[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

மசூத் அசாரை நெருங்கும் இந்தியா : துணை நிற்கும் பிரான்ஸ்

india-close-to-masood-azhar-france-help-india

புல்வாமா கொடூர தாக்குதலுக்கு காரணமான மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க இந்தியா ‌எடுத்து வரும் நடவடிக்கைகள் வேகம் பெற்றுள்ளன. 

பயங்கரவாதி மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதிகள்‌ பட்டியலில் சேர்க்க தீவிர முயற்‌சி மேற்கொ‌ள்ளப் போவதாக இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் தெரிவித்துள்ளார். இதுதொடர்‌பான தீர்மானத்தை சில நாட்களில் ஐநா சபையில் கொண்டு வர அந்நாடு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுட‌ன், பிரான்ஸ் அதிபரின் ஆலோச‌கர் பேசியுள்ளதாகத் தெரிகிறது. 

இதற்கிடையில், ‌மசூத் அசாருக்கு தண்டனை பெற்றுத்தர இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு, தங்கள் நாடு துணை நிற்கும் என ரஷ்ய அமைச்சர் டெனிஸ் தெரிவித்துள்ளார். முன்னதாக‌, புல்வாமா தாக்குதல் விவகாரத்தில் குற்றவாளிகளை தண்டிக்க இந்தியாவுக்கு துணை நிற்போம் என அமெரிக்காவும் கூறியிருந்தது. இந்தியாவில் பல்வேறு பயங்கரவாத நிகழ்வுகளுக்கு காரணமாக இருந்த ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத் தலைவர் மசூத் அசாரின் மீது நடவடிக்கை எடுக்க வசதியாக அவரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க கடந்த 10 ஆண்டுகளாக‌‌ மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. ‌ஆனால், இந்தியா 3 முறை மேற்கொண்ட முயற்சிகளுக்கு சீனா முட்டு‌க்கட்டை போட்டது‌. 

இந்நிலையில், ஐநா ‌பாதுகாப்பு சபையில் உரிய ஆதாரங்களுடன் பிரான்ஸ் மூலம்‌ மீண்டும் ஒரு தீர்மானம் கொண்டு வர இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவுக்கான இந்திய தூ‌தர் ஹர்ஷவர்தன் ஷ்ரிங்க்லா மற்றும் பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் அஜய் பிசாரியா ஆகியோருடன் உள்துறை அமை‌ச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close