர்களாக மாற்றுவது, செவிலியர்கள்தாம். இதுபோன்ற போராட்ட காலத்தில், தொற்று அபாயம் அதிகமிருக்கும் கர்ப்ப காலம் - பாலூட்டும் நேரத்திலிருக்கும் பெண் செவிலியர்களை, போராளிகள் என்ற வார்த்தைக்குள் மட்டுமே அடக்கிவிட முடியாது. இவர்கள், நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் கவசமின்றி போர்களத்திலிருக்கும் போராளிகள்தாம்.

அப்படியான இரு போராளி செவிலியர்கள், நம்மிடையே அவர்களின் கொரோனா தடுப்பு அனுபவத்தை பகிர்ந்துக்கொண்டனர்.

9 மாத கைக்குழந்தை கொண்ட செவிலியர் சக்திப்பிரியா, தன் பணி அனுபவம் பற்றி பேசும்போது, "பாலூட்டும் தாய் என்பதால, எனக்கு தடுப்பூசி போட தடை இருக்கு. தடுப்பூசி போடாமல் கொரோனா பணியிலிருந்தால் தொற்று ஆபத்து மிக அதிகமா இருக்கும். இதனால மனசுல பயம் வருவது இயல்புதான். பயம் வரும்போது, மனசுலருக்கும் பயத்தையும் தாண்டி பாதிக்கப்பட்டவர்களுக்காக பணிபுரிவதற்காகத்தானே நாம செவிலியர் துறையில் நிபுணத்துவம் பெற்றோம் என்பதை மனசுல நிறுத்திக்குவேன். அதனால மனசுல பாரம் ஏத்திக்காம, வேலை பார்ப்பேன்.

image

என்னால முடிந்தவரை, மற்றவர்களை விடவும் கூடுதலா சில தொற்று தடுப்பு வழிமுறைகளை நானே ஏற்படுத்திக் கொண்டிருக்கேன். உதாரணத்துக்கு, நோயாளிகளுக்கு அருகில் செல்லும்போது, உச்சபட்ச பாதுகாப்பு கவசத்தோடுதான் போவேன். வீட்டுக்கு சென்றுவிட்டு, குழந்தையை தொடுவதற்கு முன்னாடி, குளிச்சிட்டு, நான் அணிந்திருந்த துணிகளையும் முழுமையா சுத்தப்படுத்திடுவேன். மருத்துவமனையிலிருந்து வரும்போது நான் கொண்டுவந்த எல்லா பொருள்களையும் சுத்தப்படுத்திய பிறகுதான், குழந்தையை தொடுவது - கொஞ்சுவது - பாலூட்டுவது எல்லாமே!"

கர்ப்பிணி செவிலியரான குமுதா, தன் பணி அனுபவம் குறித்து பேசும்போது, "எனக்கு கருவில் ஒரு குழந்தை இருப்பது போல, வீட்டில் இரண்டு வயதேயாகும் ஒரு குழந்தையும் இருக்காங்க. பணியில் இருக்கும்போது, இந்த இரண்டு சிறுபிள்ளைகளின் மீதும் என்னோட மனசு இருக்கும். பணிக்கு வரும்போது, கர்ப்பத்திலிருக்கும் கருவின் மீது மட்டும்தான் மனசிருக்கும். வீட்டுக்கு திரும்பும்போது, எனக்காக காத்திருக்கும் இன்னொரு குழந்தை மீது முழு கவனமும் இருக்கும். கொஞ்சம் பெரிய குழந்தையா இருந்திருந்தாலும், சூழ்நிலையை சொல்லி நம்மால புரியவைக்க முடியும். ஆனா, 2 வயசு குழந்தைக்கு, நம்மால என்ன புரிய வைக்க முடியும், சொல்லுங்க?

வீட்டுக்குள்ள நுழைஞ்சதும், குழந்தை அம்மான்னு ஓடி வந்துடுவா. ஆனா இப்போ இருக்க சூழ்நிலையில, நம்மால அதை அனுமதிக்கவும் முடியாது ; அதேநேரம் தவிர்க்கவும் முடியாது. இப்படி இக்கட்டான நிலை வரும்போது, மனசுக்கு கஷ்டமா இருக்கும். இருந்தாலும், கஷ்டம்ங்கறது நமக்கு மட்டும் இல்லையே... உலகத்துலருக்க எல்லாருக்குமே தான் இருக்கு. நம்மை போல முன்கள பணியாளர்களா இருக்கும் எல்லாரும் இப்படித்தானேனு நினைச்சு மனசை தேற்றிக்குவேன். இதுவும் கடந்து போகும்னு நம்புறேன். எல்லாவற்றுக்கும் மேல, செவிலியருக்கு படிக்கும்போது, சுய விருப்பு வெறுப்புகளை தாண்டி பணி செய்யணும்னு நினைச்சுதான் வேலைக்கு வந்தேன். அதனால, எந்தவொரு சோகத்தையும் மனதுக்கு நெருக்கமா எடுத்துக்கிடறதில்லை.

image

மருத்துவமனையில் இருக்கும்போது மாஸ்க், க்ளவுஸ், கவச ஆடைகள், தலைக்கான கவர் என பல கட்ட பாதுகாப்பு அம்சங்களோடுதான் இருப்பேன். இருந்தாலும், என்னோட ஆடை வழியா கொரோனா வேறு யாருக்கும் பரவிடுமோன்ற பயம் மனசுல இருந்துட்டே இருக்கும். அதனால கவச ஆடை அணிந்திருந்தாலும், சமூக இடைவெளியை ரொம்ப ஸ்ட்ரிக்டா பின்பற்றுவேன்.

நான் பொதுமக்கள்கிட்ட சொல்ல விரும்புவது ஒன்னுதான். முதல் அலையில உங்ககிட்ட இருந்த விழிப்புணர்வு, இப்போ அலட்சியாமாகிடுச்சு. அப்படியில்லாம, சளி - இருமல் - காய்ச்சல் - தொண்டை வலி - வாசனை தெரியாதது - சுவை தெரியாததுனு எது தெரிந்தாலும், உடனடியா மருத்துவமனையை அனுகி, முதல் நிலையிலேயே சிகிச்சை எடுக்க தொடங்கிடுங்க. அடிக்கடி கை கழுவுங்க, மாஸ்க் போடுங்க, சமூக இடைவெளியை கடைபிடிங்க!" என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close