[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

சென்னையை உலுக்கிய ஆந்திரக் கொள்ளைக் கும்பல் : புயல்வேகம் எடுத்த காவல்துறை

andhra-robbery-gang-continuously-robber-in-chennai-police-arrested-that-gang

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற ஆந்திரக் கும்பலை சென்னைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

சென்னை திருவான்மியூரில் கடந்த சில மாதங்களாக வங்கியில் பணத்தை எடுத்து செல்லும் முதியவர்கள், வியாபாரிகள் ஆகியோரிடம் கவனத்தை திசை திருப்பி ஒரு கும்பல் பணத்தை திருடிச் சென்றது. 10 ரூபாய் நோட்டுக்களை சிதறவிட்டு கொள்ளையடிக்கும் அந்த ஆந்திரக் கும்பலை, தனிப்படை காவல்துறையினர் 7 நாட்களாக சுமார் 200க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்து பிடித்துள்ளனர். 

திருவான்மியூர், பூந்தமல்லி, அமைந்தரைக்கரை, காஞ்சிபுரம் உட்பட தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இந்தக் கும்பல் தங்களது கைவரிசையைக் காட்டியுள்ளது. அதுமட்டுமின்றி பெங்களூரு, மும்பை உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இவர்கள் கொள்ளையடித்துள்ளனர். திருவான்மியூரில் மட்டும் மூன்று இடங்களில் கவனத்தை திசை திருப்பியும், காரின் கண்ணாடியை உண்டிகோல் கொண்டு உடைத்தும் பணத்தை திருடியுள்ளனர். 

இதனையடுத்து அடையார் துணை ஆணையர் சசாங் சாய் உத்தரவில், திருவான்மியூர் உதவி ஆய்வாளர் மகாராஜன் தலைமையில் காவலர்கள் ராஜசேகரன், செந்தில் ஆகியோர் அடங்கிய தனிப்படை 7 நாட்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது, தனிப்படை காவல்துறையினர் கடந்த 7 நாட்களாக பெசன்ட் நகர் முதல் கேளம்பாக்கம் வரை சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள, சுமார் 200க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். 

தொடர் விசாரணையில் கேளம்பாக்கத்தில் ஒரு வீட்டில் கொள்ளைக் கும்பல் பதுங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிரடியாக அந்த வீட்டை சுற்றி வளைத்த காவல்துறையினர், ஆந்திராவைச் சேர்ந்த தனபால், கங்கா, திருப்பி, வெங்கடேஷ், ஹைதராபாத்தை சேர்ந்த ராஜீவ் மற்றும் சென்னையைச் சேர்ந்த சரவணன் ஆகியோரை சுற்றிவளைத்து கைது செய்தனர்.

அத்துடன் அவர்களிடமிருந்து 4 இருசக்கர வாகனங்கள், 30ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் கடந்த 4 மாதங்களாக வாடகைக்கு வீடு எடுத்து கேளம்பாக்கத்தில் தங்கியிருந்துள்ளனர். கைது செய்யப்பட்ட 6 பேர் மீதும் திருவான்மியூர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் தப்பிச்சென்ற  இந்தக் கொள்ளை கும்பலின் தலைவனை காவல் துறையினர் தேடி வருகின்றனர். 

இச்சம்பவத்தில் சிறப்பாக செயல்பட்டு 7 நாட்களில் ஆந்திரக் கொள்ளைக் கும்பலை கைது செய்த தனிப்படையை சேர்ந்த உதவி ஆய்வாளர் மகாராஜன், மற்றும் காவலர்கள் ராஜசேகரன், செந்தில் ஆகியோரை காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

(தகவல்கள் : சாந்த குமார், தாம்பரம் செய்தியாளர்)

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close