திருமணமான ஐந்தே மாதங்களில் புதுப்பெண் கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக பெண்ணின் முன்னாள் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாராபுரம் அடுத்த மூலனூர் அருகே பெருமாள்வலசு பகுதி சாலையோரத்தில் பெண் சடலம் ஒன்று கிடப்பதாக மூலனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே ஆய்வாளர் வனிதாமணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பெண்ணின் சடலத்தை கைப்பற்றி சோதனை செய்தனர். அப்போது அப்பெண்ணின் கைகள் பின்புறமாக கட்டப்பட்டும், வாயில் துணிவைத்து அடைக்கப்பட்டும் இருந்தது தெரிய வந்தது.
மேலும் இந்தப் பெண் யார் என அடையாளம் தெரியாத நிலையில் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு கொலையான பெண் யார் என்பது குறித்து விசாரணையில் போலீசார் ஈடுபட்டு வந்தனர். விசாரணையில் அந்தப் பெண் நாமக்கல் மாவட்டம் ராம்புதூர் பகுதியை சேர்ந்த ஓட்டல் தொழிலாளி ரமேஷ் என்பவரின் மனைவி திருமங்கை(33) எனத் தெரிந்தது. உடனே நாமக்கல்லுக்கு சென்ற மூலனூர் போலீசார் ரமேஷிடம் நடத்திய விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஒரே ஓட்டலில் வேலை செய்து வந்த ரமேஷூம், திருமங்கையும் ஐந்து மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதாகவும் 18-ஆம் தேதி திருமங்கை கோயிலுக்கு செல்வதாக கூறி ஸ்கூட்டரில் சென்றவர் வீடு திரும்பவில்லையென்றும் அவர் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து திருமங்கையின் செல்போன் அழைப்புகளை போலீசார் ஆய்வு செய்ததில் அவருக்கு கடைசியாக சேலம் மாவட்டம், அம்மாபேட்டை சோத்துநாயக்கன்காடு பகுதியை சேர்ந்த தனபால்(22) என்பவர் பேசியதை போலீசார் கண்டறிந்தனர்.
உடனே தனபாலை பிடித்த போலீசார் அவரிடம் முறையாக விசாரித்ததில் அவர் திருமங்கையை கொலை செய்ததை ஒப்புகொண்டதாக போலீசார் கூறியுள்ளனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் தனபால், நாமக்கல்லில் அறை எடுத்து தங்கி ஜே.சி.பி. இயந்திரம் ஓட்டி வருவதாகவும் அப்பகுதிலுள்ள ஓட்டல் ஒன்றில் வழக்கமாக சாப்பிட சென்றபோது அங்கு வேலை செய்து வந்த திருமங்கையுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியதாகவும் தெரியவந்துள்ளது. தனபால் அடிக்கடி தனது அறைக்கு திருமங்கையை அழைத்து சென்றதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் வயதை காரணம் காட்டி தனபாலை திருமணம் செய்ய மறுத்த திருமங்கை, கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அவருடன் வேலை செய்துவந்த ரமேஷை திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனாலும் தனபாலுடனான தொடர்பை அவர் தொடர்ந்துள்ளார். இதனிடையே கடந்த18-ம் தேதி தனது கணவரிடம் கோயிலுக்கு செல்வதாக கூறிவிட்டு தனபாலின் அறைக்கு சென்ற திருமங்கை தனபாலுடன் இருந்த நேரத்தில் திருமங்கையின் உடலில் ஆடம்ஸ் என்ற பெயர் பச்சைகுத்தப்பட்டு இருப்பதை தனபால் பார்த்துள்ளார்.
உடனே திருமங்கையிடம் இது யார் பெயர் எனக் கேட்டதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆகவே திருமங்கையின் வாயில் துணியை வைத்து அடைத்து, கைகளை நைலான் கயிற்றால் கட்டிப்போட்டுவிட்டு அடித்ததாக தெரிய வந்துள்ளது. பிறகு திருமங்கையின் துப்பட்டாவை வைத்து அவரது கழுத்தை நெரித்து கொலை செய்ததாக தனபால் ஒப்புக் கொண்டுள்ளார் என போலீசார் வழங்கியுள்ள தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.
மேலும் சடலத்தை தனபால் தனது அறையிலேயே வைத்து பூட்டியுள்ளார். திருமங்கையின் ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு நண்பரின் வீட்டுக்கு சென்ற தனபால், தான் அவசரமாக ஊருக்கு செல்ல வேண்டி இருப்பதால் நண்பரின் காரை கேட்டுள்ளார். காரை எடுத்து கொண்ட தனபால் அங்கேயே திருமங்கையின் ஸ்கூட்டரை நிறுத்தி உள்ளார்.
நண்பரின் ஆம்னி வேனை எடுத்துக்கொண்ட தனபால் அவரது அறைக்கு சென்று திருமங்கையின் உடலை போர்வையால் சுற்றி வேனில் ஏற்றிக் கொண்டு திருப்பூர் மாவட்ட எல்லையான தாராபுரம் அடுத்த மூலனூர் அருகே வீசி சென்றுள்ளார். இந்த விவரங்களை தனபால் காவல்துறையினரிடம் ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தனபாலை கைது செய்த மூலனூர் போலீசார், அவரை தாராபுரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சசிக்குமார் முன்பு ஆஜர்படுத்தினர். நீதிபதியின் உத்தரவின் படி தனபாலை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
‘கேப்மாரி’ படத்திற்குத் தடை கோரிய மனு தள்ளுபடி
ஒரே ஆண்டில் 3 ஆவது முறையாக தேர்தலை சந்திக்கும் இஸ்ரேல்
இனப்படுகொலை குற்றச்சாட்டு: சர்வதேச நீதிமன்றத்தில் ஆங் சான் சூச்சி மறுப்பு
ஆற்றில் புகுந்த முதலைகள் - மீன்பிடித் தொழிலாளர்கள் அச்சம்..!
பாம்பு கடித்து 4 வயது சிறுவன் உயிரிழப்பு - மருத்துவமனை மீது பெற்றோர் குற்றச்சாட்டு