ஜெயிலுக்கு சென்றால் சாப்பாடு கிடைக்கும் என்பதால் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்
கடந்த 3-ம் தேதி சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய நபர், ஈரோடு ரயில் நிலையத்திலும் பேருந்து நிலையத்திலும் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், இன்னும் சற்று நேரத்தில் வெடிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் தன்னை ஜம்மு காஷ்மீரில் இருந்து அனுப்பி வைத்துள்ளார்கள் எனவும் தெரிவித்தார். உடனடியாக ஈரோடு போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். ரயில் மற்றும் பேருந்து நிலையம் போலீசாரின் கட்டுப்பாட்டில் வந்தன. ஆனால் போலீசாரின் சோதனையில் வெடிகுண்டு ஏதும் கைப்பற்றப்படவில்லை.
தொலைபேசியில் நபர் கூறிய தகவல்கள் பொய் என புரிந்துகொண்ட போலீசார், அந்த நபர் குறித்து விசாரணையை மேற்கொண்டனர். அவர் பயன்படுத்திய செல்போன் எண்ணை கண்டுபிடித்து நெருங்கினர். அந்த செல்போன் உரிமையாளர் லிங்கராஜ் எனவும், அவர் போதையில் தனது செல்போனை தொலைத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். ஆக கீழே கிடந்த செல்போனை பயன்படுத்தியே மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதை போலீசார் உறுதி செய்தனர்.
பின்னர் செல்போன் டவரை கணக்கிட்ட போலீசார் ஈரோடு ரயில் நிலையம் அருகே நின்றுகொண்டிருந்த சந்தோஷ் (41) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சந்தோஷின் வாக்குமூலத்தைக் கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த வாக்குமூலத்தில், எனக்கு திருமணமாகி 2 மனைவிகள் இருந்தனர். தற்போது இருவரும் என்னுடன் இல்லை. பிரிந்து சென்றுவிட்டனர். நான் தனியாக உள்ளேன். சிறுமுகை அருகே மில் ஒன்றில் வேலை பார்த்து வந்தேன். அதிக வேலைபளு. வாழ்க்கையே வெறுத்துவிட்டது. ஆனால் சாப்பாடு வேண்டும்.
அதனால் ஏதாவது செய்து ஜெயிலுக்குச் சென்றால் சாப்பாடு கிடைக்கும் என முடிவு செய்தேன். அதனால் தான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தேன் என தெரிவித்தார். பின்னர் சந்தோஷை நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போலீசார் ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.
மக்காச்சோளக்காட்டில் சடலமாக கிடந்த பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை - 3 பேர் கைது
பூம்புகார் கடலில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு
கந்துவட்டிக்காக தொழிலாளி வீட்டை இடித்த கும்பல் : 3 பேர் கைது
அழகான இரு வெங்காயத் தோடுகள் - மனைவிக்கு அக்ஷய் குமார் தந்த விநோத பரிசு
படிக்கட்டில் தடுக்கி விழுந்த ‘பிரதமர் மோடி’ - காயம் எதுவுமில்லை என தகவல்