[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

களைகட்டிய அவனியாபுரம் - வீரத்தை பறைசாற்றிய  ஜல்லிக்கட்டு இளைஞர்கள்

a-jallikattu-players-proclaimed-heroism-in-avaniyapuram-jallikattu

அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்போடு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு அசம்பாவிதமின்றி உற்சாகத்தோடு நடந்து முடிந்தது.

ஜல்லிக்கட்டு என்றாலே மதுரை மாவட்டம்தான் நினைவுக்கு வரும். உலக பிரசித்திப்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு முன்னோட்டமாக  நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் நடராஜன் கொடியசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். 

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ராகவன் குழுவினர் ஜல்லிக்கட்டு போட்டியை கண்ணும் கருத்துமாக கண்காணித்தனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் ஏற்கனவே அறிவித்தது போல, எந்தக் காளைக்கும் முதல் மரியாதை அளிக்கப்படவில்லை. காலை 8.15க்கு ஜல்லிக்கட்டு தொடங்கியதும் வாடிவாசல் வழியாக காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக சீறிப் பாய்ந்தன. களத்தில் தயாராக இருந்த காளையர், காளைகளை அடக்கி தமிழர்களின் வீரத்தை உலகிற்கு பறைசாற்றினர்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 500 காளைகளும், 550 வீரர்களும் களமிறங்கினர். மொத்தம் 8 சுற்றுகளாக போட்டி நடத்தப்பட்டது. சுற்றுக்கு 75 வீரர்கள் வீதம் களமிறக்கப்பட்டனர். வாடிவாசலிலிருந்து திமிறி வந்த காளைகளை, வீறுகொண்டு அடக்கி பரிசுகளை வெல்வதில் வீரர்கள் முனைப்புக்காட்டினர். ஆர்வமிகுதியால் விதிகளை மீறிய மாடுபிடி வீரர்களை கண்காணிப்புக்குழுவினர் எச்சரித்து, நடவடிக்கை எடுத்தனர். எந்த வகையிலும், விதிமீறல்கள் அனுமதிக்கப்படவில்லை.

13 சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு, மக்கள் வசதிக்காக எல்.சி.டி திரைகள் என அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நவீனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், முதன்முறையாக ஜல்லிக்கட்டில் களமிறங்கிய வீரர்களுக்கு இன்சூரன்ஸும் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு விழாவில் 9 காளைகளை அடக்கிய முத்துப்பட்டியைச் சேர்ந்த திருநாவுக்கரசு சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு, பரிசுகளும், சான்றிதழும் வழங்கப்பட்டன. 7 காளைகளை அடக்கிய அறிவேல் அமுதனுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. சோழவபாண்டி மற்றும் காவனூர் அஜித்குமார் தலா 6 காளைகளை அடக்கினர்.

களத்தில் சிறப்பாக விளையாடிய மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி கோயில்மாடு சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டது. காஞ்சிரங்குளத்தைச் சேர்ந்த பாண்டி என்பவரது காளையும் சிறந்த காளை சான்றிதழைப் பெற்றது. மேலும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவில் 2 காவலர்கள் ஒரு சிறுவன் உட்பட 47 பேர் காயமடைந்தனர். ஜல்லிக்கட்டு நடைபெற்றுக் கொண்டிருந்த போது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மணிகண்டன் மீது மாடு மோதியது. அதில் காயமடைந்த சிறுவனுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

மாவட்ட நிர்வாகம், தீயணைப்புத்துறை, காவல்துறை, தன்னார்வலர்கள், மக்கள் என அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்போடு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு அசம்பாவிதமின்றி உற்சாகத்தோடு நடந்து முடிந்தது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close