[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இ-சிகரெட் விற்பனை, உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதிக்கு தடை - மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் எனத் தகவல்

சங்கிலி கொள்ளையனை மடக்கிப் பிடித்த தைரிய பெண் - பொதுமக்கள் பாராட்டு

bold-women-caught-robbery-man

சென்னை பூவிருந்தவல்லி அருகே பெண்ணிடம் கத்தி முனையில் வழிப்பறி செய்ய முயன்ற நபர் பிடிபட்டார். வெட்டப்பட்டு கையில் ரத்தம் சொட்டச்சொட்ட, கொள்ளையனைப் பிடித்த பெண்ணை பொதுமக்கள் பாராட்டினர்.

சென்னையில் பல்வேறு விதமான வழிப்பறி சம்பவங்கள் நடந்திருப்பதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், பூவிருந்தவல்லி அருகே அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம் கொஞ்சம் வித்தியாசமானது. காட்டுப்பாக்கம் இந்திரா நகரைச் சேர்ந்த தனலட்சுமி, டிவி சீரியல் படப்பிடிப்பு தளத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த தனலட்சுமி, ஆபத்தும் தன்னை பின்தொடர்ந்து வருவதை அறியவில்லை.

வெகு தொலைவில் இருந்தே அவரை பின் தொடர்ந்து வந்த நபர் ஒருவர், தனலட்சுமி அணிந்திருந்த 5 சவரன் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றார். சுதாரித்துக் கொண்ட அவர் சங்கிலியை விடவில்லை. ஆத்திரமடைந்த கொள்ளையன் தனலட்சுமியை கத்தியால் வெட்டிவிட்டு தப்பிக்க முயன்றபோது, வலியால் பதறிய அவர் கூச்சலிட்டார். அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த இளைஞர்கள் சிலர், தப்ப முயன்ற கொள்ளையனை விரட்டிப் பிடித்து சரமாரியாக தாக்கினர்.

காவல்துறை விசாரணையில், வழிப்பறியில் ஈடுபட்டவர் அயப்பன்தாங்கல் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்பது தெரியவந்தது. பத்திரிகையாளர் அடையாள அட்டையை போலியாக தயாரித்து வைத்திருந்ததும், இருசக்கர வாகனத்தில் PRESS என ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டு வலம் வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் தெரியவந்த சம்பவங்கள் தான், இருப்பதிலேயே ஹைலைட்.

வழிப்பறி நடந்த இடத்தில் வழக்கமாக எரியும் மின் விளக்குகள் சம்பவத்தின்போது எரியவில்லை. அதனால், மின்வாரிய அலுவலகத்துக்கு புகார் சென்றுள்ளனர். சம்பவ இடத்தில் ஊழியர்கள் ஆய்வு செய்தபோது, அங்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்பதும், மின்விளக்குகளை யாரோ ஸ்விட்ச் ஆஃப் செய்திருப்பதும் தெரியவந்தது. 

வழிப்பறிக்கும், மின்விளக்குகள் அணைக்கப்பட்டதற்கு தொடர்பு இருக்கலாம் என காவல்துறைக்கு எழுந்த சந்தேகம், விசாரணையில் உறுதியானது. வழிப்பறி செய்யச் செல்லும் சிவக்குமார், அதற்கு வசதியாக அங்குள்ள தெருவிளக்குகளை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிடுவார். தெருவிளக்குகளுக்கு அருகிலே அதன் ஸ்விட்ச் இருப்பதால், அந்த வேலை அவருக்கு எளிமையாக இருந்துள்ளது. 

யாருக்கும் சந்தேகம் ஏற்படாததை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அவர் தொடர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக கூறுகிறது காவல்துறை. அதன்பின், சிவக்குமார் கைது செய்யப்பட்டார். அவர் வைத்திருந்த இருசக்கர வாகனம், கத்தி, மிளகாய்ப்பொடி உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close