[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்
  • BREAKING-NEWS 100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்
  • BREAKING-NEWS நெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

அமெரிக்கா போர்த்திப் பாதுகாக்கும் குவாம் தீவு.. என்னதான் இருக்கிறது அங்கு?

guam-island-where-the-us-wars-protects

பூமியின் கடல் பரப்பில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டியிருக்கும் நாடு அமெரிக்கா. இதற்கு பெரிதும் உறுதுணையாக இருப்பது குவாம் தீவு.

அமெரிக்காவில் சூரிய உதயத்தை முதலில் காண்பதே குவாம் தீவுதான். அமெரிக்காவின் பெரு நிலப்பரப்புக்கு மேற்கே 11 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. பசிபிக் பெருங்கடல் பகுதியில் மேற்கு நாடுகள் கண்டுபிடித்த முதல் தீவு இதுதான். புகழ்பெற்ற கடல் ஆய்வாளரான மெகல்லன் தன்னுடைய உலகைச் சுற்றும் கடல் பயணத்தின்போது இந்தத் தீவைக் கண்டறிந்தார். நீண்ட காலம் ஸ்பெயினின் காலனி ஆதிக்கத்துக்கு உள்பட்டிருந்த இந்தத் தீவு, பின்னர் அமெரிக்காவின் வசம் வந்தது. கடந்த நூற்றாண்டில் இரண்டாம் உலகப் போர் நடந்த போது சிறிது காலம் ஜப்பானியர்களின் கட்டுப்பாட்டிலும் இருந்தது.

சுமார் 48 கிலோ மீட்டர் நீளம், 13 கிலோ மீட்டர் அகலம் கொண்ட இந்தத் தீவு பாரம்பரியக் கலைகள் பலவற்றின் இருப்பிடம். உலகின் பல பிராந்தியங்களில் இருந்தும் வந்த மக்கள் இங்கு குடியிருப்பதால், பல்வேறு பண்பாடுகளின் கலவையை இங்கு காணலாம்.

பசிபிக் பெருங்கடலில் உள்ள மைக்ரோனேசியத் தீவுக் கூட்டத்தில் மிகப் பெரிய தீவு இதுதான். இதன் புவியியல் அமைவிடமே இந்தத் தீவுக்கு சிறப்பை அளித்திருக்கிறது. ஒரு வகையில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆசியா ஆகிய பிராந்தியங்களின் நுழைவு வாயில் போலவும் இதைக் கருதலாம். ஐக்கிய நாடுகள் சபையின் காலனிப் பிராந்தியங்களின் பட்டியலில் இருக்கும் குவாம் தீவு, அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒருங்கிணைக்கப்படாத தீவு என்ற அங்கீகாரத்தைக் கொண்டது. இதனால் அமெரிக்காவின் நாணயமான டாலரையே குவாம் தீவு மக்களும் பயன்படுத்தி வருகிறார்கள். அமெரிக்கர்கள் இங்கு வருவதற்கு விசா பெறத் தேவையில்லை. மற்ற நாட்டினர் தங்கள் பகுதியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் விசா பெற்றுக் கொள்ளலாம்.

இங்குள்ள மலைகள், காடுகள் போன்ற இயற்கை வனப்புகளைத் தவிர, கடலுக்கு அடியில் உள்ள பவளப் பாறைகளும் சுற்றுலாப் பயணிகளை இங்கு அதிகம் ஈர்க்கின்றன. உலகின் மற்ற பகுதிகளில் காணக்கிடைக்காத அரியவகை கடல் வாழ் உயிரினங்களை இங்கு பார்க்க முடியும். பல பிராந்தியங்களுக்கு மையமாக இருப்பதால் சுற்றுலாவைப் போலவே, பாதுகாப்பு உத்திகளை வகுப்பதிலும் இந்தத் தீவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இவ்விரண்டும்தான் பொருளாதாரத்துக்கும் அடிப்படையான காரணிகள்.

குவாமில் தனி நாடாளுமன்றம் தனி ஆளுநர் போன்றவை இருந்தாலும், அதிகாரங்கள் அனைத்தும் அமெரிக்க அதிபரிடமே குவிந்திருக்கிறது.

அமெரிக்காவின் ராணுவம், கடற்படை, விமானப்படைத் தளங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. தொலைத் தொடர்பு வசதிகளும் நிறுவப்பட்டிருக்கின்றன. தீவின் மொத்த நிலப்பரப்பில் பெரும்பாலான பகுதி அமெரிக்காவின் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. இவை மட்டுமல்லாது, தீவைச் சுற்றியும் அமெரிக்காவின் படைகள் ஆண்டு முழுவதும் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. படைத்தளங்களுக்கான வாடகையாக ஒவ்வோர் ஆண்டும் அறிவிக்கப்படாத மிகப்பெரிய தொகையை குவாம் தீவுக்கு அமெரிக்கா வழங்கி வருகிறது. இங்கு வசிக்கும் ஒன்றரை லட்சம் மக்களும் அமெரிக்கா வழங்கும் நிதியையே பெரும்பாலும் நம்பியிருக்கின்றனர். வடகொரியாவிடம் இருக்கும் ஏவுகணைகளின் தாக்குதல் வரம்புக்குள் இருக்கும் ஒரே அமெரிக்கப் பிராந்தியம் என்ற வகையில் ஆபத்தையும் எதிர்நோக்கியுள்ளது குவாம் தீவு.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close