[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்
  • BREAKING-NEWS நீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு

இன்று ஆசிரியர் தினம் : ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

governor-chief-minister-wishes-to-teachers-day

ஆசிரியர் தினத்தையொட்டி, தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ‌உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மாணவர்களின் வெற்றிக்கு பாடுபடும் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், கற்பித்தல் சமூகத்தின் முயற்சிகளை அங்கீகரிப்போம் என குறிப்பிட்டுள்ளார். 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வாழ்த்து செய்தியில், டாக்டர் ராதாகிருஷ்ணன் காட்டிய வழியில் ஆசிரியப் பெருமக்கள் அனைவரும் மாணவர்களுக்கு நல்ல குறிக்கோள்களையும், சமுதாய உணர்வுகளையும் கற்பித்து சிறந்த கல்விப்பணியாற்றிட வேண்டும் என தெரிவித்துள்ளார். 

தாய் தந்தைக்கு அடுத்தப்படியாக மூன்றாவது இடத்தில் வைத்து உலகம் போற்றும் ஆசிரியர்களுக்கு திமுக சார்பில் வாழ்த்து தெரிவிப்பதாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். 

ஒழுக்கம், பண்பு, பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு இள வயதில் ஆசிரியர்களே போதிக்கின்றனர் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 

மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், அரும்பணி ஆற்றிடும் ஆசிரியர்களை போற்றிடுவோம் என தெரிவித்துள்ளார். 

நாட்டின் எதிர்காலம் வகுப்பறைகளில் தான் தீர்மானிக்கப்படுகிறது என்ற டாக்டர் ராதாகிருஷ்ணனின் பொன்மொழியை அனைவரும் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். ‌

ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்களின் கல்விக்கும், நல்வாழ்வுக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும் ‌தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தன் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், பொதுநல சிந்தனையோடு ஆசிரியர்கள் தங்களது பணியை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். 

தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், பண்பட்ட சமுதாயத்தை உருவாக்கக்கூடிய ஆசிரியர் பணி தெய்வத்திற்கு நிகரான பணி எனக் கூறியுள்ளார். 

அர்ப்பணிப்பு உணர்வுள்ள ஆசிரியர்களே நம் சமுதாயத்தின் அறிவுத்தூண்கள் என இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் தலைவரும், மக்களவை உறுப்பினருமான பாரிவேந்தர் தனது வாழ்த்துச் செய்தியில் ‌குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close