புதுச்சேரி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் தற்கொலை செய்த விவகாரத்தில் நீதி விசாரணை கோரி, உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு நாட்டில் உள்ள சிறந்த 10 காவல்நிலையங்களில் புதுச்சேரி நெட்டப்பாக்கம் காவல் நிலையத்தை 4-வது காவல்நிலையமாக தேர்வு செய்து விருது வழங்கியது. இந்த நிலையில் நெட்டப்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவல் உதவி ஆய்வாளர் விபல்குமார் நேற்று காலை காவல் நிலையத்தின் பின்புறம் உள்ள காவலர் குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் காவல் துறையினர் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமத்தில் உள்ள இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விபல்குமாரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனை முன்பாக கூடி விபல்குமார் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், சிபிஐ விசாரணை நடத்த கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் மரணத்திற்கு முன்பாக விபல்குமார் எழுதிய கடிதத்தை வெளியிட வேண்டும் எனவும் வலியுறுத்தி உடலை பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.
இந்தப் போராட்டம் காரணமாக புதுச்சேரி வழுதாவூர் சாலையில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து விபல்குமாரின் தந்தை பாலு கூறுகையில், “என்னுடைய மகன் மிகவும் நேர்மையான காவல் அதிகாரி. அவருக்கு காவல் நிலையத்தில் பணியாற்ற கூடிய ஆய்வாளர் கலைச்செல்வன் என்பவர் பல்வேறு விதமான வகையில் நெருக்கடிகள் கொடுத்ததன் காரணமாக இந்த மர்ம மரணம் நடைபெற்றுள்ளது.
விமல்குமார் தற்கொலை செய்து கொள்வதற்கான வாய்ப்புகள் இல்லை. இது திட்டமிட்ட கொலை. இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். எனது மகன் மரணத்திற்கு காரணமான ஆய்வாளர் கலைச்செல்வன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராகுல் அல்வால் மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.
‘கேப்மாரி’ படத்திற்குத் தடை கோரிய மனு தள்ளுபடி
ஒரே ஆண்டில் 3 ஆவது முறையாக தேர்தலை சந்திக்கும் இஸ்ரேல்
இனப்படுகொலை குற்றச்சாட்டு: சர்வதேச நீதிமன்றத்தில் ஆங் சான் சூச்சி மறுப்பு
ஆற்றில் புகுந்த முதலைகள் - மீன்பிடித் தொழிலாளர்கள் அச்சம்..!
பாம்பு கடித்து 4 வயது சிறுவன் உயிரிழப்பு - மருத்துவமனை மீது பெற்றோர் குற்றச்சாட்டு