[X] Close

கொரோனாவுக்குப் பிந்தைய நீண்ட கால பாதிப்புக்கும் தயாராக இருக்க வேண்டும்... ஏன்?

Subscribe
India-needs-to-prepare-for--Long-Covid--Says-Experts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீள்பவர்கள், நோயிலிருந்து மீண்ட பிறகு நோய்த் தடுப்பு மற்றும் ஆரோக்கியமான வாழ்வியலுக்கான வழிமுறைகளை பின்தொடரும் இதேநேரத்தில், நோயின் தொடர்ச்சியாக பின்வரும் மாதங்களில் ஏற்படவிருக்கும் உடல்சார்ந்த பக்கவிளைவுகளை எதிர்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டுமென நிபுணர்கள் கூறியுள்ளனர்.


Advertisement

அமெரிக்காவின் நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் நடத்திய சமீபத்திய ஆய்வில், நோய் குணமாகிய பின், சில மாதங்கள் கழித்து நோய் சார்ந்த மற்றும் புதிதாக சில அறிகுறிகள் தெரியவந்திருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. அந்த அறிகுறிகளில் மூச்சுத்திணறல், உடல் சோர்வு, தசை பிடிப்பு, இருமல், இதய துடிப்பி சீரற்று இருப்பது, மன அழுத்தம், சிறுநீரக பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு அதிகம். 

நோயிலிருந்து குணமாகி ஏறத்தாழ ஒன்றரை மாதங்களுக்குப் பின் மிக அதிகமாக முடி உதிர்வு ஏற்படுவது, இதய அழற்சி, நெஞ்சு வலி, வயிற்றுப்போக்கு, அதிகமாக மறதி ஏற்படுவது, சுவை அறிய முடியாமல் திணறுவது, வாசனை தெரியாமல் அவதிப்படுவது போன்றவற்றில் சில அதிகம் பேருக்கு ஏற்பட்டிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.


Advertisement

இப்படி கொரோனாவிலிருந்து மீண்டபிறகும் தொடர் பாதிப்புகளால் அவதிப்படுபவர்களை நீண்ட கால பாதிப்பாளர்கள் (லாங்க் ஹாலர்ஸ்) என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். இவ்வகை பாதிப்பை, நீண்ட கொரோனா பாதிப்பு (லாங் கோவிட்) என அவர்கள் குறிப்பிடுகிறார்கள். 

இப்படி நோய் குணமான பிறகும் ஏற்படும் பாதிப்புகள், இதற்கு முன் சார்ஸ், பன்றிக்காய்ச்சல், எபோலா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இருந்தன. இந்த கொரோனா நீண்ட கால பாதிப்பாளர்களுக்கு, உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் பாதிப்புகள் ஏற்படாது என்றாலும், இவர்களுக்கு ஆரோக்கியமான வாழ்வை முன்னெடுப்பது, மிகவும் சவாலாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

ஆபத்தை தவிர்க்க, கொரோனாவிலிருந்து மீளும் நபர்கள், வரும் வருடங்களில் எந்தவொரு அறிகுறியையும் உதாசீனப்படுத்தாமல் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். முடிந்தவரை ஆரோக்கியமான வாழ்வியலை மேற்கொள்ளுமாறும் இவர்களுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது. ஆரோக்கியமான வாழ்வியல் என்பது, சத்தான உணவு – மது, புகை இல்லாமல் இருப்பது போன்ற நெறிமுறைக்குட்பட்டு வாழ்வது.


Advertisement

image

இந்தப் பெருந்தொற்று, நோயின்போதும், நோய்த் தாக்கம் குறைந்த பின்னரும் ஏற்படுத்தும் மிக முக்கியமான பாதிப்பு, மன அழுத்தம்தான் என சொல்லும் ஆய்வாளர்கள், நீண்ட கொரோனா பாதிப்பு இருப்பவர்களுக்கு மனநலன் சார்ந்த பிரச்னை அதிகம் ஏற்படலாம் என கணிக்கின்றனர். ஆகவே அவர்கள் தங்கள் மனநலனில் கூடுதல் அக்கறை காட்ட அறிவுறுத்துகின்றனர். அரசும், தங்கள் மக்களின் உடல்நலனுக்கு மேற்கொள்ளும் முயற்சிகளை போலவே, மனநலன் மேம்பாட்டுக்கும் முன்னெடுப்புகள் எடுக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளனர்.

நீண்ட கால கொரோனா பாதிப்பில், குழந்தைகள் அதிகப்படியாக பாதிக்கப்படுவதாக, சமீபத்திய சில ஆய்வுகள் சொல்கிறது. பிரிட்டிஷில் கடந்த ஆண்டு செய்யப்பட்ட ஆய்வொன்றில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையிலிருந்த 500 குழந்தைகளின் உடல்நலன் கண்காணிக்கப்பட்டது. சிகிச்சையிலிருந்து வீடு திரும்பிய அவர்கள், தற்போது சமீபத்தில் மீண்டும் பரிசோதிக்கப்பட்டபோது, அவர்களில் குறைந்தபட்சம் 25% குழந்தைகளாவது நீண்ட கால கொரோனாவால் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது. இந்தக் குழந்தைகளுக்கு, உடல் சோர்வு, தூக்கம் சார்ந்த சிக்கல்கள், உணர்ச்சியின்மை போன்ற சிக்கல்கள் அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதமே, உலக சுகாதார நிறுவனம் இவ்வகை பாதிப்பு குறித்து எச்சரித்திருந்தது இங்கே நினைவுகூரத்தக்கது. அவர்கள் குறிப்பிட்டிருந்த வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், `பத்தில் ஒருவருக்கு நீண்ட நாள் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது, கொரோனா பாதிப்பு ஏற்பட்டு 12 வாரங்களுக்குப் பின்னிருந்து இப்படியான பாதிப்புகள் தொடங்கிவிடுகிறது’. ஆகவே கொரோனா நோயாளிகளுக்கு, நோய்த்தொற்று காலத்தில் மட்டுமன்றி, நோயிலிருந்து மீண்டபிறகும், உடல்நலன் சார்ந்த முக்கியத்துவத்தையும் கவனத்தையும், நாம் செலுத்த வேண்டும்.’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close