[X] Close

கொரோனா விரைவுச் செய்திகள் ஏப்.28 - சிறார் பாதிப்பு அதிகரிப்பு முதல் உ.பி அவலம் வரை!

Subscribe
Covid-19-fast-news-April-28

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு புதிய உச்சமாக 16,000-ஐ கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 98 பேர் நோய்த் தொற்றால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா நோய் பரவல் மிக வேகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 33 பேர் உட்பட 16,665 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் 12 வயதுக்கு உட்பட்ட 571 சிறார்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 5ஆம் தேதி அன்று 128 சிறார்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் தற்போது தொடர்ந்து 6ஆவது நாளாக சிறார்களின் தினசரி பாதிப்பு 500ஐ கடந்து பதிவாகி வருகிறது.


Advertisement

தமிழகத்தில் இதுவரையிலான கொரோன பாதிப்பு 11,30,167 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 15,114 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 10,06,033 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் ஒரே நாளில் 98 பேர் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 13,826 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,10, 308 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் ஒரே நாளில் 4,764 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,219 பேரும், கோவை மாவட்டத்தில் 963 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 751 பேரும், நெல்லை மாவட்டத்தில் 714 பேரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 594 பேரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.


Advertisement

18+ முன்பதிவில் சிக்கல் - ஆரோக்ய சேது விளக்கம்:

18 வயது நிரம்பியவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், அதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

18 முதல் 45 வயதுக்கு உட்பட்டோர் மே ஒன்றாம் தேதி முதல் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான முன்பதிவு மாலை 4 மணிக்கு தொடங்கியது. அதனைத் தொடர்ந்து முன்பதிவு செய்வதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. முன்பதிவு செய்ய முயன்ற பலருக்கும் OTP எண் தாமதமாக வருகிறது என்றும், பல இடங்களில் கோவின் தளமே செயல்படாமல் முடங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.


Advertisement

பலரும் ஒரே நேரத்தில் பதிவு செய்ய முற்பட்டதால் முன்பதிவில் சிக்கல் இருப்பதாக தெரிகிறது. அதே போல் முன்பதிவு செய்தவர்களுக்கு இடம், நேரம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றும் பலரும் புகார் தெரிவித்தனர். இந்நிலையில், புகார் தொடர்பாக ஆரோக்ய சேது செயலி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அரசு, தனியார் மையங்கள் தடுப்பூசிக்கான இடம் மற்றும் நேரப் பட்டியலை தயாரித்த பிறகே முன் பதிவு செய்தோருக்கு ஒதுக்கீடு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது.

தடுப்பூசிகளை வீணாக்கியதில் தமிழகம் முதலிடம்:

பதினெட்டு வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்த முதல்கட்டமாக ஒன்றரை கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் சனிக்கிழமை முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. இதுநாள் வரை மத்திய அரசு தான் தடுப்பூசிகளை கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்கியது. இந்நிலையில் முதன்முறையாக தமிழக அரசு நேரடியாக 1.50 கோடி கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய ஆணை பிறப்பித்துள்ளது. 1.50 கோடி தடுப்பூசிகளும் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலமாக கொள்முதல் செய்யப்படும் என அரசு கூறியுள்ளது. இதில் 1.20 கோடி டோஸ்கள் கோவிஷீல்டும், 30 லட்சம் டோஸ்கள் கோவாக்சினும் கொள்முதல் செய்யப்பட உள்ளது. ஏற்கனவே இந்த நிறுவனங்கள் அறிவித்துள்ள விலையின் படி கோவிஷீல்டு 1.20 கோடி டோஸ்களுக்கு 480 கோடி ரூபாயும், கோவாக்சின் 30 லட்சம் டோஸ்களுக்கு 180 கோடி ரூபாயும் அரசு செலவிட வேண்டும்.

இதனிடையே, கொரோனா தடுப்பூசி மருந்துகளை வீணாக்கியதில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக மத்திய அரசின் தரவுகளிலிருந்து தெரியவந்துள்ளது. ஏப்ரல் 27 ஆம் தேதியின்படி, தமிழகத்தில் 8.83 விழுக்காடு தடுப்பூசி மருந்துகள் வீணாகியுள்ளன. ஜனவரி 16 ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரையிலான காலத்தில் 4.5 லட்சம் டோஸ் மருந்துகள் வீணடிக்கப்பட்டுள்ளன. ஒரு மருந்து குப்பியை திறந்தால், அதை 2 முதல் 8 டிகிரி செல்சியல் வெப்பநிலையில் வைத்திருந்து, 4 மணி நேரத்துக்குள் பயன்படுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு பயன்படுத்த முடியாத மருந்துகளே வீணடிக்கப்பட்ட மருந்துகள் என அழைக்கப்படுகின்றன.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் புதன்கிழமை காலை நிலவரப்படி, 3 லட்சத்து 57 ஆயிரத்து 961 தடுப்பூசிகள் மீதமுள்ளன. வருங்காலத்தில் மாநிலங்களுக்கு 57 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்க திட்டமிட்டுள்ள நிலையில், தமிழகத்துக்கு மேலும் 3 லட்சம் தடுப்பூசிகள் வந்து சேரும் எனத் தெரிகிறது.

ஆளுநர் பன்வாரிலாலுடன் தலைமைச் செயலர் சந்திப்பு:

கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் சூழலில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை, தலைமை செயலர் ராஜிவ் ரஞ்சன் நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த இச்சந்திப்பில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், மருந்து கையிருப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. மே 1 மற்றும் 2ஆம் தேதிகளில் முழுமுடக்கத்தை அமல்படுத்துவது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் நீதிமன்றம் பரிந்துரை செய்திருப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் டிஜிபி திரிபாதி, சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், குடும்பநலத்துறை முதன்மைச் செயலர் பி.செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ரெம்டெசிவிர் விற்பனை மையம் இடமாற்றம்:

ரெம்டெசிவிர் மருந்து விற்பனை இனி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கும் ரெம்டெசிவிர் மருந்துக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. அதனால், 104 என்ற தொலைபேசி கட்டுப்பாட்டு அறையை உருவாக்கிய தமிழக அரசு, மருந்து தடையின்றி கிடைக்க கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிறப்பு மையத்தையும் அமைத்தது. மருத்துவமனை வளாகத்தில் மக்கள் அதிகம் கூடுவதால் நோய்த் தொற்று பரவம் அபாயம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், கீழ்ப்பாக்கம் மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டுவந்த ரெம்டெசிவிர் விற்பனை மையம், இனி மருத்துவக் கல்லூரி வளாகத்தில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக புதிய தலைமுறைக்கு தகவல் கொடுத்த மருத்துவமனை முதல்வர் வசந்தாமணி, 2 கவுன்ட்டர்களுடன் ரெம்டெசிவிர் மையம் செயல்படும் எனக் கூறினார். ரெம்டெசிவிர் விற்பனைக்கான டோக்கன் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதனைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை... கட்டுப்பாடுகள் அறிவிப்பு:

கொரோனா பரவல் மிகத்தீவிரமாக உள்ள நிலையில் 5 மாநில வாக்கு எண்ணிக்கையின்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. கொரோனா பரவலுக்கு இடையே தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இந்நிலையில், வாக்குப்பதிவின் போது பின்பற்ற வேண்டிய கொரோனா தடுப்பு வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ் அல்லது தொற்று இல்லை என்பதற்கான ஆவணத்தை 48 மணி நேரத்திற்கு முன்பாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இல்லை எனில் அவர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர்கள் மற்றும் வாக்கு எண்ணும் அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகளை தேர்தல் நடத்தும் அதிகாரி மேற்கொள்ள வேண்டும் என்றும், வாக்கு எண்ணிக்கையின் போது கொரோனா தடுப்பு விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை தேர்தல் நடத்தும் அதிகாரி மருத்துவ அதிகாரியின் உதவியுடன் கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கையின் போது மையங்களுக்கு வெளியே பொதுமக்கள் கூடக்கூடாது எனவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசி விலை ரூ.300 ஆக குறைப்பு:

மாநிலங்களுக்கான கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை 400 ரூபாயிலிருந்து 300 ரூபாயாக குறைப்பதாக சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. மனிதாபிமான அடிப்படையில் இந்த முடிவை தான் எடுத்திருப்பதாக சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதர் பூனவாலா தெரிவித்துள்ளார். விலை குறைப்பு உடனடியாக நடைமுறைக்கு வருகின்றது எனவும் அவர் கூறியிருக்கிறார். இதன் மூலம் மாநில அரசுகளுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மிச்சமாகும் என்றும், அந்தத் தொகையைக் கொண்டு மேலும் ஏராளமானோருக்கு தடுப்பூசி செலுத்தி, எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றலாம் எனவும் ஆதர் பூனவாலா குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டெர்லைட்டில் ஜூலை 31 வரை ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி:

வரும் ஜூலை 31ஆம் தேதி வரை ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி அளிக்கப்படுவதாக உச்சநீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பில் நகல் இன்று வெளியாகியுள்ளது. இதன்படி ஆக்சிஜன் உற்பத்திக்காக ஜூலை 31 வரை ஆலை திறந்திருக்க ஸ்டெர்லைட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரும் அனுமதி நீட்டிக்கப்படுவது குறித்து அப்போதைய சூழலுக்கு ஏற்ப முடிவெடுக்கப்படும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது.

ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்கிட தேவையான மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அனுமதிகளையும் தமிழக அரசு விரைந்து வழங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் ஆலையை திறப்பதற்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் பொது மக்கள் மனு அளித்துள்ளனர். நாளை கறுப்பு தினம் அனுசரிக்கவும் எதிர்ப்பு இயக்கத்தினர் முடிவு செய்துள்ளனர்

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது என ஆட்சியரிடம் மனு:

கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டாத தமிழக அரசு, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூட்டம் கூட்டி ஆலைக்கு சாதகமான முடிவை எடுத்துள்ளதாக ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழுவினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பாத்திமாபாபு மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் ஆகியோர் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யக்கூடாது என மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்தி என்ற பெயரில் மீண்டும் தூத்துக்குடிக்குள் நுழைய முயல்கிறது எனக் குற்றஞ்சாட்டினர்.

உ.பி அரசு மீது உயர் நீதிமன்றம் காட்டம்:

சுதந்தரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும் உத்திரபிரேதசத்தில் மக்களுக்கு ஆக்சிஜன் வழங்க முடியாததது வெட்கக்கேடானது என அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தவறியது தொடர்பான பொதுநல வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், சுதந்தரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும் மக்களுக்கு ஆக்சிஜன் வழங்க முடியாது வெட்கக்கேடானது எனத் தெரிவித்தது.

அரசு மருத்துவமனைக்கு சென்றால் கொரோனாவுக்கு இறக்காதவர்கள் டெங்குக்குக்காக இறந்துவிடுவர் என வேதனை தெரிவித்தது. அந்த அளவுக்கு முறையான மின்சாரம், போதிய கழிப்பறைகள் இல்லாமல் மருத்துவமனைகள் உள்ளன. கொரோனா தடுப்பு விவாகரத்தில் யோகி ஆதித்யநாத் அரசு, என்வழி இல்லையேல் வேறு வழியே இல்லை என்ற அணுகுமுறையை கைவிட்டு, நீதிமன்றத்தின் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும் எனக் கூறியது. மேலும், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் 14 நாட்கள் முழுமுடக்கத்தை அமல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. இதுதவிர உள்ளாட்சித் தேர்தலின் போது 135 அரசு ஊழியர்கள் உயிரிழந்த விவகாரத்தில் மாநில தேர்தல் ஆணையம் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தடுப்பூசி இன்றி திருப்பி அனுப்பப்பட்ட மக்கள்:

கோவையில் உள்ள மாநகராட்சி நகர்நல மையத்தில் தடுப்பூசி செலுத்த வந்த மக்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள நகர்நல மையத்திற்கு தடுப்பூசி செலுத்த வந்த மக்களிடம், தடுப்பூசி கையிருப்பு இல்லை என கூறி திருப்பி அனுப்பினர். நகர்நல மையத்தில் இரண்டு நாட்களுக்கு தடுப்பூசி கையிருப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது. மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியனிடம் கேட்டபோது, தடுப்பூசி கையிருப்பு விவரம் குறித்து சுகாதாரத்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், உடனடியாக தடுப்பூசி கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தார்.

கர்நாடகத்தில் 14 நாட்கள் ஊரடங்கு அமல்:

கர்நாடக மாநிலத்தில் 14 நாட்கள் முழு ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில், தமிழக- கேரள எல்லையான கக்கநல்லா சோதனை சாவடி வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஊரடங்கு அறிவிப்பை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் பணிக்காக சென்றிருந்த நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கூடலூர் வழியாக சொந்த ஊர்களுக்கு திரும்பினர். கர்நாடகத்தில் ஊரடங்கு அமலுக்கு வந்ததையடுத்து இன்று காலை முதல் தமிழக - கர்நாடக எல்லையான கக்கநல்லா சோதனைச்சாவடி வழியாக போக்குவரத்து அடியோடு குறைந்தது. அத்தியாவசியப் பொருட்களை ஏற்றி வரும் சரக்கு வாகனங்கள் மட்டுமே சோதனைச்சாவடி வழியாக சென்றன.

மனைவியின் உடலை சைக்கிளில் வைத்து கொண்டு சென்ற கணவர்:

கொரோனாவால் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் பெண்ணின் உடலை எரிக்க கிராமத்தினர் எதிர்ப்புத் தெரிவித்தால், சடலத்தை அவரது கணவர் சைக்கிளில் வைத்து தள்ளிச்சென்ற கொடுமை உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. ஜான்பூர் பகுதியைச் சேர்ந்த ஒரு முதியவரின் மனைவியான ராஜ்குமாரி தேவி மரணமடைந்தார். ஆனால், அவர் கொரோனா தொற்றால் உயிரிழந்ததாக ஜான்பூர் மக்களுக்கு சந்தேகம் எழுந்தது. இதன் காரணமாக உள்ளூர் மயானத்தில் அப்பெண்ணின் உடலை எரிக்க எதிர்ப்புக் கிளம்பியது. இதனால் செய்வதறியாது திகைத்த அந்த முதியவர், தனது மனைவியின் உடலை ஒரு சைக்கிளில் வைத்து கட்டிக்கொண்டு புறப்பட்டார். சிறிது தூரம் சென்ற அவர், சோர்வடைந்து ஒரு இடத்தில் தனது மனைவியின் உடலை சாலையில் கிடத்திவிட்டு, அருகில் அமர்ந்து கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

கோவாவில் 4 நாட்கள் முழுமுடக்கம் அமல்:

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கோவாவில் 4 நாட்கள் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை இரவு 7 மணி முதல் திங்கள்கிழமை காலை 7 மணி வரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். காசினோ எனப்படும் விளையாட்டு விடுதிகள், ஹோட்டல்கள், மதுபான கூடங்கள் மூடப்படும் என்றும், பொதுப்போக்குவரத்தும் தடை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் அத்தியாவசிய சேவைகளுக்கும், தொழில் துறையினருக்கும் இந்த பொதுமுடக்கத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனையை சூறையாடிய உறவினர்கள்:

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததையடுத்து, உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தனியார் மருத்துவமனையை உறவினர்கள் சூறையாடினர். கடந்த சில நாட்களாக டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில், கொரோனா உயிரிழப்பால் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. அவ்வகையில், ஆக்ராவில், சிகிச்சை பலனின்றி கொரோனா நோயாளிகள் சிலர் உயிரிழந்ததையடுத்து அவர்களின் உறவினர்கள் மருத்துவமனையை சூறையாடினர்.

டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா இறப்புகள்:

டெல்லியில் விலங்குகளின் தகனத்துக்காக ஒதுக்கப்பட்ட மயானம், தற்போது மனிதர்களுக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் நாள்தோறும் கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை 700-ஐ எட்டியுள்ளது. இதனால் மக்கள் சடலத்துடன் தகனம் செய்வதற்காக, தகன மேடைகளில் காத்திருக்கும் நிலை உள்ளது. தெற்கு டெல்லி மாநகராட்சியின் கீழ் உள்ள துவாரகா பகுதியில் விலங்குகளுக்கு என 3.5 ஏக்கர் பரப்பில் மயானம் ஒதுக்கப்பட்டிருந்தது. அது இதுவரை பயன்பாட்டுக்கு வராத நிலையில், கொரோனாவால் உயிரிழந்தவர்களை எரிப்பதற்கு தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மே 1 முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்":

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் வரும் ஒன்றாம் தேதி முதல் பள்ளிக்கு வரத் தேவையில்லை என தமிழக பள்ளிக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் பள்ளிக்கு வந்து கல்விக் கற்கும் சூழல் தற்போது வரை ஏற்படாத நிலையில், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக பள்ளிக்கல்வி இயக்குநரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு தேதி குறித்து மறு அறிவிப்பு வரும் வரை ஆசிரியர்கள் வீட்டிலிருந்தபடியே வழிகாட்டுதல்களை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிற வகுப்பு மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி வாயிலாக கல்வி கற்கவும் பயிற்சி மேற்கொள்ளவும் ஆசிரியர்கள் வீட்டிலிருந்தபடியே வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. வரும் கல்வியாண்டுக்கு பள்ளிகளை தயார் செய்யும் பொருட்டு, மே மாத கடைசி வாரத்தில் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வரவேண்டியிருக்கும் எனவும் பள்ளிக் கல்வி துறை தெரிவித்துள்ளது.

எல்லையோர மதுக்கடைகளில் அலைமோதும் கூட்டம்:

கேரளம் மற்றும் புதுச்சேரியில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால், மதுக்குடிப்போர் தமிழக எல்லையில் உள்ள கடைகளில் முகாமிட்டதால், அங்கு நீண்ட வரிசை காணப்பட்டது.

புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் மதுக்கடைகள் அடைக்கப்பட்டதால், மதுக்குடிப்போர் திருவாரூர் மாவட்டத்தில், சன்னாநல்லூர் கிராம மதுக்கடைகளுக்கு படையெடுத்தனர். அவர்கள் அனைவரும் கொரோனா அச்சமின்றி மதுக்கடைகளில் முட்டிமோதி மதுபானங்களை வாங்கிச் சென்றனர். டாஸ்மாக் கடை முன்பு கூட்டம் கூடுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சன்னாநல்லூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுச்சேரியில் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளதால், கடலூரில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுகுடிப்போர் குவிந்தனர். கடலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள மதுபானக் கடை முன்பாக கடை திறப்பதற்கு முன்னதாகவே நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தமிழகத்திலும் கொரோனா பரவலால் மதுபானக் கடைகள் மூடப்படுமோ என்ற அச்சத்தால், மதுபானங்களை அவர்கள் அதிகளவில் வாங்கிச் சென்றனர்.

கேரளாவில் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், வயநாட்டை ஒட்டியுள்ள நீலகிரியில் இருக்கும் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை வாங்குவதற்காக மக்கள் குவிந்தனர். வயநாட்டில் ஒரே நாளில் 900க்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், அங்குள்ள ஏராளமானோர் தாளூர், நம்பியார்குன்னு, அய்யன்கொல்லி பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடைகளுக்கு வந்து செல்கின்றனர். நீண்ட வரிசையில், தனி மனித இடைவெளியின்றி மதுபாட்டில்களை வாங்கிச் செல்வதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் தமிழக-கேரள எல்லையில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

செவிலியர், மருத்துவர்களுக்கான நேர்காணல்:

கொரோனா சிகிச்சை பணிக்காக சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கான நேர்முகத்தேர்வு நாளை முதல் நடைபெற உள்ளது. சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு 4ஆயிரத்தை தாண்டி வருகிறது. இதனால் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, கூடுதலாக 150 மருத்துவர்கள் மற்றும் 150 செவிலியர்களை நியமிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி, நாளை முதல் வருகிற 30ஆம் தேதி வரை ரிப்பன் மாளிகையில், சென்னை மாநகர அலுவலர் முன்னிலையில் நேர்முகத் தேர்வு நடைபெறவுள்ளது. தகுதியானவர்கள் இதில் கலந்து கொள்ளளாம் எனக் கூறியுள்ள மாநகராட்சி, மருத்துவர்களுக்கு 60 ஆயிரம் ரூபாயும், செவிலியர்களுக்கு 16 ஆயிரம் ரூபாயும் ஊதியமாக நிர்ணயித்துள்ளது. இவர்கள் தற்காலிகமாக நியமிக்கப்படுவதாகவும், எக்காரணம் கொண்டும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டார்கள் எனவும் உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்துறைகளுக்கான ஆக்சிஜன் விநியோகத்தை நிறுத்த உத்தரவு:

கொரோனா காரணமாக தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் ஆக்சிஜன் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால், கோவையில் இயந்திரங்கள் தயாரிப்புக்கான மூலப்பொருளான உலோகங்கள் அறுக்கும் லேசர் கட்டிங் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன.

கொரோனா தீவிரம் காரணமாக தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்கும் நோக்கில், மருத்துவ உபயோகத்துக்கு மட்டும் ஆக்சிஜன் விநியோகம் செய்ய வேண்டும் எனவும், 9 துறைகளை தவிர்த்து மற்ற தொழில் துறைகளுக்கான ஆக்சிஜன் விநியோகத்தை நிறுத்த ஆக்சிஜன் உற்பத்தியாளர்களுக்கு தமிழக அரசு கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஆணை பிறப்பித்தது. இதனால் கோவையில் உலோகங்களை அறுக்க பயன்படும் ஆக்சிஜன் தேவையுள்ள தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன. இந்த நிலை நீடித்தால், இன்னும் ஒரு வாரத்திற்குள் அனைத்து தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டு, நேரடியாக ஒரு லட்சமும், மறைமுகமாக சுமார் 5 லட்சம் தொழிலாளர்களும் பாதிக்கப்படும் நிலை உருவாகும் என்கிறார்கள் கட்டிங் தொழில்துறையினர்.

இஸ்ரேலைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் மாஸ்கிலிருந்து விடுதலை:

இஸ்ரேலைத் தொடர்ந்து அமெரிக்காவும், மாஸ்க் அணிவதிலிருந்து தமது நாட்டு மக்களுக்கு விலக்கு அளித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் தடுப்பூசி. மாஸ்க் இல்லாத வாழ்க்கை எப்போது? - உலகம் முழுவதும் கொரோனா தொற்று ஆட்டிப்படைத்து வரும் நிலையில், பெரும்பாலான மக்களின் கேள்வி இதுதான். கொரோனா நம் உடலுக்கு நுழையாமல் பாதுகாப்பு முதல் கவசமே இந்த மாஸ்க் தான். எனவே முற்றிலும் கொரோனா அழியும் வரை மாஸ்கில் இருந்து விடுதலை கிடையாது. ஆனால், 85 சதவீத மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில், இஸ்ரேல் அரசு முக்கவசத்திலிருந்து தங்கள் நாட்டு மக்களுக்கு விடுதலை அளித்துள்ளது.

இஸ்ரேலைத் தொடர்ந்து அமெரிக்காவும் மாஸ்க்கிலிருந்து விடுதலை அளித்துள்ளது. எனினும், இது தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு மட்டுமே. அமெரிக்காவில் முழு அளவில் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் முகக்கவசம் அணியாமல் வெளியே செல்லலாம் என்றும் சிறு குழுக்களாக கூடும் போதும் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் சலூன்கடைகள், அருங்காட்சியகம், திரையரங்கம் போன்ற இடங்களில் முகக்கவசம் கட்டாயம் என்றும் நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. அமெரிக்க மக்கள் தொகையில் சுமார் 40 சதவீதம் பேர் முழு அளவில் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர்.

தடுப்பூசி எடுத்துக் கொள்வதன் மூலமே, கொரோனாவை விரைவில் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என உலகமே நம்புகிறது. எனவே, நமது நாட்டிலும் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வர வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close