[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS மருத்துவமனையில் அருண் ஜெட்லி.. நள்ளிரவில் அமைச்சர்கள் சந்திப்பு
  • BREAKING-NEWS அத்திவரதர் வைபவம் நிறைவு: அனந்தசரஸ் குளத்தில் இன்று வைக்கப்படுகிறது சிலை!
  • BREAKING-NEWS சாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்

யார் இந்த டொனால்ட் ட்ரம்ப் ?

who-is-donald-trump

அரசியல் அனுப‌வம் இல்லாத‌ டொனால்ட் ட்ரம்ப், பல ஆண்டுகள் அரசியல் அனுபவம் கொண்ட ஹிலரி கிளிண்டனை தோற்கடித்து, வல்லரசின் அதிபராக தேர்வாகியுள்ளார். எப்போதும் பரபரப்பாக எதையாவது பேசி ஊடகத்தின் கவனத்தை ஈர்த்த ட்ரம்ப். இந்த முறை அதிபராக தேர்வாகி உலகத்தின் கவனத்தையே ஈர்த்துள்ளார்.

அரசியல் அனுபவமற்றவர் ட்ரம்ப் அமெரிக்காவுக்குள் அத்துமீறி நுழைவோரைத் தடுப்பதற்காக எல்லை நெடுக பெருஞ்சுவரை எழுப்ப வேண்டும் என்று அதிரடியாகக் கூறி அமெரிக்கர்களையும், அண்டை நாட்டவரையும் மிரள வைத்தவர் டொனால்ட் ட்ரம்ப். ட்ரம்புக்கு சீனர்களை மிகவும் பிடிக்கும். செல்வம் கொழிக்கும் நாடு என்பதால் சவுதி அரேபியாவைப் போற்றுவார். ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் போர்களை நடத்தியது முட்டாள்தனம் என்று வெளிப்படையாகச் சொல்வார். இவர்தான் டொனால்ட் ட்ரம்ப். சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் முன்னேற்றத்துக்காகப் பயன்படுத்தத் தெரிந்த வித்தகர். இருநூறு ஆண்டுகளுக்கும் மேலான அமெரிக்கத் தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக மாறுபட்ட அத்தியாயம் ஒன்றை எழுதிக் கொண்டிருப்பவர். தொழிலதிபர், தொலைக்காட்சிப் பிரபலம், எழுத்தாளர், அரசியல்வாதி என்று வெவ்வேறு வகையான பரிமாணங்களைக் கொண்டவர்.

ரியல் எஸ்டேட் துறையில் வெற்றிகரமாகச் செயல்பட்ட ஃப்ரெல் ட்ரம்பின் மகனான டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவின் பெரும்பணக்காரர்களுள் ஒருவர். குடியிருப்புகள், வணிக வளாகங்கள், விளையாட்டு மைதானங்கள் என நூற்றுக்கணக்கான சொத்துகளுக்குச் சொந்தக்காரர். ட்ரம்ப் டவர், ட்ரம்ப் தாஜ் மஹால், ட்ரம்ப் பிளாசா என நாடு முழுவதும் இவரது பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கும் சொத்துகள் ஏராளம்.

திருமணம் செய்தாலும், புதிய தொழிலைத் தொடங்கினாலும், அவற்றை மக்களைக் கவரும் வகையில் விளம்பரப்படுத்துவதில் ட்ரம்ப் திறமையானவர் ட்ரம்ப். என்பிசி தொலைக்காட்சியில் இவர் நடத்திய APPRENTICE என்ற தொடர் அதனால்தான் வரவேற்பு பெற்றது. 2005-ஆண்டில் ஒளிபரப்பான இந்தத் தொடரின் ஒரு பகுதிக்காக மட்டும் இவர் பெற்றுக்கொண்ட தொகை எவ்வளவு தெரியுமா? 18 கோடி ரூபாய். அண்மையில் வெளிப்படையாக ஒப்புக்கொண்டபடி இவரது சொத்துமதிப்பு 35 ஆயிரம் கோடி ரூபாய். ஆண்டு வருமானம் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய். பங்குகள் மூலமாகவும், வங்கி வட்டி மூலமாகவும் வரும் வருமானம் தனி.

அரசியலில் பல கட்சிகளைச் சார்ந்து இயங்கியவர் டொனால்ட் ட்ரம்ப். 1988-ஆம் ஆண்டிலேயே ஜார்ஜ் எச் டபுள்யூ புஷ்ஷின் துணை அதிபர் வேட்பாளராக ட்ரம்ப் தேர்வு செய்யப்படலாம் என்று ஊகங்கள் நிலவின. பிற்காலத்தில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர்களுக்கும் அவர் ஆதரவு தெரிவித்திருக்கிறார். அதே நேரத்தில் ஜனநாயகக் கட்சியின் அதிபர்களையும் பாராட்டிப் பேசியிருக்கிறார். இவற்றுக்கு மத்தியில் 2000-ஆம் ஆவது ஆண்டில் சீர்திருத்தக் கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளர்களுக்கான தேர்தலிலும் போட்டியிட்டார். 15 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த ஆண்டு ஜூன் மாதம் அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்து அதி‌ர்ச்சியளித்தார். பல்வேறு அதிருப்திக்கு மத்தியில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ட்ரம்ப், பரபரப்பான பேச்சுகளால் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

அரசியல் அனுபவம் இல்லாமல், பல்வேறு கிண்டலுக்கு ஆளாகி இருந்தாலும், ட்ரம்ப் தேர்தலில் வெற்றி பெற்று அதிபராக தேர்வானதோடு, ஆப்ரஹாம் லிங்கன், தியோடர் ரூஸ்வெல்ட், ஐசனோவர், ஜெரால்ட் போர்டு, ரொனால்ட் ரீகன் போன்ற குடியரசுக் கட்சியின் அதிபர்கள் வரிசையிலும் சேர்ந்து சாதனை நாயகனாக உருவெடுத்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close