[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஐடியில் தற்கொலை செய்த மாணவி பாத்திமாவின் தந்தை இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS கும்பகோணத்தில்‌ பாதாளச்சாக்கடையில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
  • BREAKING-NEWS பயங்கரவாதத்தால் ஆண்டுக்கு 70 லட்சம் கோடி ரூபாய் இழப்பு: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

தமிழக பாஜக தலைவர் டு தெலங்கானா ஆளுநர் - தடம் பதித்த தமிழிசை 

political-life-of-tamilisai-soundararajan

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கடந்த 1961ஆம் ஆண்டு, ஜூன் 2ஆம் தேதி பிறந்தார் தமிழிசை. தனது தந்தை காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் பதவியில் இருந்தபோதும், மாற்றுக்கட்சியான பாரதிய ஜனதா மீதே தமிழிசைக்கு சிறுவயது முதல் ஈர்ப்பு இருந்தது. 

சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் பயின்றபோது, மாணவர் அமைப்பின் தலைவராக இருந்தார். கல்லூரி படிப்புக்குப் பின் சென்னையில் உள்ள ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் 5 ஆண்டுகள் உதவிப் பேராசிரியராக பணியாற்றினார். மகப்பேறு சார்ந்த பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்கும் சிறந்த மருத்துவர்களில் ஒருவரான தமிழிசை, மருத்துவ சேவையோடு, அரசியல் களத்திலும் பயணித்து வந்தார். 

1999 முதல் 2001வரை தென் சென்னை மாவட்ட பாரதிய ஜனதா மருத்துவ அணியின் செயலாளராக இருந்தார். அதனைத் தொடர்ந்து, 2001 முதல் 2004 வரை பாரதிய ஜனதாவின் மாநில மருத்துவ அணியின் செயலாளராக பதவி உயர்த்தப்பட்டார். 2005 முதல் 2007 வரையிலான ஆண்டுகளில், பாரதிய ஜனதாவின் அகில இந்திய மருத்துவ அணியின் தென் மாநில இணை அமைப்பாளராக செயல்பட்டார். கடின உழைப்பால் கட்சி மேலிடத்தின் நம்பிக்கையைப் பெற்ற தமிழிசை, 2007ஆம் ஆண்டு தமிழ்நாடு பாரதிய ஜனதாவின் செயலாளரானார். 

படிப்படியாக வளர்ச்சியைப் பெற்ற அவர், 2014ஆம் ஆண்டு பார‌திய ஜனதாவின் மாநிலத் தலைவர் ஆனார். தமிழ்நாடு பாரதிய ஜனதாவின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்தது. கட்சியில் அடுத்தடுத்த கட்டங்களுக்கு உயர்ந்த தமிழிசை, தேர்தல் களத்தில் போட்டியிட்டு ஒருமுறை கூட வெற்றியை ருசிக்கவில்லை.

2006 சட்டமன்றத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியிலும், 2011ல் வேளச்சேரி தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ‌சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். அதேபோன்று, 2009 மக்களவைத் தேர்தலில் வட சென்னை தொகுதியிலும், இந்த ஆண்டு தூத்துக்குடி மக்களவைத் தொகுதியிலும் களம் கண்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். 

தொலைக்காட்சி விவாதங்களில் அதிகம் பங்கேற்று, ‌தான் சார்ந்திருக்கும் கட்சிக்காகவும் அதன் கொள்கைகளுக்காகவும் ஆணித்தர‌மா‌க வாதாடியவர். எளிதில் அணுகக்கூடிய தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் என்ற பெ‌யரும் அவருக்கு உண்டு. கட்சியில் மாநிலத் தலைவர் பதவிக்காலம் டிசம்பருடன் முடியவடைய இருந்த நிலையில், தெலங்கானா மாநில ஆளுநராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close