[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது

நூறு ஆண்டுகளை தொட போகும் சோமசுந்தரேஸ்வரர் தேர் 

kallal-somasundareswarar-temple-car-has-been-pass-over-100-years

கல்லல் சோமசுந்தரேஸ்வரர் சௌந்தரநாயகி கோயிலுக்கு சொந்தமான தேர் 100 ஆண்டை கடந்தும் தனது கம்பீர தோற்றத்தால் பக்தர்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்தி வருகிறது. 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலிருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது பாரம்பரிய பெருமை கொண்ட கல்லல். இங்குள்ள மக்களின் காவல் தெய்வமாக விளங்கி வரும் சுந்தரரேஸ்வரர் செளந்தரநாயகி கோயிலுக்கு சொந்தமான தேருக்கு 100 வயது ஆகிறது. கம்பீரமாக  நிற்கும் அந்தத் தேருக்கு குன்னங்கோட்டை நாடு என அழைக்கப்படும் 22க்கும் மேற்பட்ட கிராமங்களைக் கொண்ட இந்தப் பகுதிக்கான பண்பாட்டுச் சின்னமாக திகழ்கிறது. இந்தத் தேரின் திருப்பணி, கடந்த 1920 ஆம் ஆண்டு மத்தியில் தொடங்கி, 1921 ஆம் ஆண்டில் நிறைவடைந்துள்ளது.

குன்னங்கோட்டை பகுதி மக்களின் ஒத்துழைப்புடன், சிறிய சப்பரமாக இருந்த இத்தேரை, பெருந்தேராக கட்டி எழுப்பிய பெருமைக்குரியவர் வேப்பங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மதுரகவி ஆண்டவர். கடந்த நூற்றாண்டின் தமிழ்ப்பெருங்கவியாக திகழ்ந்த மதுரகவி ஆண்டவர், பர்மாவில் தொழில் செய்து தாம் ஈட்டிய செல்வத்தின் ஒரு பகுதியையே இந்தத் தேரின் திருப்பணிக்காக செலவிட்டுள்ளார்.

தேர் செய்யும் காலத்தில் தங்கி இருப்பதற்காக அவர் எழுப்பிய ஸ்ரீ குகமணிவாசக நிலையம் என்ற மடாலயம் தற்போதும் பராமரிக்கப்பட்டு வருகிறது. மகனின் எதிர்பாராத மரணத்தால் இல்லறத்தில் இருந்து துறவறம் பூண்ட மதுரகவி ஆண்டவர், தமது முப்பத்தைந்தாவது வயதிலேயே திருத்தேரை திருத்தமுடன் செய்து முடித்ததாக கூறுகிறார் அவரது மகள் வழிப் பேரனான தமிழறிஞர் மெய்யாண்டவர்.

தேர்ப்பணியில் மட்டுமின்றி, தேமதுரத் தமிழ்ப்பணியிலும் சிறந்து விளங்கிய மதுரகவி ஆண்டவர், அண்ணபூரணி அம்மன் பிள்ளைத் தமிழ், முருகக்கடவுள் நீத்தல் விண்ணப்பம், திருவாசக அமுதசாரம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட செவ்விலக்கிய நூல்களையும் இயற்றியுள்ளார். இத்தெய்வீக பனுவல்கள் மட்டுமின்றி, சந்தம் துள்ளும் செந்தமிழ்நாட்டுச் சிறப்பு போன்ற பண்பாட்டு பெருமை பேசும் பாடல்களையும் மதுரகவி ஆண்டவர் இயற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நூறு ஆண்டுகளை எட்ட உள்ள இந்தத் தேர் காலத்தால் பழுதான தேரின் சக்கரங்களை பெரும் பொருள் செலவில் புதிதாக மாற்றியமைத்து, அதன் கம்பீரப் பேரழகு சிறிதும் குறையாமல் அதன் மாண்பைக் காத்து வருகின்றனர் குன்னங்கோட்டை மண்ணின் மைந்தர்கள்.

கீழடி போன்ற புதைந்து கிடக்கும் வரலாற்றுச் சுவடுகளை தேடிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில், நூறாண்டுகள் ஆன பின்னரும் கண்முன்னே கம்பீரம் குன்றாத கலைக் கோபுரமாக வலம் வந்து கொண்டிருக்கிறது கல்லல் தேர். பல பெருமைகளை கொண்ட கலைநய வேலைப்பாட்டுடன் கம்பீரமாக எழுந்து நிற்கும் இத்தேர் பல நூற்றாண்டை பெருமையுடன் கடந்து செல்லும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close