[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வழக்கு
  • BREAKING-NEWS ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது தடியடி- டெல்லியில் விடியவிடிய போராட்டம்
  • BREAKING-NEWS 'இலங்கைத் தமிழர்களை ஏன் ஒதுக்கினீர்கள்' - ப.சிதம்பரம் கேள்வி
  • BREAKING-NEWS ஏ.எம்.யூ. மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை: ஜன. 5 வரை கல்லூரி மூடல்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 77.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.81 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னையில் இருந்து டெல்லி செல்லும் முதலமைச்சர் பழனிசாமி டிச. 19ஆம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கிறார்

“கமலை கைது செய்ய வாய்ப்பு உள்ளதா?” - நீதிபதி கேள்விக்கு அரசு தரப்பு விளக்கம் 

justice-postponed-about-kamal-case-judgement

கோட்சேவுக்கு இந்து என்பதை தவிர வேறு அடையாளம் இல்லையா என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனத் தேர்தல் பரப்புரையின்போது கமல்ஹாசன் கூறியது சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து கமல்ஹாசன் மீது நடவடிக்கை கோரி, இந்து முன்னணி நிர்வாகி அளித்த புகாரின்போரில், அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து தமக்கு முன்ஜாமின் வழங்கக் கோரி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கமல்ஹாசன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “மே 12 ஆம் தேதி இரவு 8.30 மணியளவில் கமல்ஹாசன் பேசிய நிலையில் 14 ஆம் தேதி மாலை 5 மணியளவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. முதல்கட்ட விசாரணை செய்யாமல் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக குறிப்பிடுவது மதக்கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் அவர் பேசினார் என்பதே. 

ஆனால் 12 ஆம் தேதி கமல் பேசிய நிலையில் தற்போது வரை எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. அத்தோடு புகார் அளித்தவர் நிகழ்விடத்தில் இல்லாத நிலையில் கேட்டறிந்த தகவலின் அடிப்படையிலேயே புகார் அளித்துள்ளார். கமல் பேசியபோது அங்கிருந்த இந்து மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியதாக எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு கூடியிருந்தவர்களில் யார் இந்து என எப்படி கண்டறிந்தார் எனத் தெரியவில்லை. ஆகவே இது உள்நோக்கத்தோடு பதிவு செய்யப்பட்ட வழக்கு. இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் எந்த முகாந்திரமும் இல்லை” என வாதிட்டார். 

இதைத்தொடர்ந்து கமல் பேசிய வீடியோ காட்சிகள் நீதிபதியிடம் காண்பிக்கப்பட்டது. அதையடுத்து சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என கமல் பேசியுள்ளார். கோட்சேவுக்கு இந்து என்பதை தவிர வேறு அடையாளம் இல்லையா என நீதிபதி கேள்வி எழுப்பினார். 

இதற்குப் பதிலளித்த கமல் தரப்பு வழக்கறிஞர், “காந்தி சுட்டுக்கொலை செய்யப்பட்டபோது, வானொலியில் காந்தி ஒரு இந்து வெறியனால் சுட்டுக்கொல்லப்பட்டார் எனச் செய்தி வெளியானது. அதையே வெளிப்படுத்தினோம். ஆனால் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை புண்படுத்தும் நோக்கில் பேசவில்லை” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து கமல்ஹாசனை கைது செய்து விசாரிக்க ஏதேனும் அவசியம் உள்ளதா என நீதிபதி கேள்வி எழுப்பினார்.  அதற்கு அரசு குற்றவியல் வழக்கறிஞர், சம்மன் அனுப்பி அவரிடம் விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்தார். ஒருவேளை அவரது விளக்கம் திருப்தி அளிக்கவில்லை எனில் அவர் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதா என நீதிபதி கேள்வி எழுப்பினார். 

திருப்தி இல்லை என்றால் தான் கைது நடவடிக்கை எடுக்கப்படலாம் எனவும் தற்போது சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்பட உள்ளதால் மனுதாரர் அச்சப்படத் தேவையில்லை என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தார். மேலும் இந்தச் சர்ச்சை பேச்சு குறித்து ஊடகங்களும் அரசியல் கட்சிகளும் தேர்தல் முடியும் வரை விவாதிக்க வேண்டாம் என நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close